Last Updated : 26 Jun, 2016 04:23 PM

 

Published : 26 Jun 2016 04:23 PM
Last Updated : 26 Jun 2016 04:23 PM

வடக்கிலும் தொடரும் சாதி வன்முறை!

ஈஷா குப்தா@இந்தியச் சாலைகள் : சிலிர்ப்பூட்டும் சாகசப் பயணம்

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்திய‌ச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருவராக வலம்வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)

“சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா?” - தாலாட்டும் இசைஞானி இளையராஜா பாடலின் இந்தி வெர்ஷனைக் கேட்டுக்கொண்டே உத்தரப் பிரதேசம் நோக்கிப் பயணித்தேன்.

பிரதமர்களின் நகரம்

இந்தியாவின் வடக்கில் பரந்து விரிந்திருப்பதால் இம்மாநிலம் உத்தரப் பிரதேசம் என அழைக்கப்படுகிறது (உத்தர என்றால் வடக்கு என்றும் ஒரு பொருள் உண்டு). கங்கை, யமுனை, கோமதி ஆகிய பெருநதிகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் பாய்வதால் விவசாயம் செழிக்கிறது.

ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர், இந்திரா காந்தி, வி.பி. சிங், சரண் சிங், ராஜீவ் காந்தி, சந்திரசேகர், குல்சாரிலால் நந்தா என எட்டுப் பிரதமர்கள் உத்தரப் பிரதேசத்தில் உதித்தவர்கள். அதில் சரண் சிங் தவிர மற்ற ஏழு பிரதமர்களும் மூன்று நதிகளின் நகரமான அலஹாபாதைச் சேர்ந்தவர்கள். முகலாயர்களின் ஆட்சியில் ஜொலித்த அலஹாபாத் நகரை அந்தி கறுக்கும் வேளையில் அடைந்தேன்.

இந்துக்களின் புனித நகரமான‌ இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. அகன்று பாயும் கங்கையும், யமுனையும் அலஹாபாத் நகருக்கு அழகூட்டுகின்றன. கண்ணுக்குத் தெரியாமல் பாய்வதாக நம்பப்படும் சரஸ்வதி மத நம்பிக்கைகளுக்கு உயிரூட்டுகிறது. திரிவேணி சங்கமம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்த‌ர்கள் பயபக்தியோடு நீராடிச் செல்கிறார்கள்.

தாய்மண்ணில் குதூகலம்

அரசக் குடும்பத்தில் பிறந்து சமூக நீதி அரசியலை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் வீட்டைக் கடந்து எனது தாய்வீட்டை நோக்கித் தடதடத்தேன். கங்கையின் புண்ணியத்தால் லக்னோ செல்லும் பாதையெங்கும் கோதுமையும் நெல்லும் செழித்து வளர்ந்திருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமில்லாமல் குக்கிராமங்களின் சாலையோரங்களிலும் ஏராளமான மரங்கள் நடப்பட்டிருப்பதால் பசுமையாகக் காட்சியளிக்கிறது. வட இந்தியாவின் மையமாக மாறிவருவதால் லக்னோவில் பெரும் தொழிற்சாலைகளும், பிரம்மாண்டமான கட்டிடங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் விண்ணை முட்டிக்கொண்டிருக்கின்றன.

மாலை வேளையில் லக்னோவில் உள்ள எனது வீட்டை அடைந்தபோது தெருவில் இருந்த அனைவரும் உற்சாகமாக வரவேற்றார்கள். ஏறத்தாழ 100 நாட்களுக்கும் மேலாகப் பயணித்துக்கொண்டே இருப்பதால் ஒரு வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்குமாறு அம்மாவும் நண்பர்களும் வலியுறுத்தினார்கள். மெரினா கடற்கரையில் தொடங்கிய எனது நீண்ட பயணத்துக்கு லக்னோவில் ஏழு நாட்கள் விடுப்பு விட்டேன். இந்த ஏழு நாட்களும் நண்பர்களுடன் சேர்ந்து ஒரே கும்மாளம்தான். ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்களால் நடத்தப்படும் ஷோர்ஸ் ஹேங் அவுட் ரெஸ்டாரன்ட்டுக்குச் சென்றேன். இடையில் என்னைவிட அதிகமாக உழைத்த எனதருமை மைக்கியை முழு சர்வீஸ் செய்தேன்.

ஒரு வாரத்துக்குப் பிறகு கம்பீரமாகப் பயணத்தைத் தொடங்கினேன். ஃபிலி பிட் வழியாக ரேபரேலி நோக்கிப் பறந்தேன். இந்திரா காந்தியும், அவரது மருமகள் சோனியா காந்தியும் வெற்றிபெற்ற ரேபரேலியில் கரும்பு விளைச்சல் சிறப்பாக இருந்தது. பெரிய கட்டிடங்களில் தொடங்கி சாலையோர சலூன் க‌டைகள்வரை காணும் இடமெங்கும் நேரு குடும்பத்தின் வாரிசு களின் புகைப்படங்கள் நிறைந்திருந்தன.

அயோத்தியில் மண்குவளை தேநீர்

ரேபரேலியில் இருந்து பைசாபாத் வழியாக இந்தியாவின் சர்ச்சைக்குரிய இடமாக மாறியிருக்கும் அயோத்தி நோக்கிப் புறப்பட்டேன். பசுமை நகரமாக உருவெடுத்துள்ள பைசாபாத்தும், ஆன்மிக நகரமான அயோத்தியும் இரட்டை நகரங்களாக அழைக்கப்படுகின்றன. இந்த இரு நகரங்களுக்கும் இடையே சரயு நதிக்கரையை ஒட்டி வாழும் மக்கள் சம்ஸ்கிருதமும், பாரசீகமும் கலந்த ‘அவதி’ என்கிற மொழியைப் பேசுகிறார்கள். இதே பகுதியில் 500 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வதாக அவதி மக்கள் சொல்கிறார்கள்.

அயோத்தியை நெருங்குகையில் சாலையோரக் கடையில் உருளைக் கிழங்கு பரோட்டாவும், மண் குவளை யில் மசாலா சாயாவும் குடித்தேன்.

“உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வட‌ மாநிலங்களில் பெரும்பான்மையான கடைகளில் இன்றும் மண் குவளையில்தான் டீ கொடுக்கிறார்கள். இதனால் பிளாஸ்டிக் கப் பயன்பாடு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பேப்பர் கப் பயன்படுத்தாததால் மரம் வெட்டுவதும் குறைகிறது.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத மண் குவளைகளைப் பயன்படுத்துவதால் குயவர்களின் வாழ்வும் செழிக்கிறது. மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாகிறது. இவை யாவ‌ற்றையும் விட சிந்து சமவெளி நாகரிகக் கால‌த்து நடைமுறையான மண் குவளையில் டீ குடிக்கும்போது, ஒருவித சரித்திரப் பெருமையும் உண்டாகிறது” என தேநீரோடு கொஞ்சம் பாடமும் எடுத்தார் கடைக்காரர்.

ராமர் பிறந்ததாக நம்பப்படும் ராமஜென்ம பூமியும், நவாப்களின் ஆட்சியில் கட்டப்பட்ட பாபர் மசூதியும் இருந்த அயோத்திக்குள் நுழைகையில் மனம் படபடத்தது. சரித்திரப் புகழ்வாய்ந்த இந்நகரம் சர்ச்சைக‌ளின் தலைநகரமாக மாறிவிட்டது. மதங்களின் பெயரால் பல ஆயிரம் மனிதர்களின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் கடுங்காவலில் இருக்கிறது. கலவர மேகங்கள் சூழ்ந்த இந்நகரத்தில் வெள்ளைப் புறாக்கள் ஏதுமறியாமல் சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கின்றன.

தாஜ்மஹால் மண்ணில் கொல்லப்படும் காதல்

அயோத்தியிலிருந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஆக்ரா நகருக்குப் புறப்பட்டேன். அனல் பறக்கும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி, கரும்புச் சாற்றையும், வெள்ளரித் துண்டுகளையும் சாப்பிட்டேன். இஸ்லாமியக் கட்டிடக் கலைகள் நிறைந்த ஆக்ராவுக்குள் நுழைகையில் பழமையான எண்ணங்கள் மேலெழுந்தன. ஆக்ரா ராயல் என்ஃபீல்டர்ஸ் அமைப்பினர் என்னை வரவேற்று ஷாஜஹானின் காதல் சின்னமான தாஜ்மஹாலுக்குள் அழைத்துச் சென்றார்கள்.

பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக் கான சுற்றுலாப் பயணிகளின் ஆர்ப்பரிப்பிலும் யமுனை நதியில் எழும் நீரலைகளைப் போல நிசப்தமாகவே காட்சியளிக்கிறது தாஜ்மஹால். காதலின் சின்னமான தாஜ்மஹால் கம்பீரமாக நிற்கும் உத்தரப் பிரதேசத்தில் காதலுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் மனதை நோகடிக்கின்றன. தினந்தோறும் சாதியின் பெயரால் அப்பாவிகள் ஆணவப் படுகொலைக்கு ஆளாகிறார்கள்.

தலித் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு ஊர் நடுவிலே தொங்கவிடப்படும் கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. கடந்த ஆண்டில் மட்டும் 21,215 பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. இதில் 2,066 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1,532 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு விடிவே இல்லையா எனப் பெண்கள் ஏங்குகிறார்கள்.

வடக்கில் வளர்ச்சியைத் தரும் ஆட்சியை விட, சமூகத்தில் வசந்தம் தரும் ஆட்சிதான் தேவை. மாற்றத்தை நோக்கி உத்தரப் பிரதேசம் பயணிக்கட்டும்!

(பயணம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x