Last Updated : 23 Mar, 2014 12:00 AM

 

Published : 23 Mar 2014 12:00 AM
Last Updated : 23 Mar 2014 12:00 AM

தயக்கம் சொல்லும் நிஜங்கள்

இந்தியாவில் இன்னும் பத்தில் நான்கு பேர், யாரைத் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுக்க இயலாத சூழலில் உள்ளனர். ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்குக் கூட 80 சதவீதம் பெண்கள் கணவரிடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை உள்ளது. பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் ஏதோ ஒரு வகையில் முகத்தை மறைத்துதான் வெளியே வர வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் மணப் பெண்கள் மாப்பிள்ளை வீட்டாருக்குச் சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் வரதட்சணை தருகிறார்கள்.

பொருளாதார ஆய்வுக்கான தேசியக் கழகமான என்சிஏஇஆர் மற்றும் ஐஎச்டிஎஸ் ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்கள்தான் இவை. இந்தக் கருத்துக்கணிப்பில் ஒவ்வொரு குடும்பத்தினரின் வருவாய், செலவு, கல்வி, ஆரோக்கிய நிலை ஆகிய விவரங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சாதி, பாலினம் மற்றும் சமயப் பின்னணி விவரங்களுக்கும் கவனம் தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 42 ஆயிரம் குடும்பங்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளதை இந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டதில் 48 சதவீதம் பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் புரிந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

2004-05 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் இவர்கள் 60 சதவீதமாக இருந்தனர். அத்துடன் 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களிடம் குழந்தைகள் குறித்து கணக்கெடுத்ததில், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களின் கருவளம் முந்தைய காலத்தை விட, குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் வடக்கு மாநிலங்களை விட, தெற்கு மாநிலங்களில் நெருங்கிய உறவில் திருமணம் செய்யும் வழக்கம் அதிகம் காணப்படுகிறது. ஆந்திராவிலும் கர்நாடக மாநிலத்திலும் 20 சதவீதத்திற்கும் மேல் உறவினர்களைத் திருமணம் செய்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

கல்வி, வருவாய், தன்னிறைவு காரணமாக பெண்கள் தங்கள் திருமணத்தைத் தீர்மானிக்கும் சக்தியை அடைந்திருந்தாலும் 41 சதவீதம் பெண்களுக்கு இன்னும் அந்த உரிமை இல்லை. 18 சதவீதம் பெண்களுக்கே திருமணத்திற்கு முன்பே கணவரைப் பற்றித் தெரிந்திருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பெண்களின் நிலை தென் மாநிலங்களில் ஓரளவு உயர்ந்துள்ளது.

அதிக விலையுள்ள ஒரு பொருளைக் குடும்பத்திற்காக வாங்குவதில் 10 சதவீதம் பெண்களுக்கே முடிவெடுக்கும் உரிமை உள்ளது. 20 சதவீதம் பெண்களின் பெயர்களே வீட்டுரிமைப் பத்திரங்களில் இடம்பெற்றுள்ளன. 50 சதவீதத்துக்கும் மேலான பெண்கள், குடும்பத்தில் ஆண்களிடம் அடிபடுவதை இயல்பான ஒன்றாகவே கருதுகின்றனர்.

திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் சார்பாகக் கொடுக்கப்படும் வரதட்சணை முறை உயர்சாதி இந்துக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. கிராமங்களில் திருமணத்திற்கு மணப்பெண் வீட்டார் சார்பில் ஒரு லட்ச ரூபாய் சராசரியாகச் செலவழிக்கின்றனர். சிறு நகரங்களில் 1.7 லட்ச ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x