Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM
பிரம்ம கான சபாவின் ஆதரவில் அண்மையில் ஒரு நாள் மாலை ஆறு மணி முதல் ஏழரை மணி வரை நடைபெற்ற ஸ்வேதாவின் நடன நிகழ்ச்சிக்கு நாம் ஐந்து மணி ஐம்பது நிமிடங்களுக்கே ஆஜர் ஆகிவிட்டோம். ஏன் தெரியுமா? நடன மேதை ப்ரியதர்ஷினி கோவிந்த்தின் மாணவி என்பதால்தான். நிகழ்ச்சி சரியாக ஆறு மணிக்குத் துவங்கியது.
முதலில் ஸ்வேதா கண்ட ஜாதி த்ரிபுடை தாளத்தில் அமைந்த ஒரு மல்லாரியை எடுத்துக்கொண்டு நடனம் ஆடினார். அதன் பிறகு அப்பரின் தேவாரத்தில் இருந்து `குனித்த புருவமும்’ என்ற பாடலை எடுத்துக்கொண்டு, அதற்கேற்றாற்போல் அழகாக அபிநயம் செய்தார்.
பின்பு ‘மாதே மலயத்வஜ பாண்ட்ய சம்ஜாதே மாதங்க வதன குஹ’ என்ற பிரபலமான கமாஸ் ராக வர்ணத்தை எடுத்துகொண்டு மிக விஸ்தாரமாக நடனம் ஆடினார், அதில் மூத்த மிருதங்கக் கலைஞரான விஜய ராகவன் அமைத்துக் கொடுத்த ஜதிகளுக்கு ஏற்ப நிருத்தம் செய்தார்.
அதன் பிறகு கோபிகா லோலனான கிருஷ்ணனின் லீலைகளை விவரிக்கும் ஒரு ராகமாலிகை விருத்தத்தை எடுத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமாக அபிநயித்தார். அந்த ராகமலிகை விருத்ததில் மோஹனம், நீலாம்பரி, ஷண்முகபிரியா, ஹம்சானந்தி போன்ற ராகங்கள் இடம்பெற்றது கனஜோராக இருந்தது.
இவற்றிற்குப் பிறகு அவர் ஆடிய காபி ராக ஜாவளிதான் அன்றைய ஹைலைட். ‘சரசமுலாடி’ என்று துவங்கும் அந்த ஜாவளியில் `சமயமு காது’ என்ற இடத்தில் மிக நன்றாகத் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். பின்பு இசை மேதை டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் பெஹாக் ராக தில்லானாவை எடுத்துக்கொண்டு, அதற்கு நடனம் ஆடித் தனது நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பாலகிருஷ்ணனின் நட்டுவாங்கம், நந்தினியின் குரலிசை, சிவராமகிருஷ்ணனின் வயலின் மற்றும் சக்திவேல் முருகானந்தத்தின் மிருதங்கம் ஆகியவை நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தன. அருமையான செவ்வியல் நடனத்தைக் கண்டு களித்த திருப்தி நமக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT