Published : 26 Jan 2014 11:40 AM
Last Updated : 26 Jan 2014 11:40 AM

எளியவர்களின் உரிமைக்குரல்

நமக்குத் தொழில் சேவை, எளியோருக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக்கொண்டிருக்கிறார் ஆர். கீதா. உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கோரியும், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகளை வலியுறுத்தியும் போராடிவருகிறார். கட்டடத் தொழிலாளர்களுக்கான நலச்சங்கம், பெண்கள் போராட்டக் குழு, சர்ப்பம் இருளர் தொழிற் சங்கம் போன்றவற்றை ஒருங்கிணைத்துச் செயல்பட்டுவரும் அமைப்பு சாராத் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய செயல் தலைவியாகச் செயல்பட்டுவருகிறார் இவர்.

எப்போதும் போராட்டமும் களப்பணிகளும் நிறைந்திருக்கும் அவருடைய நாட்குறிப்பில் நமக்கும் அன்று நேரம் ஒதுக்கியிருந்தார். பொறுமையாக ஆனால் உறுதியாகத் தன் கருத்துக்களை முன் வைக்கிறார் கீதா.

“உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு இங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை. எங்களது தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகத்தான் உடலுழைப்புச் சட்டமே உருவாக்கப்பட்டது. அதற்குப் பல வருடங்கள் கழித்துதான் இவர்களுக்கான முதல் நல வாரியம் அமைக்கப்பட்டது. தொழில்வாரியான நலவாரியங்கள் தேவை என்ற கோரிக்கையைத் தொடந்து வலியுறுத்தினோம், வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் ஆட்சி மாற்றங்கள் வாரியங்களை மாற்றுகின்றனவே தவிர, அவை ஒழுங்காகச் செயல்படுகின்றனவா, அவை ஏற்படுத்தப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறுகிறதா என்பதைக் குறித்து யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. அமைக்கப்படும் நலவாரியங்கள் எல்லாமே தொழிற்சங்கங்களைப் புறக்கணிக்கிற அளவுக்குப் பிற்போக்காக இருக்கும்போது, இந்தத் தொழிலாளர்கள் தங்கள் தேவைகளை யாரிடம் முன்வைப்பார்கள்?” என்று கேட்கும் கீதா, வேலை நிமித்தம் நகர்ப்புறங்களுக்குக் குடியேறுகிறவர்களின் வாழ்க்கையைச் சூழ்ந்திருக்கும் சிக்கலையும் பதிவுசெய்கிறார்.

இடம்பெயரும் தொழிலாளர்கள்

“மூன்றில் ஒரு பங்கு மக்கள், வேலை தேடி நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்கிறார்கள். இப்படி குடிபெயரும் உடலுழைப்புத் தொழிலாளர்கள், தங்களை முறையாகப் பதிவுசெய்து கொள்ளக்கூட இங்கே வசதியில்லை. பணிப் பாதுகாப்பின்மை மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கிறது. நாங்கள் நடத்திய ஆய்வில் பணப்பயன் கேட்டு மாவட்டம்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தது. ஆனால் இன்றுவரை யாரையும் எந்தப் பயனும் சென்றடையவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

ஏழைகளின் வாழ்வை முன்னேற்றுவதற்காக என்ற அறிவிப்புடன் குடிசை மாற்று வாரியம் வந்தது, குடிசைப் பகுதிகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. குடிசையில் வாழ்கிறவர்களுக்கு நல்லது செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு கடலோர மக்களை நகருக்கு வெளியே குடியமர்த்துவது எந்த விதத்தில் நியாயம்? அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குவதுதான் வளர்ச்சித் திட்டமா?” என்கிற கீதா, பல்வேறு சமூகநல அமைப்புகளுடன் இணைந்து கொத்தடிமைகள் மீட்புப் பணியிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

தேவை முறையான மறுவாழ்வு

கல் குவாரிகளிலும், அரிசி ஆலைகளிலும் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு என்று நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம். இப்படி மீட்கப்படுகிறவர்கள் என்னவாகிறார்கள்? இதற்காகவும் போராடிவருகிறார் கீதா.

“மீட்கப்படுகிற கொத்தடிமைகளுக்கு முறைப்படுத்தப்பட்ட மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். அவர்களுக்கு நில உரிமை, வீடு கட்டுவதில் முன்னுரிமை ஆகியவற்றையும் வலியுறுத்தி வருகிறோம். ஊழல்கள் மலிந்திருக்கும் அரசமைப்பில், ‘நான் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டேன்’ என்று அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் வாங்கவே போதும் போதும் என்றாகிவிடுகிறது. படிப்பறிவில்லாத எளிய மக்களை வதைத்து, அவர்களை வறுமைக்கோட்டுக்கும் கீழே தள்ளுவதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும்.

கட்டிட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்படி இடம்பெயரும் தொழிலாளர் குடும்பத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லை. பணியிடத்தில் அதிக இறப்புகள் நிகழ்வதும் இங்கேதான் நடக்கிறது. அவை பற்றிய கட்டாய பதிவு தேவை என்பதை எங்கள் ‘கட்டிட தொழிலாளர்கள் பஞ்சாயத்து சங்கம்’ வலியுறுத்துகிறது.

பெண்ணுக்கு சம உரிமை

எல்லா இடங்களிலும் பெண்கள் ஆண்களைவிட இளைத்தவர்களாகவே நடத்தப்படுகிறார்கள். அதற்குக் கட்டிட வேலையும் விதிவிலக்கல்ல. பெண்கள் இங்கே சித்தாளாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் நாங்கள் சில பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களைக் கொத்தனார் வேலைக்குப் பழக்கியிருக்கிறோம். நகரங்களில் செயல்பட்டு வரும் பல தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், வீட்டு வேலை செய்யும் பெண்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களுக்குப் போதுமான ஊதியம் தராமல் ஏமாற்றிவருகின்றன. இதையும் நாங்கள் கையில் எடுத்துச் செயல்பட்டு வருகிறோம்” என்கிறார்.

சென்னையிலும் டெல்லியிலும் கல்வி பயின்ற இவர், பள்ளி நாட்களிலேயே மாணவ அமைப்புகளில் ஈடுபாட்டுடன் இருந்திருக்கிறார். இவர் டெல்லியில் படித்த போதே, கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பாலியல் வன்முறைகள் அரங்கேறியிருப்பதாகச் சொல்கிறார்.

“பெண்களுக்கு எந்தக் காலத்திலும் இங்கே பாதுகாப்பு இருந்ததில்லை. பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்திலும், பத்திரிகைத் துறையிலும் வேலை பார்க்கும் பெண்களுக்கே பணியிடப் பாதுகாப்பு இல்லாத நிலையில் மாநகராட்சியில் பணிபுரியும் பெண் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. இவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கக் குழு அமைக்க நாங்கள் வலியுறுத்தியதின் பேரில் இப்போது அந்தக் குழு செயபட்டு வருகிறது.

பெண்கள் வெறும் அங்கமாக மட்டுமே பார்க்கப்படுவதில் ஊடகங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. பெண்ணை, ஆண் அனுபவிக்கக்கூடிய ஒரு போகப்பொருளாக மட்டுமே காட்டும் போக்கு ஊடகங்களில் நிறைந்திருக்கிறது. மக்கள் எவ்வளவோ படித்திருந்தாலும் அந்தப் படிப்பு அவர்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடியதாக இல்லை” என்று சொல்லும் கீதா, தங்கள் அமைப்பு சார்பில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கருத்தரங்குகளும், விழிப்புணர்வுப் பேரணிகளும் நடத்தி வருகிறார்.

வழிகாட்டிய மேயர்

டெல்லியில் படித்துக் கொண்டிருந்தவர் ஏன் குடிசைப்பகுதி மக்களுக்காகப் போராட வேண்டும் என்று கேட்டால், சென்னையின் முன்னாள் மேயர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின் வழிகாட்டலும் அதற்கு ஒரு காரணம் என்கிறார்.

“பள்ளி நாட்களிலேயே என் போராட்டம் தொடங்கிவிட்டது. அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குப் பங்கு உண்டு. அவர்தான் குடிசைப்பகுதி மக்களைப் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் அந்தப் பகுதிகளுக்கே என்னை அழைத்துச் சென்று விளக்கினார். அது சார்ந்த சட்டத் தெளிவையும் அவர் ஏற்படுத்தினார். அப்போதுதான் எத்தனை மோசமான நிலையில் நாம் இருக்கிறோம் என்று புரிந்தது.

சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் கட்டிட தொழிலாளார்களுக்குப் பணி வாய்ப்புகள் குறைந்து, அவர்கள் மத்தியில் ஒரு எழுச்சி நிலவியது. யாரும் சொல்லாமல் யாருடைய தலைமையும் இல்லாமல் தாங்களாகவே அணி திரண்டு போராடினார்கள். அப்போதுதான் நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான ஒரு அமைப்பைத் தொடங்கினோம். அதுதான் எங்கள் போராட்டத்துக்கான முதல் விதை. எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தாயிற்று, சிறைவாசமும் அனுபவித்தாயிற்று. அப்போதும் போராட்டத்துக்கான தேவை குறையவே இல்லை என்பதுதான் வேதனை” என்று சொல்லிவிட்டு, மத்திய அரசின் கொள்கை முடிவு குறித்து எழுத வேண்டிய பணியை, விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார் கீதா.

குற்றங்களும் ஊழலும் மலிந்திருக்கும் சமூகத்தில் கீதா போன்றவர்கள்தான் நம்பிக்கையின் விதைகளை ஊன்றுகிறார்கள். அவை முளைத்தெழுவதில்தான் இருக்கிறது எளிய மக்களின் முன்னேற்றம்.

படங்கள்: ம. பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x