Published : 19 Mar 2017 10:44 AM
Last Updated : 19 Mar 2017 10:44 AM

கேளாய் பெண்ணே: யாருக்கு எழுதலாம் தானப் பத்திரம்?

என் மகளின் மூக்கில் கரும்புள்ளிகள் இருக்கின்றன. மூக்கு எண்ணெய்ப் பசையுடனும் சொரசொரப்பாகவும் இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?

- எஸ். ஜாகீர் உசேன், சிவகங்கை.

ரா. கருணா ஜஸ்டின், ஒப்பனையாளர், நாகர்கோவில்

ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாகக் கரும்புள்ளிகள் வரலாம். ஒழுங்கற்ற மாத விடாய் உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் மூக்கில் கரும்புள்ளிகள் தோன்றலாம். 15 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகளுக்கு வீட்டில் உள்ள பொருட்கள் மூலமாகவே இதைச் சரி செய்ய முடியும்.

ரோஜா இதழ்களையும் பாதாம் பருப்பையும் இரவே ஊறவைத்துவிடுங்கள். காலையில் கொஞ்சம் அவற்றைக் கொரகொரப்பாக அரைத்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி, மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையக்கூடும்.

உருளைக் கிழங்கு சாறுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துத் தடவிவந்தாலும் கரும்புள்ளிகள் மறையலாம். வெள்ளரிச் சாறு, எலுமிச்சைச் சாறு, புதினா சாறு ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து தினமும் தடவி மசாஜ் செய்யலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை குறைந்தபட்சம் ஒரு வாரம் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும்.

அப்படியும் கரும்புள்ளிகள் மறையவில்லை என்றால் அழகு நிலையங்களில் கரும்புள்ளிகள் மறைவதற்கான சிகிச்சை செய்துகொள்ளலாம். ஒரு சிலருக்குக் கரும்புள்ளிகள் மரு போல இருந்தால், தோல் சம்பந்தமான பிரச்சினையாக இருக்கலாம். தோல் மருத்துவரைப் பார்த்து என்ன பிரச்சினை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தானப் பத்திரம் (settlement deed) என்றால் என்ன? அதன் நகலை எங்கு பெற முடியும்? மாற்றி எழுத முடியுமா? எழுதியவர் இறந்துவிட்டால் அதன் நிலை என்ன? பதிவு செய்ய வேண்டுமா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

அருள்மொழி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

நெருங்கிய ரத்த உறவுகளுக்குத்தான் தானப் பத்திரம் எழுத முடியும். குறிப்பாக அம்மா, அப்பா, மனைவி, தங்கை, அண்ணன், தம்பி, மகன், மகள், பேரன், பேத்தி, போன்ற நேரடி ரத்த உறவுகளுக்குத் தானப் பத்திரம் எழுத முடியும். நேரடி ரத்த சொந்தங்கள் இல்லாத வேறு ஒருவருக்குத் தானப் பத்திரம் எழுத முடியாது.

தானப் பத்திரத்தைக் கண்டிப்பாகப் பதிவு செய்திருக்க வேண்டும். நேரடி ரத்த உறவு முறை இருந்தால்தான் தானப் பத்திரத்தைப் பதிவு செய்ய முடியும். தானப் பத்திரத்தைப் பதிவு செய்யவில்லையென்றால் அந்தப் பத்திரம் சொல்லாது. தானப் பத்திரம் எழுதிய நபர், அந்தப் பத்திரத்திலேயே தான் வாழும் காலத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கான உரிமையை எடுத்துக்கொள்ளலாம் என எழுதிக் கொடுக்க முடியும். நேரடி ரத்த சொந்தங்கள் தவிர்த்து வேறு யாரும் அதில் உரிமை கோர முடியாது. ஒருவேளை ஒரே குடும்பத்தில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு மட்டும் தானப் பத்திரம் எழுதி இருந்தால் மற்றவர்கள் தங்களுக்கும் அதில் உரிமை உண்டு என வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.



உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x