Published : 12 Mar 2017 01:41 PM
Last Updated : 12 Mar 2017 01:41 PM
சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஆண் பெண் சமத்துவம் என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பது சமூக அக்கறையின் வெளிப்பாடு. பாலினச் சமத்துவம் குறித்துப் பேசுவதை ஆண் எதிர்ப்பு கலாச்சாரமாகவே பலரும் புரிந்துகொள்கிறார்கள். உண்மையில் காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைபட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டெ டுத்து, விழிப்புணர்வு ஊட்டி, அனைத்துத் தளங்களிலும் ஆண்களுக்கு இணையான மதிப்பைப் பெற்றுத் தருவதுதான் பாலினச் சமத்துவப் பேச்சின் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால்,பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விழிப்புணர்வு பெற வேண்டும்.
பிறப்பு தொடங்கி இறப்புவரை பாலின வேற்றுமை இந்தச் சமூகத்தில் புரையோடி கிடக்கிறது. இயற்கை ஆண், பெண் இருபாலரையும் இருவேறு விதமாகப் படைத்திருப்பது எதிரெதிர் துருவங்கள் இணைந்து வாழும்போது அதன் ஈர்ப்பு அதிகரித்து ஆழப்படும் என்பதற்காகத்தான். ஆனால், மனிதன் ஆண்மை, பெண்மை என்று எதிரெதிர் கலாச்சாராங்களைக் கற்பித்துக் கொண்டது இயற்கைக்கு முரணானது.
மொழி என்பது மனிதன் தன் கருத்துப் பரிமாற்ற வசதிக்காக உருவாக்கிக்கொண்ட செயற்கைக் கருவி. அதனால் அவன் அதைத் தன் வசதிக்கேற்பவும் தேவைக்கேற்பவும் நோக்கத்திற்கேற்பவும் கையாள்கிறான். மொழி அறிவு என்பது ஆழமானது. அதில் பாலின பேதம் கற்பிப்பது அரசியல். ஆதிக்க மொழி அரசியலைக் கட்டுடைத்து, பாலினச் சமத்துவம் நோக்கிப் பயணிப்பது முதற் கட்டச் செயல்பாடு.
வருங்காலம் வசந்த காலம்
கற்பு என்ற பெயரில் பெண்களைக் காலம் காலமாகக் கட்டுப்படுத்தி, வீட்டுக் குள் அடைத்து, அவளின் பிரபஞ்ச இயக்கத்தைத் தகர்த்துவந்த ஆதிக்க மனப்பான்மையை இன்றைய பெண்கள் புரிந்துகொண்டுள்ளனர். கற்பைப் பெண்கள் மட்டும் பேணினால் பயனில்லை. ஆண்களும் அதனைக் கடைப்பிடிக்கும் போதுதான் கற்பு என்ற ஒழுக்கத்துக்கு அர்த்தம் உருவாகிறது. ஆண்களெல்லாம் கற்பு தவறினால் பெண்கள் எப்படிக் கற்பு பேண முடியும் என்ற பகுத்தறிவுச் சிந்தனையைப் பெண்ணினத்துக்குப் பாரதியார் புதிய விடியலாகத் தந்துள்ளார்.
ஆணின் ஆதிக்க மனப்பான்மையின் மற்றொரு வடிவம் வன்முறை. பிஞ்சுப் பெண் குழந்தைகள்கூட இந்த வன்முறையிலிருந்து தப்ப முடிவதில்லை. இது போன்ற கொடுமைகள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நேற்றும் இன்றும் போல் நாளை என்பது ஆண்கள் கையில் இல்லை . எதிர்காலத்தில் காணவிருக்கும் இருபாலரின் குடும்பக் கூட்டாட்சித் தத்துவத்தில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.
பெண்கள் தங்களை அடிமைப்படுத்தும் கலாச்சாரங்களிலிருந்து விடுபட்டு, தங்கள் ஆளுமையை வளர்த்தெடுக்க வேண்டும். குடும்பத்திலும் சமூகத்திலும் தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். குடும்பத்தில் பெண்கள் விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்பது பழைய தத்துவமாகிவிட்டது. பாலினக் கூட்டாட்சியில் இருபாலரும் தங்களுக்கான தனித்துவத்தை வளர்தெடுப்பது இந்தக் காலத் தத்துவம். பெண்களின் ஆற்றல் அளவிடற்கரியது. ஆணும் பெண்ணும் இணைந்து சம அந்தஸ்தில் செயலாற்றுவதால், அடிமைத்துவமும் அதிகாரமும் இல்லாத புதிய உலகைப் படைக்க முடியும் என்பதைத் தந்தையாண்மைச் சமூகம் உணர வேண்டும்.
உலகமெங்கும் மார்ச் 8-ம் தேதி மட்டுமன்றி, அந்த மாதம் முழுவதும் ஏதாவது ஒரு நாளில் மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில், பெண்கள் அனைவரும் தம்மை அடிமைப்படுத்தும் கலாச்சாரங்களிலிருந்து விடுபட உறுதி எடுக்க வேண்டும். ஆண்கள் அனைவரும் பெண்களைத் தங்கள் சக உயிரிகளாக மதித்து நடத்த முன்வர வேண்டும்.
(நிறைவடைந்தது)
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT