Published : 07 May 2017 10:53 AM
Last Updated : 07 May 2017 10:53 AM
காஷ்மீர் பெண்களின் அவலம்
சுதந்திரப் பத்திரிகையாளர் ப்ரெனி மானெக் ஷா, காஷ்மீரில் வாழும் பெண்களின் நிலை குறித்த ஆவணமாக ‘பிஹோல்ட், ஐ ஷைன்’ நூலை எழுதியுள்ளார். ஆயுதப் படையினரால் பாலியல் துன்புறுத்தல், ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்போது ஏற்படும் இறுக்கம், எதிர் குரல்களை எழுப்புவதற்கு நிலவும் தடைகள் குறித்து இந்நூலில் பேசப்பட்டுள்ளன. மனித உரிமைச் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான எஸ்ஸார் பட்டூலின் நேர்காணலில் பாதுகாப்புப் படையினர் தொடர்பான பாலியல் குற்றங்களைச் செய்திகளாகப் பதிவுசெய்வதில் உள்ள சிக்கல்கள் பேசப்படுகின்றன. புகார் கொடுத்த பெண்கள் தொடர் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் இந்த நேர்காணலில் அவர் பதிவுசெய்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு படைவீரர்கூட சட்டப்படி தண்டனை பெறவில்லை என்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் தனது நேர்காணலில் பதிவுசெய்துள்ளார்.
பெண்கள் வெட்டிய கிணறுகள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பூகோட்டுக்காவு கிராமத்தில் வறட்சியைச் சமாளிக்கும் வண்ணம் 300 பெண்கள் சேர்ந்து கடந்த ஆறு மாதங்களில் 190 கிணறுகளை வெட்டியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளம் அறிவிக்கப்பட்ட நிலையில், பூக்கோட்டுக்காவு கிராமத்துப் பெண்கள் கிணறுகளை வெட்டத் தொடங்கினார்கள். மண்வெட்டிகள், மண் அள்ளும் கரண்டிகளை இதுவரை பிடிக்காத கரங்கள் அவை. “கூட்டாகச் சேர்ந்து வேலை செய்வதில் உற்சாகம் இருந்தது. தற்போது 80 அடிவரை எங்களால் எளிதாகத் தோண்டமுடியும்” என்கிறார் கிணறு வெட்டும் பெண்களில் ஒருவரான ராதா.
சினிமாவாகும் ஒலிம்பிக் நாயகி கதை
ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது. இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான சோனு சூட் இப்படத்தை எடுக்கவுள்ளார். “கடுமையாக உழைப்பதன் மூலம் எந்தப் பெரிய கனவையும் நனவாக்க முடியும் என்பதை இந்தியர்களுக்கு உணர்த்தியவர் பி.வி. சிந்து. அவரது கதையைப் படமாக எடுப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார் சோனு. இந்தப் படத்துக்காக சிந்துவின் வாழ்க்கையை ஆய்வு செய்து திரைக்கதையை உருவாக்கியுள்ளதாகப் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் பி.வி. சிந்து.
குறையும் வேலை ஆற்றல்
‘இந்தியாவில் பெண்கள் வேலை ஆற்றல் குறித்த மறுமதிப்பீடு’ என்ற பெயரில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை ஆற்றலில் பெண்களின் பங்களிப்பு குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகரித்துவரும் வருவாய், குடும்பங்களின் நிலைத்ததன்மை அதிகரித்திருப்பதும் பெண்களின் வேலைப் பங்களிப்பைக் குறைத்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. 2004 முதல் 2012-ம் வரையுள்ள இந்திய அரசு அறிக்கைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் 1.96 லட்சம் பெண்களுடைய வேலை ஆற்றல் குறைந்திருப்பதாக கூறியுள்ளது. இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமத்துப் பெண்கள். இந்திய வேலை ஆற்றலில் பெண்கள் தற்போது 27 சதவீதம் பங்கு வகிக்கின்றனர். பிரிக்ஸ் நாடுகளில் மிகக் குறைந்த அளவில் பெண்களின் வேலை ஆற்றல் பங்கீட்டைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. ஜி- 20 நாடுகளிடையே சவுதி அரேபியாவுக்கு முந்தைய நிலையில் இந்தியா இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT