Last Updated : 14 May, 2017 02:21 PM

 

Published : 14 May 2017 02:21 PM
Last Updated : 14 May 2017 02:21 PM

இணைய வெளி: 106 வயது யூடியூப் பாட்டி

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின் குடிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தப் பாட்டி. அவருக்கு இப்போது வயது 106 என்கிறார். வயதைக் கேட்டதும் ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் வசிப்பவர்களும்கூட அவரை அறிவார்கள். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள். அந்த அளவுக்குப் பெயர்பெற்ற அவரது பெயர் மஸ்தானம்மா. அவரது புகழுக்குக் காரணம், அவரது சமையல்தான். அவர் கைப்பக்குவமுள்ள சமையற்காரர்.

வழக்கமான சமையல்காரர்கள் போன்றவரல்ல அவர். சமையலுக்கென எந்தப் பிரத்யேக முன்தயாரிப்பும் இன்றி மிகவும் எளிய உடையில், வயல்வெளியின் திறந்த முற்றத்தில் விறகடுப்பிலேயே சமைத்து முடித்துவிடுகிறார் அவர்.

3 லட்சம் சந்தாதாரர்கள்

அவரது சமையலைப் போலவே அவரது துணிச்சலும் தன்னம்பிக்கையும் அடுத்த தலைமுறை அறிய வேண்டியது. ‘கண்ட்ரி ஃபுட்ஸ்’ என்னும் அவரது யூடியூப் அலைவரிசையாலேயே பிரபலமானார். அந்த யூடியூப் அலைவரிசைக்கு சுமார் 3 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளார்கள். உலகின் மிக அதிக வயது கொண்ட யூடியூப் பிரபலமாக அவர் இருப்பதற்கான சாத்தியம்கூட இருக்கிறது. சிறிய கிராமத்திலிருந்த அவரை இன்று உலகம் அறியவைத்ததில் அவருடைய பேரன் லட்சுமணனுக்கும் பங்கிருக்கிறது. அவரும் அவருடைய நண்பரான நாத்தும் சேர்ந்துதான் மஸ்தானம்மாவின் சமையல் நிகழ்ச்சியை யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து பிரம்மச்சாரிகளுக்கான சமையல் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு யூடியூப் அலைவரிசையை நடத்திவந்திருக்கிறார்கள். இருவருமே பாட்டியின் சமையலை அடிக்கடி சுவைத்தவர்கள்தான். அதன் பாரம்பரிய ருசி ஒரு தனித்த சுவையைத் தந்திருக்கிறது. பாட்டி சமையல் செய்வதை அப்படியே ஏன் யூடியூப் வீடியோவாக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறார்கள். முதலில் சோதனை முயற்சியாக ஒரு வீடியோவை உருவாக்கி யூடியூபில் பதிவேற்றியுள்ளார்கள். அதற்குக் கிடைத்த எதிர்பாராத வரவேற்பு அவர்களை முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் பின்னர் மஸ்தானம்மாவின் கைப்பக்குவமான சமையல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பதிவேற்றிவருகிறார்கள்.

வயதறியா சமையல்

சமையலில் உதவுவதற்காகத் தன் பேத்தி ராகினியை மட்டுமே மஸ்தானம்மா தன்னுடன் வைத்திருக்கிறார். வெற்றுக் கைகளில் தக்காளியையும், இஞ்சியையும் அவர் உரிக்கும் அழகே தனி. தோல் சுருக்கம் மட்டுமே அவரது முதுமையை நினைவுபடுத்துமே தவிர, அவரது செயல்பாடுகளில் முதுமை முகம் காட்டுவதேயில்லை.

பதினோரு வயதில் திருமணம் செய்துகொண்ட அவரது இல்லற வாழ்வு 22 வயதில் முடிவுக்கு வந்திருக்கிறது. வாழ்வு எப்போதும்போல கரிசனமின்றி நடந்துகொண்டது. ஆனால், அவர் தனது உழைப்பைத் தவிர எதையும் நம்பியிருக்கவில்லை. ஐந்து பிள்ளைகளை வளர்த்தெடுத்திருக்கிறார். அதில் நான்கு பேர் இறந்துவிட்டனர். இழப்புகள் பற்றிய கவலையற்று அவரது வாழ்வு தொடர்கிறது.

உலகத்துக்கே பாட்டி

முட்டைக் கறி, சிக்கன் பிரியாணி, ஃபீப் பாயா என நீளும் அவரது சமையல் நிகழ்ச்சிகளில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்றிருப்பது வாட்டர்மெலன் சிக்கன் தயாரிப்பு வீடியோதான். சமைப்பதைப் போலவே அதைப் பிறருக்குப் பரிமாறுவதையும் விருப்பத்துடன் செய்துவருகிறார் மஸ்தானம்மா.

இன்னும் தனியாகத்தான் காலம் தள்ளுகிறார். ஆனால் உலகம் முழுவதிலும் அவருடைய வீடியோக்களைப் பார்க்கும் பலருக்கும் அவர் பாட்டியாகவே இருக்கிறார். அவரது சமையலைச் சமைத்துப் பார்த்து ருசித்த ரசிகர்களுக்கு, அவர்களுடைய பாட்டிகளை அவர் நினைவுபடுத்துகிறார். அவருடைய உணவின் சுவை நாக்கில் தங்குவதைப் போலவே அவருடைய நினைவுகள் அவர்களின் நெஞ்சில் தங்கிவிடுகின்றன.

அவரது யூடியூப் அலைவரிசையைக் காண: >https://www.youtube.com/channel/UCKEPJo5eTHbKDgHxvUSR9Jw

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x