Last Updated : 01 Jan, 2017 01:19 PM

 

Published : 01 Jan 2017 01:19 PM
Last Updated : 01 Jan 2017 01:19 PM

சட்டமே துணை: அத்துமீறும் மேலதிகாரியை என்ன செய்வது?

மீனா மாநிறம் கொண்டவர். அதில் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆனால் கல்லூரிப் படிப்பு முடிக்கும் முன்பே அவரது எண்ணம் மாறிவிட்டது. நல்ல மதிப்பெண்கள், மாணவர் பிரதிநிதி, சிறந்த மாணவிக்கான பரிசு போன்றவை நிறம் பற்றிய எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

அலுவலகம் சென்ற முதல் நாள் மீனாவுக்கு நல்ல அனுபவமாக இருந்தது. மேலதிகாரி நாதன், “பேருக்கேத்த மாதிரி உன் கண்ணும் மீனைப் போல இருக்கு. தோற்றத்தைப் போலவே உன் பணியும் சிறப்பா இருக்கட்டும்” என்று வாழ்த்தியபோது, மீனாவுக்குக் கொஞ்சம் பெருமையாக இருந்தது.

மீனாவின் சீனியர் சுலோச்சனா ஒரு மாதம் விடுமுறையில் சென்றார். மீனா வேலை விஷயமாக நாதன் அறைக்குச் செல்வது அதிகமானது. திங்கள் காலை அந்த வாரப் பணிகளின் இலக்கு முடிவு செய்யும் கூட்டத்தில் சுலோச்சனாவுக்குப் பதில் பங்கேற்பதற்காக மீனாவை ஒருமணி நேரம் முன்னதாக வரும்படி சொல்லப்பட்டது. அதே போல வெள்ளிக்கிழமை மாலை ஒருமணி நேரம் பிந்திச் செல்லும்படியும் பணிக்கப்பட்டார்.

தன் பொறுப்பு உயருவதிலும், தன் சீனியர் செய்த பணிகளை இன்னொரு சீனியருக்குத் தராமல் தனக்குத் தரப்பட்டதிலும் மீனாவுக்குப் பெருமையாக இருந்தது. இயல்பிலேயே விஷயங்களைப் புரிந்துகொள்வதிலும் விரைந்து பணிகளை முடிப்பதிலும் மீனா சிறப்பாகச் செயல்பட்டார்.

அன்று வேலையை முடிக்கும் முன்பே நாதன் அழைத்தார். “சார், இன்னும் முப்பது நிமிஷத்துல முடிச்சுடுவேன்” என்றார் மீனா.

“அதெல்லாம் இருக்கட்டும் உட்கார். உன் குடும்பத்தைப் பற்றிச் சொல். அம்மா மட்டும்தான் இருக்காங்களா? இப்போ காலம் மாறிப்போச்சு. தாங்களாகவே முடிவு எடுக்குற அளவுக்குப் பெண்கள் முன்னேறிட்டாங்க. ஆபீஸுக்கு ரொம்ப நீட்டா டிரெஸ் பண்ணிக்கிட்டு வர்ற உன்னைப் பார்த்து மற்றப் பெண்களும் கத்துக்கணும். சரி, சீக்கிரம் வேலையை முடி. நானே உன்னை வீட்டில் விட்டுடறேன்” என்று மீனாவை அனுப்பிவைத்தார். காரில் போகும் போது பொதுவாகச் சில விஷயங்களைப் பேசிக்கொண்டுவந்தார். அவள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டுச் சென்றார்.

அடுத்த வாரம் எல்லோரும் கிளம்பிய பிறகு, காபி குடித்துவிட்டு வேலையைத் தொடரும்படி மீனாவைத் தன் அறைக்கு அழைத்தார் நாதன். காபி குடிக்கும்போது, தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தினமும் அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்துவிட்டு அலுவலகம் வருவதாகவும் சொன்னார். மீனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் கேட்டபோது, புற்றுநோய் என்றார். பரிதாபப்பட்டார் மீனா. அடுத்தடுத்த சந்திப்புகளில் இன்னும் நெருக்கமாகப் பேச ஆரம்பித்தார் நாதன்.

அன்று நாதன் அறைக்கு ஃபைல்களை வைக்கச் சென்றபோது, அவர் இருக்கையில் இல்லை. பின்புறம் இருந்து திடீரென்று மீனாவை இறுக்கமாகக் கட்டி அணைத்தார் நாதன். மீனா கோபத்துடன் விலகினார்.

“மீனா, தப்பா நினைக்காதே. என்னையறியாமல் செய்துட்டேன். ரியலி சாரி” என்று நாதன் சொல்லிக்கொண்டிருந்தபோதே இருக்கைக்கு ஓடிவந்துவிட்டார் மீனா. என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேகமாக ஆட்டோ பிடித்து வீடுவந்து சேர்ந்தார். நடந்த விஷயங்களைத் தன் தோழி மாலினியிடம் பகிர்ந்துகொண்டார்.

“உன் டிரெஸ்ஸைப் பத்தியும் அவரோட மனைவியைப் பத்தியும் பேசினபோதே நீ எச்சரிக்கையாக இருந்திருக்கணும் மீனா. வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் இது. உன் கண்ணைப் புகழ்ந்து பேசியது, உன் டிரெஸ்ஸைப் பத்தி பாராட்டினது, மனைவிக்கு கேன்சர்னு சொன்னது, உன்னை அதிக நேரம் அலுவலகத்தில் தனியாக இருக்கவைத்தது எல்லாமே பாலியல் அழைப்புக்குப் போடப்பட்ட அஸ்திவாரம்தான். உடனடியா உன் மேலதிகாரிகிட்டே புகார் செய்” என்றார் மாலினி.

“இதைப் பாலியல் அத்துமீறல்னு எடுத்துப்பாங்களா மாலினி?”

“ உடல் ரீதியான தொடுதல், அதற்கான முயற்சிகள், பாலியல் ரீதியான கோரிக்கைள், பாலியல் ரீதியான பேச்சுகள், குறிப்புகள், பாலியல் ரீதியான படங்களைக் காட்டுதல்… இவை தவிர, பாலியல் பொருள்படக்கூடிய அனைத்து விதமான உடல்ரீதியான, வார்த்தைகள் ரீதியான, வார்த்தைகளற்ற செயல்பாடு எதுவானாலும் பாலியல் துன்புறுத்தல்தான்” என்று மாலினி விளக்கமாகச் சொன்னதும் மீனாவுக்குத் தெம்பு வந்தது.

“நான் யாரிடமும் இது பற்றி எதுவுமே சொல்லவில்லையே… சாட்சி இல்லைன்னு சொல்லி, என் மீதே குற்றத்தைத் திருப்பிடு வாங்களோ? என் வேலை போய்விடுமா?”

“தப்பு நடந்த பிறகு உடனே புகார் கொடுத்துடணும். இதில் உன் மீது தவறில்லை. இதற்கு மேலும் புகார் கொடுக்காமல் இருந்தால்தான் தவறு. இந்தச் செயல் நாதன் தெரியாமல் செய்தது அல்ல, நீ பயப்படாதே. பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு செய்தால், புகார் கொடுக்க விசாகா கமிட்டி இருக்கு. உங்க ஆபீஸிலும் இருக்கணும். அதனால அதில் புகார் கொடு. உனக்குச் சாதகமாகத்தான் எல்லாம் நடக்கும்” என்று தைரியம் கொடுத்தார் மாலினி.

மறுநாள் புகார் எழுதி, நாதனின் மேலதிகாரியைச் சந்தித்தார் மீனா. அதற்குப் பிறகு எந்தச் சிக்கலும் இல்லாமல் தன் பணியைத் தொடர்ந்தார் மீனா.

நாதனுக்கு என்ன ஆச்சு?

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x