Published : 28 May 2017 12:30 PM
Last Updated : 28 May 2017 12:30 PM
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பெண்களின் போராட்டம் மிகத் தீவிரமாகிவருகிறது. மதுக்கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள். மது பாட்டில்களைத் தெருவில் வீசுகிறார்கள். கைது என்று மிரட்டும் காவலர்களிடம் கம்பீரமாகக் குரல் எழுப்பி எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். தொலைக்காட்சிகளுக்குத் தெளிவாகப் பேட்டி கொடுக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்த பெண்களின் கோபம் தற்போது போராட்ட வடிவில் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. இதன் விளைவாகக் கணிசமான மதுபானக் கடைகள் மூடப்பட்டுவருவது பெண்களின் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி!
டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான இந்தச் சங்கிலித் தொடர் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள் கொத்தமங்கலம் கிராமப் பெண்கள். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் விவசாயத்துக்கும் தண்ணீருக்கும் பஞ்சமில்லை. கல்வியிலும் பெருமைப்படக்கூடிய அளவுக்கு முன்னேற்றம். இந்தச் சிறப்புகளை எல்லாம் இரண்டு மதுபானக்கடைகள் அழிக்க ஆரம்பித்தன. மது அருந்துவோரால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அதனால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர்வரை மனு கொடுத்தனர் கிராம மக்கள். போராட்டம் நடத்தினர். எதிலும் தீர்வு எட்டப்படவில்லை.
பொறுத்துப் பார்த்த பெண்கள் ஒருநாள் பொங்கியெழுந்துவிட்டனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடினார்கள். கைக்குக் கிடைத்த கட்டைகளை எடுத்துக்கொண்டு மதுக் கடைகளுக்குள் நுழைந்து, அடித்து நொறுக்கினர். அன்றோடு கடைகள் மூடப்பட்டன!
கொத்தமங்கலம் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான இந்திராணி, “இருபதாயிரம் பேர் வசிக்கும் கொத்தமங்கலம் அமைதியான ஊர். காய்கறி விளைச்சல்தான் முக்கியமான தொழில். படிப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்ட நாங்கள், இந்த ஊரில்
இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளைக் கொண்டுவந்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் பள்ளிகளில் படித்த 14 பேர் மருத்துவர்களாகி இருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தரம் வாய்ந்த பள்ளிகள் இங்கே அமைவதற்கு எங்கள் ஊரின் பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அப்படிப்பட்ட ஊரில் இரண்டு மதுபானக் கடைகள் வந்தன. பெரியவர்களிடம் இருந்த மதுப் பழக்கம் சின்னஞ் சிறுசுகள்வரை எளிதில் தொற்றிக் கொண்டது. உடலுழைப்பு குறைந்தது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள்கூட அடகுக் கடைக்குப் போயின. பல குடும்பங்களில் எந்நேரமும் கலவரம். இளம் வயதில் பெண்கள் கணவரை இழந்தனர். சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
மதுக்கடைகளால் மாணவிகள் நிம்மதியாகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. நாள் முழுக்க வியர்வை சிந்தி உழைத்த மனைவியின் கூலியைப் பறித்துக்கொண்டு கணவர் குடிப்பது, குடித்துவிட்டு குடும்பத்தைச் சீரழிப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை” என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் பேசுகிறார்.
இது தொடர்பாக ஆட்சியர், கலால் துறை, வட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலர் என்று பலரிடமும் பெண்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பலன் இல்லை. ‘மதுக்கடைகளை மூடாவிட்டால் எங்கள் தாலிகளை அறுத்தெறிந்துவிட்டுச் செல்கிறோம்’ என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர். அதிலும் வழி பிறக்கவில்லை. மதுவை எதிர்க்க ஆரம்பித்ததும் சொந்த ஊரிலேயே பெண்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
“போன மாதம் ஒரு கொடுமை நடந்தது. இரண்டு பெண் பிள்ளைகளை அடமானமாக வைத்துக்கொண்டு மது கொடுக்குமாறு ஒரு தந்தை கேட்டிருக்கிறார். இந்த அவமானத்தோடு வாழ்வதைவிட நானும் என் பிள்ளைகளும் செத்துடுறோம்னு கதறினார் அந்தத் தாய். ஒரு குடும்பத்தில் ஐந்து மகள்களில் நான்கு பேரின் கணவர்கள் குடிக்கு அடிமையாகி இறந்து போனார்கள். இப்படிப் பெண்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு அளவே இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் அமைதியாக இருந்தால் ஊரில் எந்தப் பெண்ணும் வாழ முடியாது என்ற நிலையில் மதுவுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தினேன். பெண்கள் அமோக ஆதரவு அளித்தார்கள்” என்கிறார் இந்திராணி. பெண்களின் ஆதரவோடு கடந்த மே 20-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி அறவழியில் போராட்டத்தை ஆரம்பித்தார்.
மதுவால் பாதிப்புக்குள்ளான இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்தார்கள். மனு கொடுத்தபோது ஊருக்கு வராத அதிகாரிகள் அன்று வந்தார்கள். பெண்களைச் சமாதானம் செய்தார்கள். 15 நாட்களுக்குள் கடைகளை அகற்றுவதாக உறுதி அளித்தார்கள். ஆனால், கலால் உதவி ஆணையரும் வட்டாட்சியரும் அதை எழுத்துபூர்வமாகத் தர மறுத்து அங்கிருந்து வெளியேறினர்.
“எழுதிக் கொடுங்கள் என்று வட்டாட்சியரின் காலில் விழுந்து மன்றாடினேன். கெஞ்சினேன். எதற்கும் சம்மதிக்கவில்லை. பெண்களின் நிலையைப் பெண் அதிகாரிகளே புரிந்துகொள்ளாதது தாங்க முடியாத வலியைத் தந்தது. பிறகுதான் பெண்கள் அனைவரும் வெகுண்டெழுந்து கடைகளை அடித்து நொறுக்கினோம். மதுக்கூடங்களைத் தகர்த்தோம். மீண்டும் அதே இடத்தில் அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்தோம். எழுத்து பூர்வமாகக் கொடுக்க மறுத்த அதிகாரிகளில் ஒருவர், எங்களிடம் வந்து மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெண்களின் ஒற்றுமையான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினோம். அந்த இடத்தில் மறைமுகமாக மது விற்றாலும் அடித்து நொறுக்குவதற்குப் பத்துப் பெண்கள் கொண்ட குழுவை அமைத்து, காவல்காத்துவருகிறோம். கால் வயிறு சாப்பிட்டாலும் நிம்மதியாக வாழ வேண்டும்” என்கிறார் இந்திராணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT