Published : 14 May 2017 01:15 PM
Last Updated : 14 May 2017 01:15 PM
கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது. நிர்பயாவின் தாய் செய்தியாளர்களிடம், “என் மகளை நான் தினம் தினம் நினைத்துப் பார்க்கிறேன்” என்று கண்ணீர் மல்கச் சொன்னார் என்ற செய்தியைச் சில நாட்களுக்கு முன்பு வாசித்தேன். அந்தச் செய்தி அடிக்கடி என் நினைவில் வந்து என்னை வதைத்தது. மகளை இழந்த அந்தத் தாயின் வலி எப்போது மறையும்? அவரது மரணத்திற்குப் பிறகுதான் அது சாத்தியப்படும்.
வலி மிகுந்த வாழ்க்கை
இதுபோல எத்தனை எத்தனை வலி மிகுந்த வன்முறைச் சம்பவங்கள் எத்தனையோ பெண்களுக்கு நடந்துள்ளன. வெளிச்சத்துக்கு வந்தவை சில; வராதவை பல. சட்டம் தன் கடமையைச் செய்து குற்றவாளிகளைத் தண்டிக்கலாம். அல்லது விடுவிக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவர்களின் மரணம் வரைக்கும் அனுபவிக்கும் ரணவேதனையைக் குறைக்கவோ அகற்றவோ முடிவதில்லை. அந்தப் பேரிழப்பை எதைக் கொண்டும் ஈடுசெய்ய முடியாது. இப்படி வலிகளைச் சுமந்தபடி எத்தனையோ பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
சிட்டுக் குருவிகளென சிறகடித்துத் திரியும் சிறுமிகளைப் பார்க்கும்போது மனம் பரவசமடைகிறது. வீதிகளில் விளையாடித் திரியும் அவர்களைக் காண்கையில் எனக்குள் ஓர் அச்சமும் பரிதவிப்பும் எழுவதைத் தடுக்கமுடிவதில்லை. என்றாவது யார் கண்ணிலாவது பட்டு இந்தச் சின்னஞ்சிறு ஜீவன்கள் சிறுமிகளாகவோ வளர்ந்த பின்னரோ கசக்கப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சமும் அங்கலாய்ப்பும் என்னை அலைக்கழிக்கின்றன. எனக்கேன் இந்த பயம்? தங்களைப் பாதுகாக்கத் தெரியாத சின்னஞ்சிறிய ஜீவன்கள் சிதைக்கப்படும் செய்திகளைக் கேள்விப்படும்போதெல்லாம் மனம் மிகவும் வலிக்கிறது; மருட்சியடைகிறது.
அச்சத்தைப் போதிக்கும் கல்வி
நிர்பயா என்றால் பயமற்றவள் என்று அர்த்தமாம். பயமற்றவர்களாக குழந்தை களை வளர்க்கிறோமா? இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். உண்மை தான். பயமறியாது வளரும் அவர்களைப் பயமுறுத்தி பக்குவமற்றவர்களாக்கி விடுகிறோம். அதிலும் பெண் என்றால் அவள் மனஉறுதியைச் சிதைத்து அவளைத் துணிவற்றவளாக்குவதில்தான் இந்தச் சமூகமும் குடும்ப அமைப்பும் முனைப்புக் காட்டுகின்றன. பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து படிக்கவரும் குழந்தைகளைக் காணும்போது பிரமிப்பாக இருக்கும்.
புது இடம், புது நபர்கள் என்றெல்லாம் முதலில் மருண்டாலும் அடுத்து சில நாட்களில் அவர்களது பேச்சும் சிரிப்பும் மனதைக் கொள்ளைகொள்ளும். துடிப்புடன் துள்ளலுடன் கள்ளமின்றி கலகலவெனப் பேசும் அதே சிறுமிகள், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வந்து சேரும்போது வாய்பேசா மௌனிகளாக எப்படி மாற்றப்படுகிறார்கள் என்று நான் வேதனைப்பட்டிருக்கிறேன். துணிந்து பேசித் துள்ளித் திரிந்து, துடுக்குடன் இருந்த அவர்களை இப்போது பயத்துடன் பணிந்து போகச்செய்ததுதான் கல்வி அவர்களுக்குச் செய்த மாபெரும் கொடுமை.
தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், தான் கண்டதை, கேட்டதை, நினைத்ததை, அச்சமின்றிப் பகிர்ந்து கொள்ளவும், மனத் திண்மையுடன் விவேகமுள்ளவர்களாகச் செயல்படவும் சிறுமிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதியின் பாடலைக் கற்பிக்கும் ஆசிரியைகளே பயந்து பதுங்கிக் கிடந்தால் மாணவிகள் எப்படி சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள்? இந்தத் தேசத்தின் சுவாசமாக உள்ள குழந்தைகளின் சுதந்திரத்தை எப்படி மதிப்பார்கள்? வீட்டிலும் பள்ளியிலும் குழந்தை களை முக்கியமாகப் பெண் குழந்தைகளை அச்சமற்றவர்களாக ஆற்றல்மிக்கவர்களாக உறுதியுள்ளவர்களாக வளர ஊக்கப்படுத்த வேண்டும்.
தன்னைப் பற்றியும் தன் உடலைப் பற்றியும் அதன் மேல் அவளுக்குள்ள உரிமை பற்றியும் உடலில் உண்டாகும் மாற்றங்கள் பற்றியும் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய மனப்பக்குவத்தைப் பற்றியும் வீட்டிலும் பள்ளியிலும் சொல்லித்தர வேண்டும். அப்படிச் சொல்லித் தருவதற்கான சூழலும் நபர்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
பெண் ‘பார்க்கும்’ படலம்
அதே செய்தித்தாளில் மற்றொரு செய்தியும் என் கவனத்தைக் கவர்ந்தது. “இந்தி சரியாக எழுதத் தெரியாத இளைஞருடன் திருமணம் வேண்டாம். உ.பி. யில் துணிச்சலாக மறுத்த இளம்பெண்.’’ வரதட்சிணை கேட்டதற்காக, அழகாக இல்லை என்பதற்காக, மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக என்றெல்லாம் பெண்கள் திருமணத்தை நிறுத்திய செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது மாப்பிள்ளைக்கு இந்தி சரியாக எழுதத் தெரியவில்லை என்பதற்காகத் திருமணத்தைத் துணிச்சலாக மறுத்த இந்த இளம்பெண்ணைக் கொண்டாட வேண்டும். முதலில் மாப்பிள்ளைதான் பெண்ணிடம் சில இந்தி வார்த்தைகளைச் சொல்லி எழுதச் சொல்லி இருக்கிறார்.
பெண் அவற்றைச் சரியாக எழுதிக் காட்டியிருக்கிறார். அதன் பின் பெண், மாப்பிள்ளைக்குச் சில இந்தி வார்த்தைகளைக் கொடுத்து அவற்றையும் அவரது வீட்டு முகவரியையும் எழுதச் சொல்லியிருக்கிறார். மாப்பிள்ளை தப்பும் தவறுமாக எழுதியதால் அந்த மாப்பிள்ளை வேண்டாமென்று திருமணத்தைப் பெண் நிறுத்திவிட்டார். இத்தனைக்கும் மாப்பிள்ளை ப்ளஸ் டூ வரை படித்தவர். பெண் ஐந்தாவது வரை மட்டுமே படித்தவர்.
மாப்பிள்ளை என்றால் உசத்தியா?
மாப்பிள்ளை எதிர்பார்க்கும் எல்லாத் தகுதிகளும் பெண்ணுக்கு இருக்க வேண்டும். ஆனால் மாப்பிள்ளை எப்படியிருந்தாலும் பெண் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சட்டம். அதனைத் தகர்த்து பெண்ணுக்கும் எதிர்பார்ப்புக்கள் உண்டென ஓங்கி உரைத்த அந்த உத்தரப்பிரதேசத்து இளம்பெண்ணின் துணிச்சல் பெண்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. பெண்ணுக்கு எந்த எதிர்பார்ப்பும் கனவும் இருக்கக் கூடாது. எப்பாடுபட்டாவது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குக் கட்டுப்படாமல் தனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே திருமணம் என்று சொல்லும் உரிமையைப் பெண்கள் பெற வேண்டும்.
மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் பகீரத முயற்சிகளையும் ஒப்பனைகளையும் ஒதுக்கிவிட்டு இயல்பான, இயற்கையான முறைகளில் திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது மகிழ்ச்சியை உண்டாக்கும். இல்லையெனில் பெண்ணைப் ‘பார்த்துவிட்டு’ மாப்பிள்ளை சென்ற பிறகு, தான் தேர்ந்தெடுக்கப்பட்டோமா இல்லையா என்ற முடிவுக்காகக் காத்திருக்கும் அவஸ்தையைப் பெண் மட்டுமே காலந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலை மாறாது. திருமணம் செய்துகொள்ளாமலும் வாழ்ந்துகாட்ட முடியும் என்ற மனஉறுதியையும் வளர்த்துக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும்.
பெரும்பாலான பெண்கள் தங்களின் திறமைகளை, தனித்துவத்தை, தன் மானத்தை, சுயமரியாதையை, கௌரவத்தை திருமணம் குடும்பம் குழந்தைகளுக்காகத் தியாகம் செய்துவிடுகிறார்கள். அதற் காகப் பெருமைப்பட்டுக்கொள்ளவும் செய்கிறார்கள். பெண்ணாகப் பிறந்ததன் பெரும் பாக்கியமே ஆண்களைச் சுகவாசிகளாக வாழவைப்பதற்குத்தான் என்ற எண்ணத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். ஆண், பெண் இருவருமே சுகமாக மகிழ்வாக வாழ்வதுதான் நீதியானது என்பதைத் தற்போது சிலர் உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. அந்த எண்ணிக்கை அதிகரிப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: karukkubama@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT