Published : 11 Jun 2017 02:48 PM
Last Updated : 11 Jun 2017 02:48 PM
இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஸ்வாதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனைவியை கையில் வைத்துத் தாங்கும் கணவன், கைநிறைய சம்பளம். வீடு, கார், நகைகள் என ஸ்வாதியின் வாழ்க்கையில் எதற்கும் குறைவில்லை. “எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவுமே இல்லாததுபோல் இருக்கிறது. நான் செய்யும் எந்தக் காரியத்திலும் எனக்குத் திருப்தி ஏற்படுவதே இல்லை. மாறாகக் காரணமில்லாமல் என் மீதும் நான் செய்யும் வேலைகளின் மீதும் வண்டி வண்டியாக வெறுப்புதான் ஏற்படுகிறது” என்று என்னிடம் வந்திருந்தார் ஸ்வாதி.
முதல் கட்ட கவுன்சலிங்கில் ஸ்வாதி தன்னுடைய சிறு வயதிலிருந்தே அவருடைய அம்மாவின் வழிகாட்டுதலில் வளர்ந்தவர் என்று சொன்னார். அவர் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டு உள்அலங்காரப் பணி, வாடிக்கையாளர்களின் தேவையறிந்து எப்படிப்பட்ட புதுமைகளை இந்தப் பணியில் செய்திருக்கிறார், வாடிக்கையாளர் திருப்தியடைந்தாலும் தான் திருப்தியடையாமல் போன பல சந்தர்ப்பங்கள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
அம்மாவின் அறிவுரை
அடுத்தடுத்த கட்ட கவுன்சலிங்கில் ஸ்வாதி தன்னுடைய ஆறு, ஏழு வயதில் நடந்த விஷயங்களை என்னிடம் பேசினார். இதில் முக்கியமானது தன் அப்பா, அம்மாவைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது. ஸ்வாதியின் அப்பா சொகுசுப் பேர்வழியாகவும் ஊதாரித்தனமாக செலவு செய்பவராகவும் இருந்திருக்கிறார். அம்மாவின் சிக்கனத்தால்தான் குடும்பமே முன்னேறியிருக்கிறது. சிறுமி ஸ்வாதியிடம் அவருடைய அம்மா, “உன் அப்பாவைப் போல் நீ இருந்தால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது” என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார். சிறு வயதில் கேட்டு வளர்ந்த அந்த வார்த்தைகள் ஸ்வாதியின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.
மீண்ட சொர்க்கம்
ஸ்வாதியின் மாணவப் பருவம் தொடங்கி, அவரின் வளரிளம் பருவம், திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகும் அப்பாவைப் பின்பற்றி வாழ்வதா, அம்மா சொல்படி வாழ்வதா என்ற குழப்பமே அவரிடம் நீடித்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் ஸ்வாதியின் அம்மா புற்றுநோயால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஸ்வாதிக்கு அவருடைய அம்மா சிறு வயதில் சொன்ன விஷயங்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற தவிப்பு மனதில் ஆழமாக இருப்பது புரிந்தது.
“அப்பாவைப் பின்பற்றாதே என்று உங்கள் அம்மா சொன்னபோது உங்களின் மனநிலை எப்படி இருந்தது? அன்றைக்கு உங்களின் அம்மா இருந்த வாழ்க்கைச் சூழ்நிலையில் நிச்சயமாக அவர் சொன்ன விஷயமும், நீங்கள் அதை இதுவரை கடைப்பிடித்ததும் சரிதான். ஆனால் இப்போது அது உங்களுக்குச் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?” என்று நான் அவரிடம் கேட்டேன். நீண்ட நேர யோசனைக்குப் பின் ஸ்வாதி பேசினார்.
“உண்மைதான். அப்பாவைப் போல் இருக்காதே, முன்னேற மாட்டாய் என்று அம்மா என்னிடம் சொன்ன காலகட்டம் வேறு. அப்போதிருந்த வாழ்க்கைச் சூழ்நிலை, சேமிப்பதில் அக்கறையில்லாத என்னுடைய அப்பாவின் போக்கு, குடும்பத்தில் யாருடைய ஆதரவும் இல்லாத நிலை என்று இப்படிப் பல காரணங்கள் அன்றைக்கு என்னுடைய அம்மாவுக்கு இருந்திருக்கலாம். அதனால் என்னை எச்சரிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கிறார்.
அது அவரது வேதனை நிறைந்த தாம்பத்ய வாழ்க்கையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால், என் வாழ்க்கை வேறு. அவரது வலியை என்னுடைய வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டியதில்லை என்று இப்போது புரிகிறது. நான் செய்ய வேண்டியதெல்லாம், சிறுவயதிலிருந்து கடைப்பிடித்துவரும் காரணமில்லாத வெறுப்புக்கு விடை கொடுப்பதுதான். அதுதான் என் குழந்தைகளுக்கும் கணவருக்கும் மகிழ்ச்சி தரும்” என்றார் தெளிவுடன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் நிம்மதி. ஸ்வாதியின் முகத்தில் மெலிதாக ஒரு புன்னகை படர்ந்தது. “இந்த நொடியிலிருந்து நான் புத்தம் புது ஸ்வாதி” என்றார்.
அதன் பின் எளிய சந்தோஷங்கள் மீண்டன. ‘குழந்தைகளோடு சினிமாவுக்குப் போனேன்’. ‘ஐஸ்கிரீம் சாப்பிட்டேன், ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றெல்லாம் அவரிடமிருந்து மெசேஜ் வரும். நமக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றும் இவையெல்லாம் ஸ்வாதிக்கு மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கிறதென்றால், அவர் அத்தனை காலம் எவ்வளவு மனப் போராட்டத்துடன் வாழ்ந்திருப்பார்?
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்னும் நல்ல விஷயத்தை ஸ்வாதியிடம் பேசியதன் மூலம் நானும் கற்றுக்கொண்டேன்.
கட்டுரையாளர், மனநல ஆலோசகர்
தொடர்புக்கு: shobana.jayaraman@gmail.com
தொகுப்பு: பைரவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT