Last Updated : 22 Dec, 2013 12:00 AM

 

Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

பெண்களால் பெண்களுக்காக

மீனு வதேரா என்னும் பெண், பெண்களே காரோட்டிச் செல்லும் மகளிருக்கு மட்டுமேயான டாக்ஸி சர்வீஸ் வசதியை டெல்லியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ஸகா காப் [saka cab service] எனப்படும் டாக்ஸி சர்வீஸ்களின் சொ்ந்தக்காரியான மீனு, மோட்டார் கார் ஒன்றிற்குள் ஒரு முறைகூட நுழைந்துகூடப் பார்த்திடாத பல ஏழைப் பெண்களுக்குக் காரோட்டக் கற்றுக்கொடுத்து, லைசென்ஸ் போன்றவற்றிற்கும் ஏற்பாடுகள் செய்து தந்தது மட்டுமின்றி, கண்ணியமான வேலைவாய்ப்பையும் வாடகைக் காரோட்டிகளுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளார். இத்தகைய பணிகளைச் செய்துவந்தவரை, இத்தகைய ஒரு முயற்சிமேற்கொள்ளத் தூண்டியது எது?

மீனு லண்டனில் சில காலம் தங்கியிருந்தபோது, அங்குள்ள டாக்சிக்களை பெண்களே ஓட்டியதைப் பார்த்திருக்கிறார். டாக்சி ஓட்டுவதும் பயணிகள் போக வேண்டிய இடத்திற்கு எந்த ஒரு நேரத்திலும் காலம் தாழ்த்தாமல் சரியாகக் கொண்டுசேர்ப்பதுமான அவர்களின் சாமர்த்தியமும் தன்னம்பிக்கையும் தன்னை வியக்க வைத்துவிட்டதாகக் கூறுகிறார் மினு. இதுவே அவருக்கு ஒரு உந்துகோலாக அமைந்தது. இதன் விளைவாய் ஸகா கன்சல்டிங் விங்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனம் உதயமாயிற்று. லாப நோக்கமில்லாத இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் மீனு வதேரா.

2008இல் துவக்கப்பட்ட இந்த அமைப்பில்11 வாடகைக் காரோட்டி வனிதாமணிகள், டெல்லியிலுள்ள அனைத்து இடங்களுக்கும், பெண்களை மட்டுமே சவாரிக்கு அழைத்துச் செல்கிறார்கள். மேலும் 49 பெண் காரோட்டிகள் முழு நேர டிரைவர்களாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 48 வயதாகும் எம்பிஏ பட்டதாரியான மீனு வதேரா, பல பெண்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு கண்ணியமான ஒரு தொழிலை ஏற்படுத்தித்தந்துள்ள ஒரு சிறந்த தொழில் முனைவோராகவும் திகழ்கிறார்.

ஆண் ஆதிக்கம் ஓங்கியிருக்கும் இந்தத் தொழிலில், பெண்களுக்கு வண்டி ஓட்டவும் கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கப் பெறுவதற்காக நடையாய் நடந்திருக்கிறார் மீனு வதேரா. இவர் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தவர்களில், பல பெண்கள் ஒரு மோட்டார் காருக்குள் இதற்கு முன்னர் நுழைந்ததுகூடக் கிடையாதாம். அவர்களின் வீட்டு விலாசம்கூடக் கைவசமில்லாத இத்தகைய பெண்களுக்கு மீனு வதேரா, லைசென்ஸ் பெறுவதற்காக மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

எங்கெங்கோ தேடித் தேடி வலை வீசி ஒன்று திரட்டிய இந்தப் பெண்கள் பல்வேறு தரப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல; வெவ்வேறு மொழிகளைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுத்திருக்கிறார் மீனு. அத்துடன் டெல்லியிலும் வேறு பல மாநிலங்களிலும் சர்வசாதாரணமாகப் பேசப்படும் ஹிந்தி மொழியையும் இந்த வாடகைக் காரோட்டி வனிதாமணிகள் படு லாகவமாகப் பேசி வெளுத்து வாங்குகிறார்கள்.

இன்னுமொரு முக்கியமான காரியத்தையும் மீனு, திறம்படச் செய்துமுடித்திருக்கிறார். டெல்லி மாநகர போலீஸ் இலாகாவின், ‘மகளிருக்கு எதிரான குற்றச்செயல்கள்’என்று அழைக்கப்படும், பிரிவு ஒன்றின் ஒத்துழைப்புடன், இந்தப் பெண்கள் அனைவருக்கும் தற்காப்புக்குத் தேவைப்படும் எல்லா வகையான பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்க எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகவே செய்து வைத்திருக்கிறார் மீனு. இரவில் வண்டி ஓட்ட நேரிடும் பெண்கள் அச்சமின்றிப் பணிபுரிய இந்தப் பயிற்சிகள் கைகொடுக்கும் என்று நம்பலாம்.

மீனு வதேராவின் சகா டாக்சிக்களில் குறிப்பிடத்தக்க பெரிய புள்ளிகள் யாரும் பயணித்தது உண்டா என்று கேட்டதற்கு, “எத்தனையோ பேர் எங்களின் சகா டாக்ஸிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேம ரூன் டெல்லிக்கு விஜயம் செய்த போது இந்த டாக்ஸி சர்வீஸ் வசதியை நேரில் பார்த்துப் பாராட்டியதுடன், ஒரு பெண் காரோட்டியுடன் முன் சீட்டில் அமர்ந்து சவாரியும் செய்திருக்கிரார். இந்த முயற்சியை வாயாரப் புகழ்ந்து பாராட்டினார்” என்று கூறும் மீனுவின் முகத்தில் அளவில்லா ஆனந்தம்.

நடிகை ஸ்ரீதேவி இந்த டாக்சிகளில் டெல்லியில் வலம் வந்திருக்கிறார். பிரபல இந்தி நடிகர் ஆமிர் கானும் மீனுவின் திட்டத்தில் ஆழ்ந்த அக்கறை காட்டியதோடு, டெல்லிக்கு வரும்போதெல்லாம், இந்த சகா டாக்ஸி சர்வீஸைத் தவறாமல் பயன்படுத்திவருகிறார். ஷாருக் கானும் மீனுவின் டாக்ஸி சர்வீஸில் ஈடுபாடு காட்டியதுடன், இதனைப் பயன்படுத்திக்கொள்ளவும் செய்திருக்கிறார்.

கரீனா கபூர், ராணி முகர்ஜி இந்த வாடகை வண்டியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழைப் பெண்மணிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்துத் தந்துள்ள மீனு வதேரா, உண்மையிலேயே அவர்களுக்கெல்லாம் ஒரு நந்தாவிளக்காகவே ஒளிவிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x