Last Updated : 26 Jun, 2016 04:32 PM

 

Published : 26 Jun 2016 04:32 PM
Last Updated : 26 Jun 2016 04:32 PM

பெண் என்பவள் வெறும் பிண்டம்தானா?

விரசமான வார்த்தைகளில் தொடங்கி சாலையில் நடக்கும்போது வெறித்துப் பார்ப்பதுவரை பெண்களை ஒரு பிண்டப் பொருளாகப் பார்க்கும் செயல்கள் ஏராளம். பெண்களின் ஆளுமை, அனுபவம் எல்லாவற்றையுமே குறுக்கி அவர்களை ஒரு உடலாக மட்டுமே பார்ப்பதும் கருதுவதும்தான் ‘பிண்டப் பொருளாக்கும் பார்வை’ (Objectification). தாங்கள் பிண்டப் பொருளாகக் கருதிப் பார்க்கப்பட்ட அனுபவங்களை மூன்று பெண்கள் இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

வெண்டி டேவிஸ்,53, டெக்ஸாஸ் மாகாணத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்

டெக்ஸாஸ் மாகாணத்தில் நீதித்துறைப் பணியாளர் தேர்வுக்கான நேர்முகத்தில் வெள்ளையினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்: “கூடிய சீக்கிரம் நீங்கள் கர்ப்பமாக மாட்டீர்கள் அல்லவா?” ஒருமுறை முச்சிழுத்துவிட்டு யோசித்தேன். “நீதிபதி அவர்களே, என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?” என்று கேட்டேன்

. “இது உங்களைச் சோதித்துப்பார்ப்பதற்கான ஒரு கேள்விதான்” என்றார் அவர். பெண்களிடம் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்த வழக்குகள் உட்பட பல வழக்குகளை எதிர்கொள்ளக் கூடிய அந்த நீதிபதி ஒரு ஆணிடம் இது போன்ற கேள்விகளை ஒருபோதும் கேட்க மாட்டார். நாம் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணாக இருந்தோம் என்றால் பாகுபாட்டுடன்தான் நடத்தப்படுவோம் அல்லவா!

சமீபத்தில் ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் மேகின் கெல்லியை நோக்கிப் பாலினப் பாகுபாட்டு வார்த்தைகளை டொனால்டு ட்ரம்ப் வீசியபோது இன்னொரு இதழாளர் எரிக் எரிக்ஸன் அதை எதிர்த்துப் பேசினார். அது எனக்கு ஆச்சரியமூட்டியது. ஏனென்றால் கருக்கலைப்புக்கு ஆதரவாக நான் ஒரு இயக்கத்தை மேற்கொண்டிருந்தபோது அது போன்ற வார்த்தைகளை என்னை நோக்கி வீசியவர்தான் எரிக்ஸன். என்னை ‘அபார்ஷன் பார்பி’ என்று கிண்டலடித்தார். இதைப் பற்றி நான் அவரிடம் எதிர்ப்பு தெரிவித்தபோது எனது அழகைப் புகழ்ந்துதான் அப்படிச் சொன்னதாகக் கூறி சமாளித்தார்.

டிரேசி கிளேட்டன்,34, எழுத்தாளர்

எனக்கு அப்போது 14 வயது இருக்கும். அப்போது என்னுடைய வார விடுமுறை நாட்கள். நாங்கள் இருந்த கெண்டக்கி பகுதியில் ஒரே கொண்டாட்டமும் கும்மாளமுமாக இருந்தது. கொண்டாட்டங்களின் முடிவில் இரவு நேரத்தில் வீட்டை நோக்கி நான் நடந்துகொண்டிருந்தேன். அந்நியர் ஒருவர் என்னருகில் நடந்துவந்தபடி என்னிடம் பேச்சுக்கொடுத்தார். என் வயதைக் கேட்டார். நான் அழகாக இருக்கிறேன் என்று சொன்னார். எனக்குப் பின்னால் என் நண்பர்களெல்லாம் வந்துகொண்டிருந்ததால் நான் பயமின்றி அந்த நபரிடம் பேசினேன்.

திடீரென்று, என்னுடைய அந்தரங்க உறுப்புகள் அழகாக இருக்கும் என்று அவர் பேச நான் அதிர்ந்துபோனேன். அவரை நான் கடுமையாகத் திட்டினேன். அந்த நபர் மன்னிப்பு கேட்டார். நானும் நண்பர்களும் வீடு நோக்கி விரைந்தோம். எனது உடல் உறுப்புகள் பற்றிய எண்ணத்தை எனக்கு ஊட்டி, அவை குறித்த அவமான உணர்வை ஏற்படுத்திவிட்டு போனார் அந்த நபர். அப்படியே காற்றில் கரைந்து காணாமல் போய்விட வேண்டும் என்று அப்போது தோன்றியது. இந்த மாதிரி எனக்கு நடப்பது இனியும் தொடரத்தான் செய்யும் என்றும் எனக்கு அப்போது தோன்றியது.

என்னை ஒரு பிண்டப் பொருளாக ஆக்கிய உணர்வை சில நாட்களுக்கு முன்பும் எதிர்கொண்டேன். 10.30 மணியளவில் ரயிலை விட்டு இறங்கி வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அங்கே நிறைய பேர் இருந்தாலும் நான் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் இருந்தேன். இசையை ஓட விடாமல் காதுகளில் என்னுடைய செவியிசைக் கருவியை வெறுமனே பொருத்திக்கொண்டு நடந்துகொண்டிருந்தேன். யாராவது பின்தொடர்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே நடந்தேன்.

அப்போது பின்புறத்திலிருந்து இரண்டு பேர் என்னை நோக்கி வந்துகொண்டிருந்ததைக் கண்டு தலையைத் தாழ்த்திக்கொண்டு வேகமாக நான் நடக்க ஆரம்பித்தேன். அவர்களில் ஒருவன் என் காதுக்கருகில் “அருமையான பிட்டம்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஏதாவது செய்து அவர்களை நான் அசிங்கப்படுத்தியிருக்கலாம். ஆனால் நான் செய்யவில்லை, செய்யவும் முடியாது.

அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று எனக்குத் தெரியும். அவர்களிடம் நான் என்ன சொன்னாலும் இன்னொரு பெண்ணிடம் சில நிமிடங்கள் கழித்து அவர்கள் நடந்துகொள்ளக்கூடிய விதத்தை அது மாற்றாது என்பதால் என்னுடைய பாதுகாப்பைக் கருதி வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இஸபெல் வின்செண்ட்,51, புலனாய்வுச் செய்தியாளர்

ஹைடி நாட்டில் அமெரிக்க ஊடுருவலைப் பற்றிச் செய்தி சேகரிப்பதற்கு 1994-ல் விமானப் பயணத்தின்போது எனக்கு முதல் அனுபவம் ஏற்பட்டது. இருபதுகளின் இறுதியில் இருந்தேன் நான். விமானத்தில் எனக்கு அருகே உள்ள தொழிலதிபர் என்னிடம் சொன்னார், “ஹைடி உன்னைப் போன்று தனியாக இருக்கும் பெண்ணுக்கு ஏற்ற இடம் கிடையாது” என்றார். எனக்குத் திகீரென்று ஆகிவிட்டது. அவர் சொன்னது சரியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, “இதுதான் எனது வேலை” என்று அவரிடம் சொல்லிவிட்டு அதற்குப் பிறகு அவரிடம் ஏதும் பேசாமல் இருந்தேன். ஐநா வெளியேறிய பிறகு ஹைடியில் மிக மோசமான வன்முறைகள் நிகழ்ந்தனதான்.

பின்தங்கிய நாடுகளைப் பற்றிச் செய்தி சேகரிக்கும்போது பாலினரீதியான பாகுபாடுகளை ஒருவகையில் எனது வேலைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டேன். பிரேசில், நிகாரகுவா போன்ற முரட்டுப் பிரதேசங்களில் என்னை யாருமே பொருட்படுத்தியதில்லை. அதில் ஒரு வசதி என்னவென்றால் நமக்கு அவர்கள் பயப்படுவதில்லை என்பதால் நிறைய தகவல்களை நமக்குச் சொல்லிவிடுவார்கள்.

அப்படித்தான் பல தகவல்களை நான் பெற்றேன். பிரேசிலில் என்னை ‘குட்டி’ என்றுதான் அழைத்தார்கள். என்னைப் போன்ற ஒரு பெண், போர்ப் பிராந்தியங்களிலும் மூன்றாம் உலக நாடுகளின் மோசமான சூழல்களிலும் திரிவதைக் கண்டு பலரும் அதிர்ந்துதான் போனார்கள்.

எனது புத்தகம் ஒன்றுக்காக எனது 94 வயது நண்பர் எட்வரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தேன். “பெண்கள் தாங்கள் யார் என்பதையும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது” என்று அவர் என்னிடம் சொன்னார். அவர் பழைய ஆசாமி என்பதாலும் என்னிடம் வாஞ்சையாகப் பேசுபவர் என்பதாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

� தி கார்டியன்,சுருக்கமாகத் தமிழில்:ஆசை

ஓவியங்கள்: செலின்

உங்கள் கருத்து என்ன?

தோழிகளே, நீங்களோ அல்லது உங்கள் தோழிகளோ இது போன்ற அனுபவத்தைக் கடந்துவந்திருக்கலாம். சிலர் இது போன்ற சூழ்நிலையில் தவறிழைத்தவர்களைத் தட்டிக் கேட்டிருக்கலாம். சிலர் சாதுர்யமாகச் சமாளித்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் அனுபவம், மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் அல்லவா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x