Published : 18 Sep 2016 11:17 AM
Last Updated : 18 Sep 2016 11:17 AM
மருத்துவ மனையில் இருந்து வெளியே வந்த ராஜாவுக்குத் தொண்டையில் ஏதோ அடைத்தது. கண்கள் கலங்கின. உடல் நடுங்கியது. பதற்றத்தைக் குறைப்பதற்காக எதிரில் இருந்த டீ கடைக்கு வந்தான். சூடான டீ உள்ளே இறங்கியதும் கொஞ்சம் தெம்பு கிடைத்தது போலிருந்தது. ஆனாலும் வீட்டுக்குச் செல்லும் துணிவு வரவில்லை. கால் போன போக்கில் நடந்து, நேரத்தைக் கடத்தினான்.
இனியும் பொழுதைக் கடத்த முடியாது. இதுவரை 8 தடவை அழைத்துவிட்டாள் திவ்யா. வீட்டுக்குள் நுழைந்தபோது இரவு 11 மணி. திவ்யாவைப் பார்ப்பதைத் தவிர்த்து, குளியலறைக்குள் சென்றான். கணவனின் நடவடிக்கையை வைத்து ஏதோ விபரீதம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் திவ்யா. அவனது பையில் வைத்திருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தாள். அதிர்ந்து போனாள்.
குளியலறையில் இருந்து வெளியே வந்த ராஜா, திவ்யாவைத் தேடினான். சோபாவில் அவள் உட்கார்ந்திருந்த காட்சி, அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டதை உணர்த்தியது.
“உன்னை யார் என் பேக் எல்லாம் எடுக்கச் சொன்னது?’’ என்று கோபத்துடன் அவளைக் கேட்டான்.
திவ்யா கண்ணீருடன் அவனைப் பார்த்தாள். உடனே அருகில் அமர்ந்து, ஆறுதலாகத் தோளைப் பற்றினான்.
“திவ்யா, உனக்கு ஒண்ணும் இல்ல… இந்தக் காலத்தில் புற்றுநோய் தீர்க்க முடியாத பிரச்சினை இல்ல…’’ என்று வார்த்தைகளில் தைரியம் காட்டினாலும், அவன் குரல் உடைந்தது.
இருவரும் அழுதார்கள். அமைதியானார்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொன்னார்கள். மீண்டும் அழுதார்கள். நல்ல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற முடிவோடு படுக்கப் போனார்கள்.
அசதியில் ராஜா தூங்கிவிட்டான். திவ்யாவுக்குத் தூக்கம் வரவில்லை. மெடிக்கல் ரிப்போர்ட்டை வாட்ஸ் அப் மூலம் தன் தோழி ரஞ்சனிக்கு அனுப்பி வைத்தாள். பத்தே நிமிடங்களில் ரஞ்சனி அழைத்தாள். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள்.
ராஜா கண் விழித்தான். முதல் நாள் நடந்தது கனவா என்று யோசித்தான். மேஜையில் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட் உண்மை என்றது. வீட்டில் எந்தச் சத்தமும் இல்லை. குழந்தைகள் எங்கே என்று யோசித்தவன், கடிகாரத்தைப் பார்த்தான். 8.30. அவசரமாகப் பல் தேய்த்துவிட்டு, வெளியே வந்தான்.
சூடான காபியுடன் திவ்யா வந்து நின்றாள். குட்மார்னிங் என்றபடி சிரித்தாள். ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இன்னிக்கு லீவ் போட்டுட்டு, நல்ல டாக்டரைப் பார்ப்போம்…’’
“உங்களுக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. ஆபிஸ் போங்க. ரஞ்சனி என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாள்…’’
“மீட்டிங்கா முக்கியம்? நானும் வரேன்…’’
“பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருத்துவம் இருக்குன்னு ரஞ்சனி சொன்னாள். சில புற்றுநோய்கள் நீண்ட காலத்துக்குப் பிறகுதான் ஆபத்தை விளைவிக்குமாம். கவலைப்படாதீங்க, ஒண்ணும் பிரச்சினை வராது’’ என்று சிரித்தாள் திவ்யா.
“என்ன சொன்னாலும் புற்றுநோய்னு சொன்னால் பயப்படாமலா இருக்க முடியும்?’’
“இங்கே பாருங்க… இறப்பை யாராலும் தவிர்க்க முடியாது… ஒருவேளை தீர்க்க முடியாத புற்றுநோயாக இருந்தாலும் இப்ப என்ன செய்ய முடியும்? இருக்கிற காலத்தை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்ந்துட்டுப் போகணும். எப்பவோ நடக்கப் போற அசம்பாவிதத்துக்காக இப்ப இருக்கிற அற்புதமான கணங்களைத் தொலைச்சி, வாழ்க்கையை நரகமாக்கிடக் கூடாது. உங்களையும் குழந்தைகளையும் சுயமா வாழறதுக்கு முதலில் பழக்கணும். ஏகப்பட்ட வேலைகள் இருக்கு… இனி ஒரு நொடியையும் வீணாக்க நான் தயாரில்லை’’ என்றாள் திவ்யா.
ஆச்சரியத்தில் உறைந்து போனான் ராஜா. கண்ணீர் வழிந்தது.
மொபைல் அலறியது.
“உங்க மொபைல்தான்… பேசுங்க’’ என்று ராஜாவை உலுக்கினாள் திவ்யா.
“சொல்லுங்க ரஞ்சனி… நிஜமாகத்தானா? இப்பதான் உயிரே திரும்பி வந்தது. ஈவ்னிங் நானே திவ்யாவை அழைச்சிட்டு டாக்டர் கிட்ட வரேன்… தேங்க்ஸ்’’ என்றபடி திவ்யாவைப் பார்த்தான்.
“என்னவாம்?’’
“ரஞ்சனி ரிப்போர்ட்டை டாக்டர் கிட்ட காட்டிட்டாங்களாம். இது ரொம்ப ஆரம்ப ஸ்டேஜ்தானாம். ஆறு மாதம் ட்ரீட்மெண்ட் எடுத்தால் குணமாகிடலாம்னு சொன்னாராம்…’’
“அப்பாடி! ரொம்பப் பயந்துட்டீங்க இல்ல…’’
’’இல்லைன்னு சொல்ல மாட்டேன்… உன் தைரியத்துக்கு முன்னால எதுவும் ஒண்ணும் பண்ண முடியாது திவ்யா’’ என்று கைகளைப் பிடித்துக்கொண்டான் ராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT