Published : 05 Feb 2017 01:49 PM
Last Updated : 05 Feb 2017 01:49 PM

கமலா கல்பனா கனிஷ்கா: பக்குவம் இல்லாதவர்கள் ஏன் காதலிக்கணும்?

கமலா பாட்டி, கல்பனா ஆன்ட்டி, கனிஷ்கா மூவரும் கலங்கரை விளக்கத்திலிருந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“மெரினா போராட்டத்தில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் நடுக்குப்பத்து மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டாங்க. இப்ப கடலில் கச்சா எண்ணெய் சிந்தியதால ஒட்டுமொத்த சென்னை மீனவர்களும் மீன் பிடிக்கப் போக முடியாமல் கஷ்டப்படறாங்க. ஆமைகளும் மீன்களும் செத்து மிதக்குறதைப் பார்த்துக் கண்ணீர் சிந்துறாங்க” என்று வருத்தத்துடன் கூறினார் கமலா பாட்டி.

“உத்தரப் பிரதேசத் தேர்தலில் ‘குலாபி கேங்' தலைவி போட்டியிடப் போவதாகச் சொல்லியிருக்கார்” என்ற கல்பனா ஆன்ட்டியை, இடைமறித்தாள் கனிஷ்கா.

“யார் இந்தக் குலாபி கேங் தலைவி?”

“உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் ரொம்பவும் பின்தங்கிய பகுதி. குடிகாரக் கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை போன்ற சமுதாய, அதிகார அநீதிகளைத் தட்டிக் கேட்கும் முயற்சியில் இறங்கியது ஒரு பெண்கள் குழு. இதன் தலைவர் சம்பத் பால் தேவி. இவரும் இவரது சகாக்களும் ரோஜா வண்ணச் சேலை அணிந்து செல்வதால் இவர்களை ‘குலாபி கேங்’ (ரோஸ் நிறக்கூட்டம்) என்று கூப்பிட ஆரம்பிச்சாங்க. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்தக் குலாபி கேங் பெண்கள் செயல்பட்டு வர்றாங்க. ‘கடந்த தேர்தலில் நான் முதல்முறையாகப் போட்டியிட்டதால் அனுபவம் பத்தலை. இந்த முறை அரசியல் அனுபவத்துடன் பிரச்சார உத்தியையும் தெரிந்துகொண்டதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்’என்கிறார் சம்பத் பால் தேவி.”

“பெண்கள் அரசியலுக்கு வருவது நல்லது. சம்பத் பால் தேவி வெற்றி பெற வாழ்த்துவோம். ராஜஸ்தான்ல கர்னி சேனா ஒரு போராட்டம் நடத்துனாங்க. அவங்க ஊரு ராணி பத்மாவதி கதையைப் படமாக்குற சஞ்சய் லீலா பன்சாலி, வரலாற்றைத் திரிச்சு தவறான தகவல்களைப் புகுத்தப் பார்க்குறாருன்னு அவரை அடிச்சு துவைச்சிருக்காங்க. பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே காதல் காட்சி இருப்பதுபோல படமாக்கப்படுகிறதுன்னு தகவல் வந்ததாலேயே இந்தப் போராட்டம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“ஆன்ட்டி, இப்ப அந்தப் போராட்டக்காரங்க முன்வைக்குற பிரச்சினை பத்மாவதி வரலாற்றைத் திரிக்கும் சினிமாக்காரர்கள், முஸ்லிம் வரலாற்றை மாத்திச் சொல்லுவாங்கன்னு திசை திரும்பியிருக்கு. இப்படி எல்லாப் போராட்டத்துலயும் மதத்தையும் இழுக்கிறாங்களே. அப்புறம் எப்படி நாம ஒரு மதச்சார்பற்ற நாடுன்னு மார்தட்டிக்க முடியும்?” என்றாள் கனிஷ்கா.

“சரியான கேள்விதான்! இந்தியாவின் முதல் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சமூகச் செயற்பாட்டாளர் திருநங்கை அகாய் பத்மஷாலி. இவர் தன்னுடைய நீண்ட கால நண்பர் வாசுவைத் திருமணம் செய்திருக்கார். இருவரின் பெற்றோரும் மனப்பூர்வமா இந்தத் திருமணத்தை நடத்தி வச்சிருக்காங்க. ‘நான் இந்தியத் திருமண அமைப்புக்கு எதிரானவள். ஏராளமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாவதை நேரில் பார்த்திருக்கேன். அதனால் வாசு நீண்ட காலமாக வைத்த திருமணக் கோரிக்கையை நான் ஏற்கவில்லை. திருமணத்தை விட சமூகச் செயல்பாடுகள் மீதுதான் எனக்கு ஆர்வம். என் நண்பர்கள்தான் வன்முறை இல்லாத திருமணங்களும் சாத்தியம் என்று புரியவைத்தனர். வாசுவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என்னால் குழந்தை பெற்றுக்கொடுக்க முடியாது என்று தெரியும். எங்கள் திருமணம் சாதி உட்பட பல விஷயங்களை உடைத்திருக்கிறது. இருவரும் அவரவர் பணிகளில் தொலைதூரத்தில் இருக்கோம். மாதம் இருமுறை சந்தித்துக்கொள்வோம்’ என்கிறார் அகாய் பத்மஷாலி.”

“புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகள்! பிசிசிஐ கிரிக்கெட் வாரிய நிர்வாகியாகப் புதுசா நாலு பேரை நியமிச்சிருக்காங்க. அதுல ஒருத்தர் டயானா எடுல்ஜி. இவர் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். பதவி கிடைச்சவுடன், ‘பெருமையாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது எங்களின் கூட்டுப் பொறுப்பாக இருக்கும்’ என்றார்” என்ற கனிஷ்கா, கடற்கரையில் மூன்று கடலைப் பொட்டலங்களை வாங்கினாள்.

“கடலை போடறது பத்தாதுன்னு நிலக்கடலை வேறயா!” என்று சிரித்த கமலா பாட்டி, “ஹெச்1பி விசா சீர்திருத்த மசோதாவால, இந்த விசா மூலம் அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 1,30,000 டாலர்களாக இருக்கவேண்டும். இதனால குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஊழியர்கள் நீக்கப்பட்டு, அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாகும்னு அமெரிக்கா நம்புது” என்றார் கமலா பாட்டி.

“இதனால் உலகம் எவ்வளவு பாதிக்கப்படப் போகுதோ தெரியலை… காதலின் பேரில் இன்னொரு கொடுமை கேரளாவில் அரங்கேறியிருக்கு. கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு மாணவன், தன் காதலை மறுத்ததற்காக மாணவியை எரித்து, தானும் தற்கொலை செய்துகொண்டான். கேட்கும்போதே பதறுது. காதலை ஏற்கும்போது எப்படி ஏத்துக்கிறோமோ, அப்படித்தான் காதலை மறுக்கும்போதும் ஏத்துக்கணும். இந்தப் பக்குவம் இல்லாதவங்க ஏன் காதலிக்கணும்? ஏதோ ஒரு காரணத்தால் காதலை மறுத்தால் அது எப்படி நம்பிக்கைத் துரோகமாகும்?” என்று ஆவேசமாகக் கேட்டாள் கனிஷ்கா.

மூவரும் சற்று அமைதி காத்தனர். இருள் சூழத் தொடங்க, குளிர்ந்த காற்றுப் பதம் பார்க்க, விடைபெற்றுக் கிளம்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x