Published : 05 Mar 2017 11:55 AM
Last Updated : 05 Mar 2017 11:55 AM
அழகுபடுத்தும் நிலையங்கள், ஐ.டி நிறுவனங்கள், அழகு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனம் என்று தான் ஆரம்பித்த ஒவ்வொன்றிலும் கொடிகட்டிப் பறக்கிறார் மது சரண். தான் சிறந்த தொழில்முனைவோராக உயர்ந்ததைப் போலவே, பல பெண்களையும் உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் பணியாற்றிவருகிறார்.
“எந்தவொரு தொழில் பின்புலமும் இல்லாத நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். தரமணியில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது திருமணம், குழந்தைகள் என்று பொறுப்புகள் அதிகரித்தன. அப்போதுதான் வீட்டிலிருந்தபடியே ஒரு தொழிலைச் செய்ய முடிவெடுத்தேன். நகைகளையும் சேமிப்பையும் மூலதனமாக வைத்து, சாஃப்ட்வேர் டெஸ்டிங் (software testing) என்ற ஐ.டி. துறை சார்ந்த வேலையை ஆரம்பித்தேன். மூளைதான் இந்தத் துறைக்கு மூலதனம். என்னுடைய முயற்சியாலும் கணவரின் ஒத்துழைப்பாலும் விரைவிலேயே வெற்றி கிடைத்தது. தற்போது நாடு முழுவதும் 40 ஐ.டி. நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறோம்” என்று மது சரண் சொல்லும்போது வியப்பாக இருக்கிறது.
மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத்தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தில், பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சியில் சேர்ந்தார் மது. அவர்களின் நிதி உதவியுடன் ஒரு அழகு நிலையத்தை ஆரம்பித்தார்.
“சென்னையில் எங்கள் அழகு நிலையத்தின் கிளைகள் பல இடங்களில் உள்ளன. அழகு நிலையத்துக்குத் தேவையான பொருட்களை, மகளிர் சுய உதவி குழுக்களிடம் வாங்கினேன். இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்தனர். அப்போதுதான் பெண் தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது. ஐ.டி., அழகு நிலையங்கள் மூலம் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியைக் கொண்டு ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். அதன் பிறகு பெண் தொழில்முனைவோர் எங்கள் நிறுவனத்தைத் தேடி வர ஆரம்பித்துவிட்டனர்” என்கிறார் மது சரண்.
இவரது தொழில்முனைவோர் தொண்டு நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந் துள்ளனர். ஏ.பி.சி. என்ற காஸ்மெட்டிக் கிளீனிக் ஒன்றை ஆரம்பித்து, இரண்டே ஆண்டுகளில் அதன் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தியிருக்கிறார்.
“தொழில்முனைவோராக விரும்பும் பெண்களிடம் பேசுவோம். அவர்களின் விருப்பத்தை அறிந்துகொள்வோம். அவர்கள் தொழிலின் தன்மைக்கு ஏற்ப நிதி உதவியைச் செய்வோம். பெரிய பட்ஜெட் தேவைப்படும் தொழில்முனைவோருக்கு மகிளா வங்கி மூலம் கடனுதவி பெற்றுத் தருகிறோம். சென்னையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோருக்கு காபி, குழிப்பணியாரம் போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்ய 25 நடமாடும் வாகனங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இந்த நடமாடும் உணவகத் தொழிலை கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்பவர், இந்தியாவில் அதிகமான பெண் தொழில்முனைவோரை உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சர்வதேசப் பெண் தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பாகக் கவுரவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதராகவும் மது சரண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
“அனுபவம், பின்புலம் எதுவும் இல்லாமலேயே தொழில் தொடங்கிப் பல நிறுவனங்களுக்கு அதிகாரியாக இருந்துவருகிறேன். இந்த நிலையை எட்டிப் பிடிப்பது எளிதான காரியம் அல்ல. பல பொருளாதாரத் தடைகளைத் தாண்டிதான் இந்த இடத்துக்கு வரமுடிந்தது. இதுபோன்ற பொருளாதாரத் தடையால் பெண்கள் திறமை இருந்தும் நிதியுதவி இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களைக் கண்டறிந்து, வெற்றிகரமான பெண் தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே என் எதிர்காலத் திட்டம்” என்கிறார் மது சரண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT