Last Updated : 05 Feb, 2017 01:12 PM

 

Published : 05 Feb 2017 01:12 PM
Last Updated : 05 Feb 2017 01:12 PM

சட்டமே துணை: கணவனை இழந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது யார்?

திருமணமாகி மூன்றே மாதங்களுக்குள் மாமியாரும் மாமனாரும் குமுதாவைப் பாடாய்ப்படுத்திவிட்டனர். அதைக் கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கக்கூடிய தன்னம்பிக்கை இல்லாததால் குமுதாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. கணவர் கணேஷ் நல்லவ ராக இருந்தாலும், தன் பெற்றோரை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியம் அவருக்கு இல்லை.

குமுதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணேஷ் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் குமுதாவுக்குக் குறைப் பிரசவத்தில் மகன் பிறந்தான். எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. அப்பாவும் அண்ணனும் குமுதாவை அழைத்துச் செல்ல வாழ்க்கைச் சூழல் இடம் கொடுக்கவில்லை. தங்கள் மகனே போன பிறகு மருமகள் எதற்கு என்கிற மனோபாவத்துடன் மாமனார் வீட்டில் நடந்துகொண்டனர்.

கணேஷின் பைக்கில் மோதிய 17 வயதுச் சிறுவன் காயங்களுடன் தப்பிவிட்டான். அவனுக்கு ஓட்டுநர் உரிமம் கிடையாது. வண்டிக்கு இன்சூரன்ஸ் கிடையாது. அதனால் காவல் துறை இந்த வழக்கில் ஆர்வம் காட்டவில்லை. குமுதாவின் அண்ணன் வழக்குப் பதிவு செய்யும்போது, சிறுவனின் தந்தையின் சொத்து அல்லது வருமானத்தைப் பிடித்தம் செய்துதான் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் வரக்கூடிய தொகையில் மூன்று பங்குகளாகப் பிரித்து கணேஷின் அம்மா, மனைவி, குழந்தைக்கு என்று நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் வழக்கறிஞர் சொன்னார்.

அடைக்கப்பட்ட கதவுகள்

குமுதாவின் அண்ணன் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தையைச் சந்தித்தார். அவர் தனக்கு எவ்வித வருமானமும் இல்லை என்றும் வீட்டுக் கடனை கட்ட முடியாததால் வங்கியே வீட்டை எடுத்துக்கொண்டதாகவும் சொன்னார். குமுதாவுக்கும் குழந்தைக்கும் பராமரிப்புச் செலவுக்கான ஜீவனாம்சத்தைக் கொடுப்பது யார்?

இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்ச சட்டம் இந்த நிலையைப் பற்றிக் கூறுவதாக வழக்கறிஞர் தெரிவித்தார். குமுதாவுக்கும் குழந்தைக்குமான ஜீவனாம்ச உரிமையை மாமனார் மறுக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார் குமுதா. அதைப் பற்றிக் குமுதா கேட்டபோது தனக்கும் தன் மனைவிக்கும் சேமிப்பும் சொத்தும் அவசியம் என்று சொன்னதுடன் குமுதாவிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டார் மாமனார்.

இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்ச சட்டம் மூலம் தனக்கும் குழந்தைக்கும் மாதந்தோறும் பராமரிப்புச் செலவுக்கான தொகையைத் தர வேண்டும் என்றும் அவர்களுடன் சேர்ந்து வாழ உத்தரவிடக் கோரியும் மனு செய்தார் குமுதா. தானே ஒரு பென்ஷன்தாரார், தன் மகன் உயிருடன் இருந்தபோதே குமுதா தங்களைக் கொடுமைப்படுத்தியதால் வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது என்றார் மாமனார்.

தெளிவு வேண்டும்

கணேஷுடன் வாழ்ந்த காலத்தில் அவரது பணி, அவருக்கு வர வேண்டிய பாட்டன் சொத்து குறித்து எந்த விஷயத்தையும் தெரிந்துகொள்ளாமல் இருந்தது தவறு என்று உணர்ந்தார் குமுதா. குமுதாவின் அண்ணன் அலைந்து திரிந்து சொத்து பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டியிருந்தது. இரண்டாண்டுகள் வழக்கு நடந்த பின்னர், மாதம் பன்னிரண்டாயிரம் ரூபாய் ஜீவனாம்சமாகத் தரும்படி தீர்ப்பு வந்தது. சொத்துகளை மாமனார் பராமரிக்கிறார் என்ற முறையில் அந்தத் தொகை கணக்கிடப்பட்டிருந்தது. இந்தத் தொகையில் தனி வீடு பிடித்து வாழ முடியாது என்பதால் மேல் முறையீடு செய்யத் தயாரானார் குமுதா. அவருடைய மாமனார் தன் வீட்டின் ஒரு பகுதியில் வாழ அனுமதிப்பதாக தெரிவித்தார். ஒருவேளை குமுதாவின் மாமனார் காலமாகிவிட்டாலும் மாமனாரின் வாரிசுகள் குமுதாவையும் குழந்தையையும் பராமரிக்க வேண்டும் என்றும், அந்த வாரிசுகளுக்கு மாமனாரின் சொத்து (சுய சம்பாத்தியம் அல்லது பாரம்பரிய சொத்து) வந்தாலும் அவர்கள், இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்ச சட்டப்படி இருவரையும் பராமரித்தே ஆக வேண்டும் என்ற சட்டத்தையும் எடுத்துச் சொன்னார் வழக்கறிஞர்.

சட்டப்படி ஐந்து வயது நிறைவுறும்வரை குழந்தை, தந்தையே கோரினாலும் தாயின் அரவணைப்பிலேயே இருக்க வேண்டும் என்பதே சட்டத்தின் வழிகாட்டுதல். எனவே, குமுதாவும் குழந்தையும் கணேஷின் தந்தை வீட்டில் ஒரு பகுதியில் வாழவும் ஜீவனாம்சம் பெறவும் சட்டம் வழிசெய்தது. இழப்பீடு வழக்கு நடத்திய வழக்கறிஞர், மாமனார் மூலம் ஜீவனாம்சம் பெற வழிவகை செய்யும் சட்டம் பற்றி எடுத்துச் சொல்லவில்லையென்றால் குமுதாவும் இந்த உரிமையைக் கோரி, பெற்றிருக்க மாட்டார். கணவர் இறந்த பிறகு மனைவியின் உரிமைகள் என்னென்ன என்பதைத் தன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டார் குமுதா.

கட்டுரையாளர், வழக்கறிஞர், தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x