Published : 24 Jul 2016 03:06 PM
Last Updated : 24 Jul 2016 03:06 PM
ஹரியாணாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு தலித் மாணவி அதே குற்றவாளிகளால் மீண்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறாள். அந்தப் பெண், அவர்கள்மீது கொடுத்திருந்த வழக்கைத் திரும்பிப்பெற மறுத்ததால் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தபோது இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறார்கள்.
ஐந்து குற்றவாளிகளில் அமித், ஜக்மோகன், சந்தீப் என்ற மூன்று குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்துள்ளது. மற்ற இரண்டு பேரைத் தேடிவருகிறது. அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாள். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றச் சொல்லிப் போராடிவருகின்றனர்.இந்த ஐந்து நபர்களும் தங்களுடைய குற்றச் செயலுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டம் நாட்டில் இருக்கிறது என்று தெரிந்தும், எந்தவித பயமும் இல்லாமல் அதே குற்றத்தைத் திரும்பவும் செய்திருக்கின்றனர். இந்தக் குற்றத்துக்குப் பின்னால் இரண்டு காரணிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாவது, பாதிக்கப்பட்ட பெண் ஓர் ஏழை தலித் மாணவி. இரண்டாவது காரணம், 2013 -ல் இப்படி ஒரு குற்றத்தைச் செய்த பிறகும், அவர்களை ஜாமீனில் வெளியே விடுமளவுக்கு சட்ட நடைமுறைகள் நீர்த்துப்போயிருக்கின்றன. இந்தியாவில் ஒரு பெண், அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் தனக்கு எதிராக நடக்கும் குற்றங்களைப் பற்றிப் புகார் தெரிவித்தாலும் அவளுக்கான நீதி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.
2013-ல் தனக்கு நேர்ந்த கொடுமையிலிருந்து மீண்டு வந்து அந்தப் பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்திருக்கிறாள். இரண்டாவது ஆண்டு கல்லூரியில் சேர்வதற்குச் சென்ற அன்றுதான் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. அந்த மாணவி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தொடரும் ஆணவக் கொலைகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலம் கன்டீல் பலோச், அவருடைய சகோதரனால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அதற்குக் காரணம், அவரது சுதந்திரமான சமூக ஊடகச் செயல்பாடுகள். பலோச்சின் ஃபேஸ்புக் பக்கத்தை எட்டு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவரது வீடியோக்கள் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தன் செயல்பாடுகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார் பலோச்.
கன்டீலின் தந்தை முகம்மது அஸீம், மகளைக் கொலைசெய்த தன்னுடைய மகன் வஸீம் அஸீம் மீது புகார் தெரிவித்திருக்கிறார். ராணுவத்தில் வேலைபார்க்கும் தன்னுடைய இன்னொரு மகனுக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருக்கிறது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அத்துடன், தங்களுடைய மொத்த குடும்பத்துக்கும் பலோச்தான் ஆதரவளித்துவந்தார் என்றும் அவர் கூறியிருக்கிறார். பலோச் ஆணவக் கொலை செய்யப்பட்டது பாகிஸ்தானில் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பாகிஸ்தானில் இந்த மாதிரி ஆணவக் கொலைகள் 39 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரோமின் முதல் பெண் மேயர்
ரோம் நகரத்தின் 2800 ஆண்டு சரித்திரத்தில் முதல் பெண் மேயராக வர்ஜினியா ரக்கி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். ரோம் வரலாற்றில் மிக இளம் வயதில் மேயராகப் பதவியேற்றவரும் இவர்தான். “ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான வாய்ப்புகள் என்பது இன்னும் அரிதாக இருக்கும் நிலையில் இந்த வெற்றி மதிப்புமிக்கது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ரோம் நகர்மன்ற உறுப்பினராக ரக்கி, ஏற்கனவே மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஊழலுக்கு எதிரான ஃபைவ் ஸ்டார் இயக்கத்தின் உறுப்பினர் இவர். இத்தாலியின் இன்னொரு நகரமான டூரின்-ல் ஃபைவ் ஸ்டார் இயக்கத்தின் இன்னொரு பெண் உறுப்பினரான சியாரா அப்பென்டினோ மேயர் தேர்தலில் வென்றுள்ளார். இத்தாலிய மொழியில் மேயரை ‘சின்டகோ’ என்று சொல்கிறார்கள்.
‘சின்டகோ’ என்ற வார்த்தையை பெண்பாலாக்குவது எப்படியென்ற புதிய, சுவாரசியமான சர்ச்சை அங்கே ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மேயரான பிறகு ‘நகரத் தந்தை’ என்ற வார்த்தைக்கு இணையான பெண்பால் சொல் என்ன என்பது குறித்த விவாதம் நடந்தது நினைவில் இருக்கலாம். ரோமின் முன்னாள் மேயர், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நகரத்தை விட்டு வெளியேறிய நிலையில், நடந்த தேர்தலில் வர்ஜினியா ரக்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT