Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

விவாத மேடை : ஆண்கள் தகுதியை விரிவாக்கிக்கொள்ளட்டும்

தமிழகத்தில் பெரியார் வழி வந்த முக்கியக் கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர், ஒரு திருமண நிகழ்வில் சமீபத்தில் பேசினார். அவர், "இப்போது பெண்கள் படித்துவிட்டு வேலைக்குச் செல்வதில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றனர். அதை மாற்றி குடும்பத்தைக் கவனிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை கிடைக்கும். ஏனென்றால், இன்றைக்குப் படித்த குடும்பங்களில்தான் அதிக அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து நடக்கிறது' என்றார்." இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.

ஆண்கள் போலப் பெண்கள் உடை அணிந்து கொள்ளட்டும், ஆண் போலச் சிகை வைத்துக் கொள்ளட்டும் என்று பேசினார் பெரியார். அவர் வழி வந்தவர்கள், ஆண் போல வேலைக்குச் செல்வதை எப்படி எதிர்க்க முடியும் என்பது புரியவில்லை. ஆண்களைப் போல எல்லா விஷயங்களிலும் பெண்களும் அக்கறை இல்லாமல் போய்விடுவார்களோ என்ற பயம் வந்துவிடுகிறது போலிருக்கிறது.ஆண்களின் பொறுப்பில்லாத் தனமும் அல்லது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலும் அதன்மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரமும் பறிபோய்விடும் என்ற பயமும் இத்துடன் சேர்ந்திருக்கும். உண்மையில், ஆண்கள் அடைந்த எல்லையையும் தாண்டிப் பெண்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெண் பிள்ளைகளின் கல்வித் தகுதியைப் பதிவு செய்யக் காத்துக் கொண்டிருந்தார்கள் இரு தாய்மார்கள். அலுவலகம் திறக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. ஒரு தாய் கூறுகிறாள், “இந்தக் காலத்துப் பெண் பிள்ளைகளுக்கு எவ்வளவு சுமை? படிச்சு வேலையும் பாத்துகிட்டு வீட்டையும் பாத்துக்கணும். ஏதோ நம்மகிட்ட இருக்கறவரைக்கும் சரி. நாமப் பாத்துக்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம் அதுங்க பாடு பெரும்பாடுதான்.” என்று. மற்றொரு தாய் கூறுகிறாள், “கொஞ்சம் கஷ்டப்பட்டா நாளைக்கு அவங்க வாழ்க்கை தானே நல்லாருக்கப் போகுது? அப்பவெல்லாம் நம்ம பெத்தவங்க நம்மள படிக்க வைக்கல. இன்னைக்கு நம்ம புள்ளைங்க படிக்கறாங்க. நாலு காசு அவங்க கையில இருந்தா நல்லது தானே?” என்று.

இந்த இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, இரண்டுமே சரியான வாக்குமூலங்களாகவே பட்டன. முதலில் கூறியவர், பெண்ணுக்கு இருக்கும் இரட்டைச்சுமை பற்றிக் கவலைப்படுகிறார். அதனால் பெண்கள் வீட்டிலேயே இருந்துவிடப் பரிந்துரைக்கலாமா? அப்படிச் செய்வது பெண்ணுக்குத் துன்பமே இழைக்கும். இரண்டாவது பெண்மணி கூறியது போல அலுவலக, வீட்டு வேலைகளையும் பெண் செய்தால், அவள் தனது சம்பாத்தியத்தைச் சிறிதளவேனும் அனுபவிக்க முடியும். அதற்காக, பெண் மிகுந்த சிரத்தை எடுத்துச் செயல்பட வேண்டும். அவள் உடல் அல்லல் படும். இன்றைய காலத்தில் வீட்டு வேலைகளையும் அலுவலகப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பத்து கைகள் கொண்ட காளிபோலத்தான். எப்போதும் அமைதியற்ற வாழ்க்கை, அவர்களுடையதாகிறது.

வீட்டு வேலைகள் என்பது என்ன? காய்கறி,மளிகை பொருட்கள் வாங்குவது, சமைப்பது, குழந்தை பராமரிப்பு, மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு விருந்தோம்பல் புரிவது, துவைப்பது, பாத்திரம் கழுவுதல், வீட்டையும் கழிப்பறைகளையும் தூய்மைப்படுத்துதல் போன்றவை.கல்வி, வெளி வேலைகள் மறுக்கப்பட்ட காலத்தில் இந்தப் பணிகள் பெண்களுக்கு என்று வரையறுக்கப்பட்டிருந்தன. இன்று படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணும் மேற்படி வேலைகள் அனைத்தையும் செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறாள்.

மருமகள், மனைவி என்ற வார்த்தைகள் கடமைகளால் செதுக்கப்பட்டவை. தியாகத்தால் உருவாக்கப்பட்டவை. எனவே பெண் வேலைக்குச் சென்றாலும், மனைவி, மருமகள் என்ற இடத்திற்கு வந்துவிடும்போது அதற்கான கடமைகளை ஆற்றவேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இந்தக் கடமைகளை, தான் செய்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் ஊறிப் போயிருக்கிறாள். அப்போதுதான் தானொரு நல்ல மனைவி, மருமகள் என்று தன்னைத் தானே ஏற்றுக்கொள்கிறாள். இந்தச் சமூகம் பெண்ணை அந்தச் சிந்தனையில் வார்த்தெடுத்து விடுகிறது.

வேலைக்குப் போகும் பெண்கள் ஒரு நாளில் 16 மணி நேரம் வேலை செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண் தனது வேலை செய்யும் திறனை விரிவுபடுத்தியிருக்கிறாள். இந்தச் சாகசத்தில் அவள் சில சமயங்களில் தடுமாறுவதுண்டு. அந்தக் கணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்களும் ஆண்மைய சிந்தனையில் ஊறிப்போன பெண்களும் அவளைக் குறை கூறுவதுண்டு. இங்குதான் சிக்கல் எழுகிறது. வீட்டைப் பராமரிக்க, கடமைகளை செய்யப் பெண் வீட்டிலேயே இருப்பதா? இல்லை , வீட்டுக் கடமைகளைச் செய்துவிட்டு அதில் குறை இருந்தால் அதற்காக வசவும் வாங்கிக்கொண்டு தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ள வேலைக்குச் செல்வதா? பெண்ணுக்கு இதில் எது ஏற்றது?

இரண்டிலும் சிக்கல் பெண்ணுக்குத்தான். 4இல் 3 பங்கு படித்த பெண்கள் வீட்டுக் கடமைகளைச் செய்து நல்ல மருமகள், மனைவி, தாய், அண்ணி போன்ற பட்டத்தை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். பெண் என்னும் மனிதப் பிறவிக்கான தன் சுய அடையாளத்தை அவர்களால் கட்டி எழுப்ப முடிவதில்லை. இங்கு பெண் படித்திருப்பது அவள் பெற்றோரின் மற்றும் புகுந்த வீட்டின் பெருமையாக மட்டும் இருக்கிறது.

இத்தகைய தடைகளை மீறி, தங்கள் தகுதியை (capacity) உயர்த்திக்கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், பலவீனமானவர்கள் என்ற மதிப்பீட்டை மாற்றியிருக்கிறார்கள். இங்கு தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் ஆண்கள்தான். வேலைக்குச் சென்று வரும் ஆணுக்கு வீட்டிற்கு வந்தவுடன் டீ கொடுத்து அவனுக்குப் பிடித்ததைக் கேட்டுச் சமைத்துக் கொடுத்து, குழந்தைகள் தொந்தரவு செய்யாதவாறு தூங்க வைத்து, அவன் துணிகளைத் துவைத்து மீண்டும் அலுவலகம் செல்ல ஆவன செய்கிறாள் மனைவி. என்ன ராஜ வாழ்க்கை ஆண்களுக்கு? இவை, வேலைக்குப் போகும் பெண்களும் கணவன்களுக்குச் செய்யும் கடமைகள். ஏனென்றால் அவள் மனைவி. இந்தச் சொல்தான் எத்தனை கடமைகளை ஏற்று நிற்கிறது.

வேலைக்குச் சென்றாலும் வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண் மீண்டும் புகுந்த வீட்டிற்கான கௌரவமான பொருளாகவே பார்க்கப்படுகிறாள். அவளது சாதனைகளை வீட்டின் கௌரவமாகக் கருதும் ஆண்கள், அவளது வேலைப் பளுவில் பங்கெடுத்துக்கொள்ளத் தயாராக இல்லை. வீட்டு வேலைகளை பெண் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கூறுவதற்கு ஒரே காரணம் அவள் பெண் என்பதுதான். வீட்டு வேலைகளை ஆண் கவனித்துக் கொள்ளாததற்கு ஒரே காரணம் அவன் ஆண் என்பதுதான். உடல் அமைப்பை விடுத்தது ஆண் என்பதற்கும் பெண் என்பதற்கும் சமூகம் கொடுத்திருக்கும் இலக்கணம் என்ன? மதிப்பீடு என்ன?

வீட்டுக் கடமைகளை ஆண்கள் செய்யும்போது அல்லது அவனது வேலைகளை அவனே செய்யும்போது, சமூகம் அவனைக் கேலி பேசுகிறது.

‘என்ன பொம்பள மாதிரி வேலை செய்யறான்?' வீட்டு வேலைகளைச் செய்ய நினைக்கும் ஆண்களும் இந்த எழுதப்படாத சட்டத்திற்காகத் தங்கள் எண்ணத்தை மாற்றி கொள்கிறார்கள். இந்தச் சட்டங்களைத் தக்க சமயத்தில் மொழிபவர்கள் ஆண்களோடு பெண்களும்தான். இந்த எண்ணம் மாற வேண்டும். இந்திய வாழ்வு முறையின் அடிப்படை அலகான குடும்ப அமைப்பிலிருந்துதான் அந்த மாற்றம் தொடங்க வேண்டும். இதைப் புரிந்துகொண்டால் விவாகரத்துக்குக் காரணம், வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் என்ற கூற்று, எவ்வளவு பத்தாம்பசலித்தனமானது என்பது புரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x