Last Updated : 18 Jun, 2017 12:50 PM

 

Published : 18 Jun 2017 12:50 PM
Last Updated : 18 Jun 2017 12:50 PM

முகம் நூறு: விவசாயம்தான் எங்கள் மூச்சு!

புதுக்கோட்டையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் உள்ளிட்ட செழிப்பான கிராமங்கள் இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென வயல்வெளிகள். நெல், வாழை, சோளம், மலர், காய்கறி போன்ற பயிர்களோடு குளிர்ப் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய மிளகும் இங்கு பயிரிடப்படுகிறது.

அடர்ந்த தென்னை, பலா தோப்புகளுக்குள்ளேயே வீடுகளைக் கட்டி மக்கள் வசித்து வருகின்றனர். ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்துக்கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை ரசனையாக நடத்திவருகின்றனர். இரவு, பகலாக இந்தப் பகுதி மக்கள் நிலத்தில் சிந்தும் வியர்வைதான் பாலைவனமாகக் கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தை சோலைவனமாக மாற்றியுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களின் எல்லையில் கல்லணைக் கால்வாய் ஓரமாக இருக்கும் நெடுவாசல் கிராமத்தில் சுமார் 200 அடியிலேயே நிலத்தடி நீர் கிடைக்கிறது.

திடீர் அதிர்ச்சி

கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு திட்டம் இப்பகுதியில் செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தங்கள் பகுதி மேம்படும், நமக்கெல்லாம் இலவசமாக எரிவாயு கிடைத்துவிடும் என்று இரவெல்லாம் பெண்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலத்தடியில் உள்ள தண்ணீர் பாதிக்கப்பட்டு பாலைவனமாகும். உள்ளூரில் அகதிகளாவோம் என்ற தகவல் கள் வெளிவந்து பெண்களின் மகிழ்ச்சியைக் கண்ணீராக மாற்றின. பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இந்தத் திட்டத்தின் பாதிப்பைச் சொன்னபோது ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சமூக வலைத்தளங்களில் விஷயம் காட்டுத்தீ போலப் பரவியது.

முற்றுப்புள்ளியில்லா போராட்டம்

விவசாயம், வீடு என்று இருந்த பெண்கள், முதல்முறையாக ஹைட்ரோகார்பனை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். கடந்த மூன்று மாதங்களாகப் பெண்கள் இன்றி ஒருநாள்கூட இங்கே போராட்டம் நடந்ததில்லை. ஒப்பாரி, கும்மி, சங்கு, கல்லணைக் கால்வாயில் இறங்குதல் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புதுவிதப் போராட்டத்தை இப்பகுதி மக்கள் கையிலெடுத்து வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு போராட்டக் களத்தில் ஒரு பெண் உயிரிழந்தது பெண்கள் மத்தியில் தீராத வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் திட்டத்தின் தீமை குறித்து அறிந்த பெண்கள், தங்கள் போராட்டத்தை விட்டு விலகுவதாக இல்லை. தமிழகத்தில் பெருநகரங்களில் தொடங்கி குக்கிராமங்கள்வரை இந்தத் திட்டம் சார்ந்து மத்திய அரசை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.



- ஆர்.மலர்ம்ணி

விவசாயம் உயிர்மூச்சு

போரட்டக் களத்தில் இருக்கும் ஆர். மலர்மணி, “முப்போகமும் விளையும் வளமான மண்ணைக் கொண்டது நெடுவாசல். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் வயல்களில் வேலை செய்வார்கள். நிலம் இல்லாதவர்கள் கூலி வேலைக்குச் செல்வார்கள். எல்லா நாட்களும் உள்ளூரில் வேலை இருந்துகொண்டே இருக்கும். ஆடு, மாடுகளை அதிகமாக வளர்க்கிறோம். விவசாயம்தான் எங்கள் வாழ்க்கை, விவசாயம்தான் எங்கள் வாழ்வாதாரம். விவசாயமே எங்கள் உயிர் மூச்சு. பெரிய படிப்பு படித்தவர்களைத் தவிர, நெடுவாசலிலிருந்து வேறு யாரும் வேலை தேடி வெளியூர் செல்வதில்லை.

இந்த விவசாயத்தை அழித்துவிட்டு ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிட்டால் நாங்கள் என்ன செய்வோம்? எங்கே போவோம்? நல்ல நிலத்தை எங்கள் கண் முன்னே பாலைவனமாக்க நாங்கள் ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம். திட்டத்தைக் கைவிடும்வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. அதோடு, போராட்டத்தின் வாயிலாகத்தான் விவசாயத்தின் மகத்துவம், விவசாயிகளுக்கான நன்மதிப்பு குறித்த புரிதல் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது” என்று ஆணித்தரமாகப் பேசுகிறார்.

வாழவிடுங்கள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடுவதாகக் கூறிய மத்திய அரசு, அடுத்த சில நாட்களிலேயே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ‘அனுமதிக்கமாட்டோம்’ என்று சொன்ன தமிழக அரசு, அதன் பிறகு மவுனமாகவே இருந்து வருகிறது.

“இதெல்லாம் அதிர்ச்சியளிக்கும் விதமாகவே இருக்கின்றன. அதனால் மீண்டும் போராட்டத்தை நடத்திவருகிறோம். வீட்டிலும் வயலிலும் கடுமையாக உழைத்தால்தான் குடும் பம் நடத்த முடியும். கிராமங்களில் குடும்பம் நடத்துவது அத்தனை எளிதல்ல. நாங்கள் யாரிடமும் எதையும் கொடுக்குமாறு கேட்கவில்லை. எங்களை நிம்மதியாக வாழவிட்டால் போதும்” என்கிறார் மலர்மணி.


போராட்டத்தில் மயங்கி விழுந்த லக்‌ஷ்மி

போராட்ட குணம் அதிகம்

வறுமையில் வாடும் பெண்கள்கூடத் தங்கள் கூலி வேலையை விட்டுவிட்டுப் போராடுவதற்காக வீதிக்கு வந்துவிட்டனர். இந்தப் போராட்டக் குணத்துக்கு, முன்னாள் கலெக்டர் ஷீலாராணி சுங்கத் தலைமையில் செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தின் தாக்கமும் ஒரு காரணம் என்கிறார்கள் பெண்கள். அவர் ஆட்சியராக இருந்த காலத்தில், இந்த ஊரைத் துவம்சம் செய்துகொண்டிருந்த சாராய விற்பனையை ஒழிக்கும் வகையில் இங்கு புதைக்கப்பட்டிருந்த ஏராளமான சாராய ஊறல் பானைகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

“பெண்ணுரிமைக்காகப் போராடிய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் இது. அதனால் எங்கள் ரத்தத்தில் போராட்டக் குணம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்தாகும்வரை தொடர்ந்து போராடுவோம். ஹைட்ரோகார்பனை எடுக்க எங்கு யார் வந்தாலும் பெண்கள் திரண்டு விரட்டியடிப்போம்” என்கிறார் மலர்மணி.

பெண்கள் அத்தனை சீக்கிரத்தில் போராட்டங்களில் இறங்குவதில்லை. அப்படி இறங்கினால் வெற்றி கிடைக்கும்வரை ஓய்வதில்லை என்பதைத் தமிழகத்தில் சமீபக் காலமாக பெண்கள் நடத்திவரும் போராட்டங்கள் உணர்த்தியிருக்கின்றன. மண்ணையும் மக்களையும் காப்பாற்றிக்கொள்வதற்குப் போராட்டம் ஒன்றைத் தவிர சிறந்த ஆயுதம் வேறெதுவும் இல்லை என்பதைப் பெண்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். அது உரிய பலனைத் தரும் என்று நெடுவாசல் பெண்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x