Published : 19 Jan 2014 03:57 PM
Last Updated : 19 Jan 2014 03:57 PM
கைவினைக் கலைகள் மீது காதல் தோன்றக் காரணமாக இருந்தது தான் படித்த பள்ளிதான் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரேணுகா சந்திரபாபு. எதையுமே மாத்தி யோசிப்பதும் இவருக்குக் கைவந்த கலை. ஒரு பொருளை வைத்து பொம்மைகள்தான் செய்ய முடியும் என்றால் அதில் ஏன் பூக்களைச் செய்யக்கூடாது என்று முயற்சித்துப் பார்த்து, வெற்றியும் பெறுகிறவர். ஐம்பது வயதைக் கடந்த பிறகும் தினம் தினம் ஏதாவது புதிய கலையைக் கற்றுக்கொண்டே இருக்கிறார் ரேணுகா.
“நான் படித்த பள்ளியில் கைவினைக் கலையும் ஒரு பாடம். மணிகள் கோர்ப்பது, சணலைப் பின்னுவது என சின்ன சின்ன கலைகளைக் கற்றுக் கொண்டேன். பள்ளிப் படிப்பு முடிந்தது. ஆனால் கலைகளைப் படிப்பது மட்டும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் கைவினைக் கலைகள் மீதான என் ஆர்வம் குறையவே இல்லை. இரண்டு பெண்களையும் திருமணம் செய்துகொடுத்து பேரன் பேத்திகளையும் பார்த்துவிட்டேன். இப்போதும் சில நிமிடங்கள் கிடைத்தால் போதும், மணிகளும் நூலுமாக உட்கார்ந்து விடுவேன். “வீட்டுவேலையே உனக்கு நிறைய இருக்கு. கிடைக்கிற நேரத்தில் ஓய்வு எடுத்தால் என்ன?” என என் கணவர் சொல்வார். கலைகளோடு ஐக்கியமாவதே ஒருவித ஓய்வுதானே” என்கிறார் ரேணுகா.
குந்தன் கற்கள், மணிகளை வைத்து பலரும் ஃபேஷன் நகைகள் செய்வார்கள். இவரோ அவற்றைக் கடவுள் படங்களை அலங்கரிக்கப் பயன்படுத்துகிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் சுடுமண் சிற்பத்தை வாங்கி வந்து வீட்டில் மாட்டியிருக்கிறார். அது யார் கண்ணிலும் படவே இல்லையாம். உடனே அதில் இருவேறு நிறங்களில் வண்ணமடித்து, சின்ன சின்ன வேலைகள் செய்து இவர் மாட்ட, வீட்டுக்கு வருகிறவர்கள் அனைவருமே அந்தச் சிற்பம் குறித்து விசாரித்து இருக்கிறார்கள்.
“இதுதான் நான் கற்றுக்கொண்ட கலையின் வெற்றி. எதையுமே வித்தியாசமாக அணுகும்போது அதற்கு வரவேற்பு இருக்கத்தானே செய்யும்? பொதுவாக ஸ்டாக்கிங் துணியில் மலர்களைத்தான் பெரும்பாலும் செய்வார்கள். அவற்றில் பொம்மைகள் செய்தால் என்ன என்று தோன்றியது. அதனால் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் பொம்மைகளைச் செய்யத் துவங்கினேன். அவற்றைக் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்தேன். பொம்மைகளைப் பார்த்ததும் குழந்தைகளின் முகத்தில் பரவிய மலர்ச்சியே எனக்குக் கிடைத்த அங்கீகாரம். இதுபோன்ற பொம்மைகளைச் செய்துதரச் சொல்லி கடைகளிடம் இருந்து ஆர்டர் வந்திருக்கிறது. அதற்காகப் புதுப்புது பொம்மைகள் தயாரிப்பில் இருக்கிறேன். அடுத்ததாக சாட்டின் ரிப்பனை வைத்து எம்ப்ராய்டரி செய்ய முயற்சித்தும் வருகிறேன்” என்று சொல்லும் ரேணுகாவின் படைப்புகளில் நாற்பது வருட அனுபவம் பளிச்சிடுகிறது.
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம். penindru@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT