Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

பாசிட்டிவ் பெண் கௌசல்யா

எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளுக்குத் (டிச. 1) தயாராகிக் கொண்டிருந்தார் கௌசல்யா பெரியசாமி. இந்தியாவின் முதல் பாசிட்டிவ் பெண்கள் அமைப்பை உருவாக்கிய அவர், தேசிய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்காக உத்தரப்பிரதேசத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானதை முதன்முதலாக வெளிப்படையாக அறிவித்தவர்களில் ஒருவர் கௌசல்யா. திருமணம் மூலமே எச்.ஐ.வி. தொற்றைப் பெற்ற அவர், மற்ற இல்லத்தரசிகளும் தன்னைப் போல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அப்படி அறிவித்தார். அப்போது முதல் இன்றுவரை பெண்களும் குழந்தைகளும் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

"எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்பான ஒரு நிறுவனத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எச்.ஐ. விக்கான தேசிய திட்டம் வகுப்பதற்காக 1997இல் சென்னையில் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிக எச்.ஐ.வி. நோயாளிகள் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான், மறைந்த ஜோன்ஸ், வரலட்சுமி, ஹேமலதா ஆகியோர் பங்கேற்றோம். அந்தக் கூட்டத்தில் எச்.ஐ.வி. யாருக்கு வேண்டுமானாலும் வர லாம். பெண்களுக்கு விழிப்புணர்வை அதிக ரிக்க வேண்டும் என்றோம். ஆனால், நீங்கள் நிபுணர்களா என்று கேள்வி எழுப்பினார்கள்.

அமைப்பாக இல்லாததால்தான், நமது குரல் எடுபடவில்லை என்று புரிந்து கொண்டோம். தென்னிந்தியாவில் உள்ள 18 பெண்கள் சந்தித்துப் பேசி, 1999இல் ஒரு அமைப்பானோம். ஆசியாவிலேயே வெளிப்படையாக சங்கமாகப் பதிவு செய்த முதல் எச்.ஐ.வி பாசிட்டிவ் பெண்கள் அமைப்பு எங்களுடையதுதான்" என்று பி.டபிள்யு.என். தொடங்கிய கதையைச் சொல்கிறார் கௌசல்யா.

தற்போதும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய எச்.ஐ.வி. பாசிட்டிவ் பெண்கள் அமைப்பு இதுதான். 13 மாநிலங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அத்துடன், தன்னார்வமாக உழைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பெண்களை சாதாரண வாழ்க்கைக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் பி.டபிள்யு.என். அமைப்பின் நோக்கம். இந்த அமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் கேண்டீன், திருநெல்வேலியில் 40 ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை, விழுப்புரத்தில் வீ பிராண்ட் என்ற துணிக் கடை ஆகியவை நடத்தப் பட்டு வருகின்றன. 58க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பு சாத்தியப்படுத்திய சில மாற்றங்கள்: தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் விதவையானவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் விதவை பென்ஷன் வழங்க வேண்டும் (முன்பு 45 வயதாக இருந்தது). எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து கொடுக்க வேண்டும் என்ற இவர்களது வலியுறுத்தலைத் தொடர்ந்தே, ஏ.ஆர்.வி. இலவசமாகத் தரப்பட்டு வருகிறது. நெவ்ரெபி என்ற மருந்துக்கு பேட்டன்ட் உரிமை கோரப்பட்டிருந்ததற்கு எதிராக, வழக்கு போட்டு போராடி உரிமம் பெற்றுள்ளார்கள்.

தற்போது தமிழக அரசின் எச்.ஐ.வி. ஆலோ சனைக் குழுவில் இவர்களுடைய அமைப்பும் ஒரு பிரதிநிதி. முன்பு குழந்தைகளுக்கான தேசிய எச்.ஐ.வி. ஆலோசனைக் குழுவில் கௌசல்யா பிரதிநிதியாக இருந்திருக்கிறார்.

"எல்லோருக்கும் எய்ட்ஸ் என்றால் என்னவென்று தெரியும், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்பு எப்படிப்பட்டது, எவ்வளவு மோசமானது என்று தெரியாது. "எங்களுக்கெல்லாம் எச்.ஐ.வி. தொற்று வராது" என்ற மாயையே பலரிடம் அதிகம். "என் குடும்பம் நல்ல குடும்பம்" என்ற அலட்சியமும் இருக்கிறது. ஆனால், இதுவெல்லாமே பொய்.

இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் பேரில், 40 சதவிகிதம் பேர் (8 லட்சம் பேர்) பெண்கள். இதில் 86 சதவிகிதம் பெண்களுக்கு திருமண உறவு காரணமாகவே எச்.ஐ.வி. தொற்றியுள்ளது. எனவே, எச்.ஐ.வி. பரவுவதற்கு இதுவே முக்கிய காரணம். பாலியல் தொழில், ரத்தம் மூலம் எச்.ஐ.வி. பரவியது வெறும் 14 சதவிகிதம்தான். ஆனால் "கே", லெஸ்பியன் போன்ற ஒரு பால் உறவு, திருநங்கைகளால்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுவதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்களில் 60 முதல் 70 சதவிகிதம் பெண்கள் விதவையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களும் இறந்து போனால், குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி விடுகின்றனர்.

இப்போது தமிழகத்தில் ஒவ்வொரு துறையின் கீழும் வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகளில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உதவித்தொகையை வைத்துக்கொண்டு வாழ முடியாது. கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ரூ.3,000மும், நகரத்தில் ரூ.5,000மும் அவசியம்.எனவே, அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும், குறிப்பாக பெண்களுக்கு.

தற்போது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலும் மகாராஷ்டிராவில் நாக்பூரிலும் பாசிட்டிவ் பெண்களுக்கான அரசின் ஆதார மையத்தை ஏற்று நடத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். இது போன்றதொரு மையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டால், நாமக்கல் மாவட்டத்துக்கு மட்டும் 4 மையங்கள் தேவை. ஏனென்றால், அங்கு 10,000 பெண் எச்.ஐ.வி. நோயாளிகள் இருக்கிறார்கள். இந்த மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் எச்.ஐ.வியை பரவச் செய்வதைத் தடுக்க முடியும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம்.

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் வளரும்போது வாழ்க்கையை கையாள்வதற்கான கல்வியும், வளர்ந்தபின் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் மருந்தும் தேவை. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திலேயே இளைஞர்களுக்கான சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சையும் உதவியும் பெறலாம். இது பற்றி பெரும்பாலோருக்குத் தெரியாது.

இதைத் தாண்டி பள்ளி, கல்லூரிகள், பொது மருத்துவமனைகளில் எச்.ஐ. வி. பாதிக்கப் பட்டவர்களை நடத்தும் முறை பெரிதாக மாறவில்லை. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர் களைப் பற்றிய பொதுமக்களின் மனோபாவம் மாறவில்லை. எச்.ஐ.வியை அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டால் இந்த மனோபாவத்தை மாற்றலாம். அப்போது எச்.ஐ.வி. பாதிப்பில் சிக்காமல் இருப்பதுடன், வேறு பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். அந்தப் புரிதல்தான் அவசியம்" என்கிறார் கௌசல்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x