Published : 08 Jan 2017 03:39 PM
Last Updated : 08 Jan 2017 03:39 PM
பிரபல எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா, இந்திய வரலாற்றில் மூன்று பெண்கள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று மதிப்பிடுகிறார். அவர்களில் மூன்றாவது நபர், 19 - 20-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கைகுஸ்ரா ஜஹான். இவர் ‘பேகம்ஸ் ஆஃப் போபால்’ என்று புகழப்படும் போபால் அரசிகளின் வம்சத்தைச் சேர்ந்தவர். பெண் கல்வி, நிர்வாகச் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக இன்றளவும் புகழ்பெற்றுள்ள அவர், மக்களால் ‘சர்க்கார் அம்மா’ என்று அழைக்கப்பட்டார்.
சிறிய வயதில் பெரிய பதவி
போபால் அரச வம்சத்தின் ஷாஜஹான் பேகம் - முகம்மது கான் பகதூரின் மூத்த மகளாகப் பிறந்து உயிர் பிழைத்த ஒரே வாரிசு கைகுஸ்ரா ஜஹான். 1867-ல் அவருடைய தந்தை முகம்மது கான் பகதூர் இறக்க, பட்டத்து இளவரசியாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருடைய வயது 9. அவருக்கு ஆட்சிப் பொறுப்பாளராக பாட்டி சிகந்தர் பேகம் செயல்பட்டார். சிகந்தர் பேகத்தின் மறைவுக்குப் பிறகு கைகுஸ்ராவின் அம்மா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். தாயின் இறப்புக்குப் பிறகு கைகுஸ்ரா ஆட்சிக்கு வந்தார்.
கல்விக்கு முன்னுரிமை
தனது பாட்டி, தாயைப் போல தன் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கைகுஸ்ரா ஜஹான் மேற்கொண்டார். போபாலில் பல முக்கியக் கல்வி நிறுவனங் களைத் தோற்றுவித்தார். 1918-ல் நாட்டிலேயே முதன்முறையாகக் கட்டாயத் தொடக்கக் கல்வி போபால் ஆட்சியின் கீழ் அறிவிக்கப்பட்டது. அவரது அரசால் அது இலவசமாகவும் வழங்கப்பட்டது.
அரசுக் கல்வி, அதிலும் குறிப்பாகப் பெண் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தியவர் கைகுஸ்ரா ஜஹான். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பயிலகங்கள், பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக் கையையும் அவர் அதிகரித்தார். அகில இந்தியக் கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் கைகுஸ்ரா ஜஹான் செயல்பட்டுள்ளார்.
மேம்பட்ட சுகாதாரம்
இதற்கெல்லாம் மேலாக 1920-ல் இருந்து அவர் இறக்கும்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராக அவர் திகழ்ந்தார். இன்றைய நாள்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராகச் செயல்பட்ட ஒரே பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கைகுஸ்ரா ஜஹான்.
கைகுஸ்ரா ஜஹானின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு பொது சுகாதாரம். பரவலான தடுப்பூசி மருந்துத் திட்டம், அரசு நீர் விநியோகம், சுகாதாரம்-தூய்மைக்கான தரத்தை மேம்படுத்துதல் என மக்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டினார். சமூக நலனை மேம்படுத்தும் அடிப்படைத் துறைகளான கல்வி, சுகாதாரப் பணிகளுக்கு இப்படிப் பல்வேறு வழிகளில் அவரது ஆட்சியில் மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
நிகரற்ற நிர்வாகம்
கல்வி, சுகாதாரத் துறைகளைப் போலவே வரி சீர்திருத்தம், ராணுவம், காவல்துறை, நீதித் துறை, சிறைத் துறை, வேளாண்மை விரிவாக்கம், பாசன வசதிகள், பொதுப்பணித் துறை போன்றவற்றிலும் கைகுஸ்ரா ஜஹான் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். 1922-ல் சட்டப்பேரவை கவுன்சில், மேலவை ஆகியவற்றை உருவாக்கியதுடன், நகராட்சிகளுக்குத் தேர்தலையும் நடத்தியுள்ளார்.
1914-ல் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைவராக இவர் இருந்துள்ளார். கல்வி, சுகாதாரம், மற்ற துறைகள் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கைகுஸ்ரா ஜஹான் தனது ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். 1911-ல் லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் பதவியேற்பு நிகழ்வில் அவர் பங்கேற்றிருக்கிறார்.
மூவரசிகளின் ஆட்சி
1901 முதல் 1926 வரை 25 ஆண்டு காலத்துக்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக் கைகளுடன் கைகுஸ்ரா ஜஹான் ஆட்சியை நடத்தினார். 1926-ல் பதவியைத் துறந்து தனது கடைசி மகன் ஹமிதுல்லா கானிடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 71 வயதில் இறந்தார். ‘பேகம்ஸ் ஆஃப் போபால்’ என்றழைக்கப்படும் பாட்டி, அம்மா, மகள் கைகுஸ்ரா ஜஹானின் ஆட்சிக் காலத்தில் அனைத்து மதப் பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைகுஸ்ரா ஜஹானின் அரண்மனையான ‘சதார் மன்ஸி ’லில்தான் போபால் மாநகராட்சி தற்போது செயல்பட்டுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT