Published : 18 Jun 2017 12:09 PM
Last Updated : 18 Jun 2017 12:09 PM
பெரிய அரங்கில் அலைமோதும் பார்வையாளர் கூட்டம். மேடையில் ஆவேசமாகப் பேசி முடித்ததும், அரங்கில் பலமாக எழுகிறது கைதட்டல் ஒலி. அந்த ஓசையில் திடுக்கிட்டு நீங்கள் கண் விழிக்கிறீர்கள்.
“சே… எல்லாம் கனவா? அதானே பார்த்தேன்… நானாவது மேடையில பேசுறதாவது…’’ என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொள்கிறீர்களா? உண்மையில் உங்கள் மனதின் ஆழத்தில் பேச்சாளராவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், அதற்கான முயற்சியை நீங்கள் தொடங்கும் போதுதான் அதற்குரிய பலன் கிடைக்கும்.
எதைப் பார்த்தாலும் பயம்
ரேகாவின் கதை வித்தியாசமானது. ரேகாவின் அம்மா மூலமாகத்தான் எனக்கு அவர் அறிமுகமானார். பட்டப் படிப்பு முடித்து மேற்படிப்புக்காக ஆய்வு, புராஜெக்ட் வேலைகள் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர் ரேகா.
“இளம் பெண்ணான ரேகா சில நாட்களாக அவளுடைய தங்கையின் மீதும் என் மீதும் அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுகிறாள். அவளுக்கு உங்கள் ஆலோசனை தேவை. அவளை உங்களிடம் அனுப்புகிறேன்” என்று ரேகாவின் அம்மா என்னிடம் சொன்னார்.
“உங்கள் மீது அக்கறையாக இருப்பது நல்ல விஷயம்தானே… இதற்கு ஏன் கவுன்சலிங்?” என்றேன் நான்.
“அக்கறை என்றால் சாதாரண அக்கறை இல்லை. அவளது அக்கறையில் பயம் கலந்திருக்கிறது. தூக்கத்தில் திடீரென அலறியபடி எழுந்துகொள்கிறாள். என்ன நடந்தது என்று கேட்டால், பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த தங்கையின் தலையில் சீலிங் ஃபேன் விழுந்து ரத்த வெள்ளத்தில் இருப்பதுபோல் கனவு கண்டேன் என்பாள். தங்கையை ஃபேனுக்கு நேராக படுக்காதே என்பாள். பஸ் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு நசுங்கியதுபோல் கனவு வந்தது… இனிமேல் பஸ்சில் போகாதே என்பாள்.
நீ லிஃப்டின் கதவில் மாட்டிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் இருப்பதுபோல் கனவு கண்டேன்மா… தயவு செஞ்சு இனிமே லிஃப்டில் ஏறாதேம்மா என்பாள். அப்பப்போ எங்களுக்கு திடீர்னு போன் போட்டு எங்கே இருக்கீங்க? மார்கெட்லயா இருக்கீங்க?பத்திரமாத்தானே இருக்கீங்க என்று கேட்பாள். அவள் அக்கறையாக விசாரிப்பதே எங்களுக்குப் பயமாக இருக்கு. விபரீதமா இருக்கு. தினம் தினம் இப்படியான அவளுடைய விசாரணைகளுக்குப் பதில் சொல்வதே எங்களுக்குப் பெரும்பாடா இருக்கு. தயவு செஞ்சு அவளுக்கு ஏதாவது உதவி பண்ணுங்களேன்” என்றார் ரேகாவின் அம்மா.
கனவில் மட்டுமல்ல
ஒரு மாலை நேரத்தில் ரேகா என்னைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அவரது படிப்பு, புராஜெக்ட் தயார் செய்வதில் அவருக்கு இருக்கும் முனைப்பு எல்லாவற்றையும் பற்றிச் சொன்னார்.
“புராஜெக்டுக்காக மிகவும் மெனக்கெட்டு உழைக்கிறீர்களா? ரொம்பவும் பதற்றமாக உணர்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“அதெல்லாம் இல்லை மேடம். ரொம்ப கூலாதான் இருக்கேன்” என்றார்.
“எட்டு மணி நேரம் நிம்மதியா தூங்குறீங்களா?”
“நல்லாதான் தூங்கறேன். ஆனா ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போது கெட்ட கெட்ட கனவா வருது. குறிப்பா தங்கையும் அம்மாவும் ஏதாவது ஆபத்துல சிக்கி ரத்தம் சிந்துவது மாதிரி… அதுக்கப்புறம் பதற்றமாகிடுது. தூக்கம் வர்றதில்லை. வேறு எந்த வேலையும் செய்ய முடியறதில்லை. சில நேரங்கள்ல பகலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதோ, குளித்துக்கொண்டிருக்கும் போதோகூட, மாடிக்குத் துணி காயப்போடப் போகும் தங்கை தவறி விழுவதுபோல, தரையில் சிந்திய நீர் வழுக்கி அம்மா விழுவதுபோலத் தோணும். சில நேரங்கள்ல கேன்டீனில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுகூட தோணும். அப்போதெல்லாம் அம்மா, தங்கைக்கு போன் செய்து அவங்க பாதுகாப்பா இருக்காங்களான்னு உறுதி செஞ்சுக்குவேன்” என்றார். முதல் சந்திப்பு அந்த அளவில் முடிந்தது.
பாடப் பிடிக்கும்
இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவரை வரச் சொல்லியிருந்தேன். அப்போது அவரிடம் தற்போதைய படிப்பு பற்றியெல்லாம் எதுவும் கேட்கவில்லை. அவருடைய சிறு வயதில் ஏற்பட்ட சம்பவங்கள், மறக்க முடியாத நிகழ்ச்சிகள், பழகிய மனிதர்களைப் பற்றியெல்லாம் சொல்லச் சொன்னேன். கூட்டுக் குடும்பமாக இருந்தது, விடுமுறை காலத்தில் கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டுக்குச் சென்றது, தன் வயதில் இருந்த சிறுவர்களுடன் விளையாடியது... இப்படி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்று, “சிறுவயதில் நான் நன்றாகப் பாடுவேன். பள்ளி விழாக்களில் பாடிப் பரிசுகளைக்கூட வாங்கியிருக்கேன்” என்று அவர் சொன்னது. இதையொட்டி எங்களின் உரையாடல் தொடர்ந்தது.
“ஸ்கூல்ல பாட்டுப் பாடி பரிசு வாங்கியிருக்கீங்க… அப்புறம் காலேஜ்ல சேர்ந்ததும் பாடலையா?”
“எட்டாவது படிக்கும்போதே பாட்டெல்லாம் மறந்திடுச்சு… படிப்பு மட்டும்தான். வேற எதுக்கும் நேரமே இல்லை. ”
“உங்களுக்குப் பாடறதுக்கு ரொம்பப் பிடிக்கும்னா அதை ஏன் நீங்க தொடரக் கூடாது?பெரிய அளவுல ஸ்டேஜ் சிங்கரா ஆகணும்னு இல்ல… உங்க மனசு திருப்திக்குப் பாடறதுல என்ன உங்களுக்கு தடை? நேரத்தை நீங்க தானே உருவாக்கிக்கணும்.’’
“உண்மைதான். இனிமே பாடறதுக்காகவே ஒரு நாள்ல அஞ்சு நிமிஷமாவது நிச்சயம் ஒதுக்கறேன்…’’ என்றார்.
நிறைவேறிய விருப்பம்
அதற்குப் பின் இரண்டு வாரங்கள் கழித்து வரும்படி ரேகாவிடம் சொன்னேன். இரண்டு வாரங்களில் ஒருமுறை கூட ரேகாவிடமிருந்தோ அவரின் தாயிடமிருந்தோ போன் வரவில்லை. மூன்றாவது வாரத்தில் ரேகா புன்னகையுடன் என்னைச் சந்தித்தார்.
“புராஜெக்ட் எழுதும்போது, குளிக்கும்போது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக் கொண்டே இருக்கிறேன். மனசு ரொம்ப லேசா இருக்கு. எல்லாத்தையும்விட முக்கியமான விஷயம் அம்மாவும் தங்கையும் ரத்தம் சிந்துற மாதிரி கனவுகள் வருவதில்லை’’ என்றார் ரேகா.
நான் நினைத்தது சரிதான். ரேகாவின் உள் மனதில் பாடுவதற்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் அவரே அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கிறார். ரேகா பாடுவதற்கு அவருடைய தாயோ, தங்கையோ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத போதும், அவர்கள் பாதிப்படைவதாகத் தொடர்ந்து அவருக்கு வந்த எண்ணம், அவருக்கு விருப்பமான ஒரு விஷயத்தைத் தவிர்த்துவந்ததுதான்.
அவருக்கு விருப்பமான பாடும் பழக்கத்தை மீண்டும் தொடர்ந்ததால், அவருக்கு விருப்பமானவர்களுக்கு பாதிப்பு நிகழ்வதாக வந்த கனவுகளும் அவரை விட்டு விலகியிருக்கின்றன. ஒன்றின் மீதான விருப்பம் எனும் தீ உள்ளே கொழுந்துவிட்டு எரியும்போது, நிறைவேறாத அது சார்ந்த வெறுப்பு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
கட்டுரையாளர், மன நல ஆலோசகர்
தொடர்புக்கு: shobana.jayaraman@gmail.com
தொகுப்பு: பைரவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT