Published : 18 Sep 2016 11:59 AM
Last Updated : 18 Sep 2016 11:59 AM
‘தி இந்து’ நாளிதழின் இணைப்பான ‘பெண் இன்று’ பதினாறு பக்கங்களுடன் புதிய ‘டேப்லாய்டு’ வடிவத்தைப் பெற்றிருக்கிறது. அதன் அறிமுக விழா சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரியில் கடந்த 9-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
‘ரின் கேரியர் ரெடி அகாடமி’யுடன் இணைந்து ‘தி இந்து - பெண் இன்று’ ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் ‘ஆரோக்கியமான மாற்றம், அசத்தலான முன்னேற்றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தில் மனவள மேம்பாட்டு ஆலோசகர் டாக்டர் ஆர். கார்த்திகேயன், மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி, நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் ஜீவசுந்தரி, எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி பேராசியர் கவிதா உள்ளிட்டோர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ‘பெண் இன்று’ வாசகிகள் கருத்தரங்கம் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தாகவும் பாராட்டினார்கள்.
‘பெண் இன்று’ இணைப்பு புதுப்பொலிவுடன் புதுவடிவம் பெற்றுப் பதினாறு பக்கங்களில் வெளிவருவது பெண்களுக்கான வெளியை விசாலமாவதையும், ‘பெண்மொழி’யைக் கொண்டாடுவதையும் உறுதிபடுத்துவதாக விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தார்கள்.
வந்து வாழ்த்திய சென்னை வாசகிகள்
‘பெண் இன்று’வின் சாதனை பெண்களைப் பற்றி இடம்பெறும் கட்டுரைகள் எங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கின்றன. பெண் களுக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றித் தெரிவிக்கும் ஒரு பகுதியை வெளியிட்டால் எங்களைப் போன்ற வாசகிகளுக்குக் கூடுதல் உதவியாக இருக்கும். - ஃபரீதா ரஃபீக்
நான் ஓர் ஓவிய ஆசிரியர். ‘பெண் இன்று’ இணைப்பில் வெளிவரும் கைவினைப் பகுதியான ‘போகிற போக்கில்’ தலைப்பில் இடம்பெறும் கட்டுரைகள் எனக்குப் பெரிய அளவில் உதவி செய்கின்றன. எங்களைப் போன்ற வாசகிகளுக்குத் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தை இந்தக் கட்டுரைகள் வழங்குகின்றன. ‘பெண் இன்று’ புதிய வடிவத்தில் வெளிவருவது மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது. - பி. ஹேமமாலினி
பிரச்சினைகளைக் கண்டு பயப்படக்கூடாது
நீதிபதி பஷீர் அஹமது சயீது, மகளிர் கல்லூரியின் தலைவர் மூஸா ரஸா
மூன்றே ஆண்டுகளில் ‘தி இந்து’ நாளிதழுக்குப் பரந்துபட்ட வாசகர் வட்டம் கிடைத்திருப்பது மிகப் பெரிய சாதனை. இன்னும் 3 ஆண்டுகளில் ‘தி இந்து’தமிழின் ‘நம்பர் ஒன்’ நாளிதழாக உருவெடுக்கும். மற்ற ஊடகங்கள் பரபரப்புக்காகச் செய்திகளை வெளியிடும் சூழலில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தகவல்களை அளித்தும், அறிவை மேம்படுத்தியும் வந்தது. அதன் அடியொற்றியே ‘தி இந்து’ தமிழும் நடக்கிறது. இந்தச் சூழலில், ‘பெண் இன்று’ இணைப்பிதழ் டேப்லாய்டு வடிவில் வெளிவரவிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித் துள்ளன. சுவாதியில் ஆரம்பித்து பல இளம்பெண்கள் அண்மைக் காலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் தங்களுக்கு விருப்பமற்ற நபர்களை ஒதுக்குவதற்குக்கூட உரிமை இல்லாதவர்களாக உள்ளனர். அப்படியே வேண்டாம் என்றால் ஆசிட் வீசுவது, கொலை செய்வது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடுகின்றனர். ஓர் ஆண் மீது எந்தப் பெண்ணும் ஆசிட் வீசுவது இல்லை.
நாகரிகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில்கூட வரதட்சணை கொடுமை உள்ளது. பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்முறைகளும் நிகழ்த்தப்படுகின்றன. பணியிடம், வீடு போன்றவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். விதவை இந்துப் பெண்கள், மூன்று முறை தலாக் செய்யும் முறையால் இஸ்லாமியப் பெண்கள் என அனைத்துத் தரப்பிலும் பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மேற்கண்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை ‘பெண் இன்று’ அளிக்க வேண்டும். பெண்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு ‘பெண் இன்று’ தனது பங்களிப்பைச் சிறந்த முறையில் அளிக்கும் என்று நம்புகிறேன்.
வரலாற்றைப் படித்தால் சாதிக்கலாம்
வசந்த் அண்ட் கோ குழுமத் தலைவர் ஹெச்.வசந்தகுமார்
வரலாற்றில் வேலுநாச்சியார், அவ்வையார் என பெண் சாதனையாளர்கள் பலர் உள்ளனர். பெண்கள் செய்யும் சாதனை நீடித்த புகழைப் பெற வேண்டுமானால், வரலாற்றைப் படிக்க வேண்டும். வரலாற்றைப் படிக்கும் போது மற்றவர்களின் அனுபவங்கள் நமது வெற்றிக்குப் பெரிதும் உதவும். பெண்களைச் சாதனையாளர்களாக்குவதற்கான விஷயங்களை ‘பெண் இன்று’ கொண்டு சேர்க்க வேண்டும்.
தன்னம்பிக்கையுடன் செயல்படுவோம்!
மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் கார்த்திகேயன்
உலக அளவில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக ஆறு சதவீதம் அளவில் பெண்கள் உள்ளனர். வீட்டிலும் வெளியிலும் அதிகம் உழைப்பவர்கள் பெண்கள்தான். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் பல கார்ப்பரேட் நிறுவனங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வங்கித் துறையில் 30 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். ஆண்களைவிடக் கல்வியறிவில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். நீதிபதி பஷீர் அஹமது சயீது கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மேம்பாட்டுப் பயிற்சியினை ‘ஐஎஸ்டிடி’ (Indian Society for Training and Development) அமைப்பு மூலம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவிருக்கிறேன். இந்த விழா மேடையில் இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்களிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களைத் தாழ்வாக நினைக்க வைக்கும் எந்த விஷயங்களையும் யார் சொன்னாலும் நம்பாதீர்கள். நீங்கள் என்ன ஆக வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நான்கு சுவர்களுக்கு வெளியேதான் உலகம்
எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி
இன்றைக்குப் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருகிவிட்டன. ஆனால், பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடை யாகவும், அவர்களை முடக்கும் விதமாகவும் பல்வேறு செயல்கள் அரங்கேறி வருகின்றன. அதனால் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். விமர்சனங்கள் வந்தால் அதைப் பொருட்படுத்தாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகப் பெண்கள் திகழ வேண்டும். அறிவியல் , உளவியல் ரீதியாகப் பெண்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண் என்றால் நான்கு சுவற்றுக்குள் இருப்பவள் இல்லை என்பதை உலகுக்குப் புரியவைக்க வேண்டும்.
பெண்களுக்கான ஒரு வெளி அவசியம்
கல்லூரி முதல்வர் ஷனாஸ் அஹமது
பெண்ணுக்குப் பொதுவாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி சுயமரியாதையுடன் இயங்கும் நிலை இன்றைய சமூகத்தில் இல்லை. இன்றைக்கு முக்கியமாகப் பெண்ணுக்கு ஒரு ‘வெளி’ (Space) தேவைப்படுகிறது. கல்வி, அறிவியல், பொருளாதாரம், மருத்துவம், அரசியல், பொழுதுபோக்கு, ஊடகம், சட்டம், விளையாட்டு, வியாபாரம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு போன்ற எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு வெளி தேவைப்படுகிறது. இன்றைய அதிநவீன தொழில்நுட்ப உலகத்தில் மிக நூதனமான முறையில் பாதிப்புக்கு உட்படுபவளாகப் பெண் இருக்கிறாள். தனக்கு ஏற்படுகிற பாதிப்புகளை அவள் உணர்ந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், அதை வெளிப்படுத்தவும், அதற்குத் தீர்வு காணவும் அவளுக்கு ஒரு ‘வெளி’ தேவைப்படுகிறது. அந்த வெளியை ‘பெண் இன்று’ இணைப்பிதழ் ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன்.
சுயமரியாதையைக் காக்கும் ‘பெண் இன்று’
தமிழ்த் துறைப் பேராசிரியர் பர்வீன் சுல்தானா
பெண் பற்றிய சிக்கல் எங்கே வந்தாலும் அது பெண் பற்றிய தனிப்பட்ட சிக்கல் கிடையாது. அது ஒரு சமூகப் பிரச்சினை.
இந்த உலகம் எதையெல்லாம் சொல்லி நம்மைப் பயமுறுத்துகிறதோ அந்த அச்சத்தில் இருந்து விடுபட சில எழுத்துகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அந்த எழுத்துகளைத் தரத் தயாராக இருக்கிற தி இந்து குழுமத்துக்கு பெண் சமூகத்தின் சார்பில் நன்றி. பெண் பற்றிய எந்தவொரு இழிவான சொல் வந்தாலும் அதற்காக உடனே சிலிர்த்துக் கொண்டு குரல் எழுப்புகின்ற ஆற்றல் ஒரு பெண்ணுக்கு இருக்கிறபோதுதான், அவள் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணம் செய்ய முடியும். ‘பெண் இன்று’ இணைப்பிதழ் அழகாக இரு என்று சொல்லித் தரவில்லை. ஆரோக்கியமாக இரு என்று சொல்லித் தருகிறது. பெண்ணின் சுயமரியாதையை எப்போதும் ‘பெண் இன்று’ காப்பாற்றும் என நம்புகிறேன்.
மன அழுத்தத்தை விரட்டுவோம்
மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி
வீடுகளில் தொடங்கி, பணிபுரியும் இடம், சமூகம் வரை எல்லா இடங்களிலும் பெண்ணைப் பிரச்சினைகள் தொடர்கின்றன. ஆண், பெண் இருவருக்கும் மன அழுத்தம் இருந்தாலும், பெண்களை அது அதிகமாகப் பாதிக்கிறது. எந்தப் பிரச்சினை வந்தாலும், இதுவும் கடந்து போகும் என்ற தாரக மந்திரத்தை மனதில் சொல்லிக்கொண்டே இருந்தால் மனஅழுத்தம் வரவே வராது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT