Published : 14 May 2017 01:15 PM
Last Updated : 14 May 2017 01:15 PM
கடந்த வார ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘கூட்டத்தில் மறைந்த தோழி’ என்ற தலைப்பில் வெளியான கன்னியாகுமரியைச் சேர்ந்த வாசகி ஐடா ஜோவலின் பள்ளி அனுபவத்தைப் படித்தபோது நானும் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றேன். அப்போது நான் பள்ளி இறுதி வகுப்பு (அந்தக் காலத்தில் பதினோராம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்தேன். இறுதி ஆண்டு என்பதால் பள்ளி முடியும் தறுவாயில் எங்கள் ஆசிரியர்களுடன் தேநீர் விருந்துக்கு நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்.
தோழிகள் அனைவரும் கட்டிப்பிடித்து அழுதோம். அதற்குக் காரணம் பெண்கள் பிரிந்தால் பிரிந்ததுதான். அதன் பின்னர் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வது அரிது. இன்றைய மொபைல், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற வசதிகள் அந்தக் காலத்தில் கிடையாது. எல்லாரும் பிரிவாற்றாமையில் ஆட்டோ கிராஃபில் வாழ்த்துகள், கையெழுத்து வேட்டைகள், முகவரி முஸ்தீபுகள் என்று அலைந்துவிட்டுக் கடைசியில் மீட்டிங்கில் வந்து உட்கார்ந்தோம்.
அப்போது என் தோழி (அவள்தான் எங்கள் லீடர்), “நான்தான் நன்றி சொல்லணுமாம். ரெண்டு வரி சொல்லேன். ஒண்ணும் தோணலை” என்றாள். நானும், “எத்தனையோ பணிகளுக்கிடையே நாங்கள் வழங்கிய சிறு தேநீர் விருந்துக்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”னு சொல்லு என்றேன். அவளோ பதட்டத்தில் ‘சிறுநீர் விருந்து’ என்று சொல்ல அதுவரை கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்த புடவைகள் கொல்லென சிரித்தன. அவள் அப்படி உளறியதால்தானே இன்றுவரை நினைவில் நிற்கிறது!
- தவமணி கோவிந்தராசன், சென்னை
நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT