Published : 31 Jul 2016 11:20 AM
Last Updated : 31 Jul 2016 11:20 AM
பெண்களைப் பார்த்துத் தொடர்ச்சியாகக் கேட்கப்படும் கேள்விகள் குறித்து ஜூலை 24 அன்று வெளியான பெண் இன்று இணைப்பிதழில் எழுதியிருந்தோம். இப்படிப் பெண்களைப் பார்த்து எழுப்பப்படும் கேள்விகள் குறித்த அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுமாறு வாசகர்களிடம் கேட்டிருந்தோம். வந்துகுவிந்த கடிதங்களில் ஏராளமானவை பெண்களின் மனதில் நிறைந்திருக்கும் வலியைப் பிரதிபலித்தன. நாம் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசகனைகளைச் சுமந்துபடி பல கடிதங்கள் வந்திருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு…
குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே பெண்ணின் அடையாளமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உறுதித் தன்மை இவை இருந்துவிட்டாலே போதும். பெண்கள் எத்தகைய சிக்கலையும் சமாளித்துவிடுவார்கள். ஆணாதிக்க மனோபாவம் இல்லையென்றாலே சமூகத்தின் கேள்விகளால் துளைக்கப்படுவது குறையும்.
- பெ. அருள்செல்வன், கண்டமத்தான்.
செம்மறியாடுகள் போல நாமும் பெண்களை வசைபாடுவதில் தொடங்கி, குழந்தைத் திருமணம்வரை அடுத்தவர் செய்வதைப் பார்த்தே கடைப்பிடித்துவருகிறோம். திருமணம் நடந்தாலும் பெண்ணுக்கென்று தனி அடையாளம் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
-எஸ். பிரபு, காமாட்சிபுரம்.
அடுத்தவரின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைத்துக் கேள்வி கேட்பது அநாகரிகமானது. காலங்காலமாகப் பெண்களைத் திருமணம், குழந்தைப் பேறு தவிர்த்து வேறொரு பிம்பத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை என்பதற்கு மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேஸாயின் கேள்விகளே சாட்சி. பெண்களின் சாதனை ஒரு வட்டத்துக்குள் அடங்கிவிடுவதால் கிணற்றுத் தவளையாகத்தான் அவர்கள் வாழ்நாள் கழிகிறது. எப்போது மாறும் இந்நிலை?
- தாரா ரமேஷ், புதுச்சேரி.
குழந்தையில்லையா என்ற கேள்வி ஆண், பெண் இருவரையுமே பாதிக்கிறது. ஆணாக இருந்தால் நண்பர்கள் அவரைப் பார்க்கும் பார்வையிலேயே பரிகாசம் வெளிப்பட்டு, அவமானத்தான் குன்றிப்போகச் செய்துவிடுகிறார்கள். தங்கள் மனதின் வக்கிரங்களை அடுத்தவர் மீது கொட்டிவிடும் தீர்மானத்துடனேயே சமூகத்தில் பலரும் இருக்கிறார்கள்.
- உம்மல்பரீதா, தேவகோட்டை.
திருமணமே நிறைவு என்ற எண்ணத்தை விட்டு வெளியேவரப் பல பெண்கள் முயற்சிப்பதில்லை. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட விருப்பு, வெறுப்புகள் உண்டு. அவற்றை மதித்து நடப்புதுதான் மாண்பு. கொஞ்சமும் இங்கிதமில்லாமல் பொது இடங்களில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கேள்வி கேட்டு அவமானப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.
- லலிதா சண்முகம், திருச்சி.
துரத்தித் துரத்திக் கேள்வி கேட்பது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் வேண்டுமென்றே திருமணம், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடுவது முடிவில் மன அழுத்தத்தில்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும். இன்று தம்பதிகளுக்குள் பரஸ்பரப் புரிதல் இல்லை. திருமண உறவில் நம்பிக்கை வேண்டும். ஒரு வேளை தவறான துணையைத் தேர்ந்தெடுத்துவிட்டதாக நினைத்தால் உறவை முறித்துக்கொண்டு வெளியேறலாம், அதிலும் தவறில்லை.
-ஆர். தனபாலன், திருச்சி.
பெற்றவர்களிடமே பெண்ணைப் பற்றிப் புறம்பேசும் புழுக்கவாதிகளை விரட்ட வேண்டும். திருமணமும், குழந்தை பெற்றுக்கொள்வதும் மட்டுமே பெண்ணின் அடையாளமல்ல என்பதைப் பெற்றோர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சதா கேள்வி கேட்கும் பிற்போக்குவாதிகளைப் புறந்தள்ளுவோம்.
பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.
ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்வதை யாரும் அவளுடைய தனிப்பட்ட செயலாகப் பார்ப்பதில்லை. ஒரு சமூக நிகழ்வாக்கிவிடுகிறார்கள். அந்தக் காலத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பெண்ணிடம் இருந்ததில்லை. ஆனால் இன்று ஆணுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்களும் வெற்றிபெறும் சூழல் நிலவுகிறது. இதில் பெண்ணின் முடிவை அவளிடமே விடுவதுதான் சிறந்தது. குழந்தை வளர்ப்பில் ஆண் பங்கெடுக்க முன்வராதவரை அது குறித்துக் கேள்வியெழுப்ப உரிமையில்லை.
- ச. சுடலைமுத்து லட்சுமி, கல்பாக்கம்.
குழந்தை இல்லாததால் நான் அனுபவித்துவரும் மன, உடல், பொருளாதாரப் பிரச்சினைகள் எதிரிக்குக்கூட வரக் கூடாது.
திருமணத்துக்கு முன்பே மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்பட்டேன். மணமான பிறகு சிகிச்சை எடுத்தால் போதும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எடையைக் குறைக்கும்படியும் அறிவுறுத்தினார்கள்.
திருமணமாகி ஏழு ஆண்டுகள் முடிந்த நிலையில் இதுவரை பார்க்காத மருத்துவர்கள் இல்லை, செய்யாத வைத்தியம் இல்லை. நீண்ட நேர காத்திருப்புகள், ஹார்மோன் ஊசிகள், மாத்திரைகள், லட்சக் கணக்கில் அள்ளி இறைத்த பணம், ஒவ்வொரு மாதமும் ஏமாற்றம், அழுகை, மன உளைச்சல் இவை எதையும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
இந்தச் சமூகம் என்னைப் பரிதாபத்தோடு பார்க்கிறது. என்னைப் புதிதாகச் சந்திப்பவர்கள் மட்டுமல்ல, என்னை நன்கு அறிந்தவர்களும் என் மனம் காயப்படும் என்பதை உணராமல் மீண்டும் மீண்டும் இதே விஷயத்தைப் பேசுகிறார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் என்னிடம் அது குறித்த கேள்விகளோ ஆலோசனைகளோ வழங்கப்படுவது இல்லை.
இவை எல்லாவற்றையும்விட கணவரும் அவர் குடும்பத்தினரும் சொல்லும் வார்த்தைகள் என்னைத் தற்கொலையின் விளிம்பிற்கே தள்ளும். என் மருத்துவச் செலவுக்கு ஒரு ரூபாய்கூட என் கணவர் செலவு செய்ததில்லை. நான் அவரை ஏமாற்றி மணம்புரிந்து அவரது வாழ்வை நாசம் செய்து விட்டதாகத் திட்டுவார். மலடி என்ற வார்த்தையால் என் மாமியார் என்னைக் கொல்வார். அம்மா, அப்பா உட்பட என் உறவினர் யாரும் இங்கு வருவதில்லை. என் கணவரும் என் தாய் வீட்டுக்கு வர மாட்டார்.
இயல்பான பேச்சோ மகிழ்ச்சியான மன நிலையோ இல்லாமல் இறுக்கமாகச் செல்கிறது வாழ்க்கை, ஒரு தண்டனை போல. சிக்கலான காலகட்டங்களில் குறைந்தபட்சம் மன ரீதியான ஆதரவு கிடைத்தால்கூட போதும்.
தானாக உதிரும்
சருகு நான்
என்னை வீழ்த்த
கோடாலியுடன் வருகிறாய்
என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
-கலைவாணி, சென்னை.
ஒரு நடிகையிடம், “திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?” என்று கேட்கும் பத்திரிகைகள் அதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பதில்லை. இந்தக் கேள்விக்குப் பின் மறைந்திருக்கும் ஆணாதிக்கம் யாருக்கும் தெரிவதில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லையென்று மருத்துவரிடம் ஆலோசனை செய்யாமல் குறை அந்தப் பெண்ணிடம்தான் என்று முடிவு கட்டிவிட்டனர். அந்த ஆணுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தனர். அந்தப் பெண்ணுக்கும் குழந்தையில்லை. இருந்தாலும் அந்த ஆணைக் குறைகூறாமல் அந்தப் பெண்களையே வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார்கள். அப்படித் திட்டுபவர்கள் அந்த வீட்டுப் பெண்களேதான். முதலில் மாற்றம் ஏற்பட வேண்டியது பெண்களிடம்தான்.
சமூகம் வகுத்துவைத்திருக்கும் குருட்டு அளவுகோலை உடைத்தெறியும் துணிச்சல் பெண்களுக்கு வேண்டும். கல்வி, பணி, ஆளுமைத் திறன் இவையெல்லாம் திருமணம் என்ற நிகழ்வால் தேங்கிவிடுகிறது. திருமணமும் அதைத் தொடர்ந்த குழந்தைப் பேறுமே வாழ்க்கையின் நிறைவாக இருந்தால் இந்த உலகம் அழிவின் விளிம்பில் இருப்பதாகத்தான் அர்த்தம்.
- தேஜஸ், காளப்பட்டி.
சமூகத்தில் நான்கு பேர் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள். அதற்காக வாழ்க்கையை அழித்துக்கொள்ளவா முடியும்? அதையும் தாண்டிச் சாதிக்க வேண்டும் பெண். கேள்வி கேட்பவர்கள் அனைவரும் அதைக் கேட்கும்முன், பிற்காலத்தில் இதே கேள்வி நம்முடைய தலைமுறையை பாதிக்கக் கூடாது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
- விக்னேஸ்வரி
நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கும்போது எனக்குத் திருமணம் நடந்தது. அப்போது வளாகத் தேர்வில் எனக்கு நல்லதொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. என் கணவரின் பணி நிமித்தம் நான் வேலைக்குச் செல்லவில்லை. திருமணமாகி நான்கு ஆண்களாகிறது. எனக்குக் குழந்தையில்லை. என்னைப் பார்க்கிறவர்கள் அனைவரும் சொல்லிவைத்தாற் போல கேட்கிற கேள்விகள் இவை. இன்னுமா குழந்தையில்லை? குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போட்டிருக்கிறீர்களா? நல்ல டாக்டரைப் பார்த்தீங்களா? கருக்கலைப்பு செய்துகிட்டீங்களா? உனக்குப் பிறகு கல்யாணமான பொண்ணுங்க எல்லாருக்கும் குழந்தை இருக்கு… நான் அழுகிறவரை அவர்களின் பேச்சு ஓயாது. இதனாலேயே நான் எந்த விசேஷத்துக்கும் செல்வதில்லை. ஒரு முறை என் கணவர் இல்லாமல் ஒரு விழாவுக்குச் சென்றுவிட்டேன். அவ்வளவுதான், என் கணவரின் அண்ணன் உட்பட அனைவரும் என்னைச் சூழந்துகொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர்.
ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதே குழந்தை பெற்றுக்கொள்ளத்தான் என்றால், குழந்தை பிறக்காத பெண்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணின் வலியை இன்னொரு பெண்ணே புரிந்துகொள்ளாதபோது அதை ஓர் ஆண் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமா?
- இளமதி.
வாழையடி வாழையாக மனித இனத்தை உருவாக்குவதில் பெண்களுக்கும் பங்கு இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. அதற்காக திருமணம் செய்துகொள்வதையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் பெண்ணின் கடமையாகத் திணிக்க முடியாது. பெண் போகப்பொருள் என்ற நிலையிலிருந்தும், பெண் ஆணுக்கு அடிமை என்ற தவறான நிலையிலிருந்தும் நிலவிவரும் தவறான சிந்தனை மாறவேண்டும்.
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
இதுபோன்ற கேள்விகள் ஆணிடமும்தான் கேட்கப்படுகின்றன. வயதான ஆண் எந்தவொரு பந்தத்திலும் இல்லையென்றால் ஏன் அவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்றுதான் கேட்கிறார்கள். ஆணிடம் மறைமுகமாகக் கேட்கப்படும் கேள்வி பெண்களிடம் நேரடியாகக் கேட்கப்படுகிறது. இதற்கு ஆண்கள் மட்டும்தான் காரணம் என்று சொல்வது தவறு. பெண்கள் எப்போதும் இதுபோன்ற கேள்விகளைத்தான் தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களிடம் கேட்கிறார்கள். சமூக ஒழுங்கே ஆண், பெண் திருமணத்தை ஒட்டி இருப்பதாக நம்பப்படுவதால்தான் இதுபோன்ற எண்ணங்கள் மக்கள் மனதில் வேரூன்றி இருக்கின்றன.
-ஜீவன்.பி.கே, கும்பகோணம்.
திருமணம், குழந்தை போன்ற கேள்விகளுக்கு ஏன் பெண்கள் கூனிக் குறுக வேண்டும்? நான் ஒரு பெண், என் பிறப்பே மனைவி ஆவதும் அம்மா ஆவதும்தான் என ஒரு பெண் நினைக்கிறாளா?
- எஸ். ரம்யா, கடலூர்.
பொதுப் புத்தி, ஆணாதிக்க மனப்பான்மை இவற்றைத் தாண்டி, பெண்களே இன்னும் தங்கள் வாழ்வின் நிறைவு என்பது திருமணம் அல்லது தாயாவதுதான் என்று நினைக்கிறார்கள். எனது தோழியின் வயது 42. உலக நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தனது சேமிப்பைத் தனக்காகத்தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார். குழந்தைக்காக தான் வாழ்நாள் முழுதுவதும் உழைக்க வேண்டியது கட்டாயமல்ல என்று சொல்கிறார். மற்றவர்களால் அதை நியாயமான ஆசையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் தன் விருப்பம் போலவே வாழ்கிறார். தனது கணவருடன் எண்பது நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார்.
திருமணமாகிச் சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையென்றால் நமக்கு விருப்பமான விஷயங்களைச் செய்வது வெட்டி வேலையாகவே பிறருக்குத் தோன்றுகிறது. ஒரு கட்டுரைப் போட்டியிலோ, கதைப் போட்டியிலோ வெற்றி பெற்றதைத் தோழிகளிடம் பகிர்ந்துகொண்டால், “இன்னும் குழந்தை பெத்துக்கலையா? அதான் உனக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கு” என்று நம் திறமையை உதாசீனப்படுத்திவிடுவார்கள். நம் பதிலை எதிர்பார்க்காமல் இலவச ஆலோசனைகள், அறிவுரைகள் வரும். பெண்களின் சிந்தனைகளில் மாற்றம் வந்தால்தான், சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் வரும். தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டுக் கேள்வி கேட்கும் சமூகத்தில், பெண்களின் சுதந்திரம் பற்றிய உணர்வு வர இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?
- செ. பூர்ணிமா, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
தொன்று தொட்டு, சமூகமும் குடும்ப உறுப்பினர்களும் பெண்களுக்கு மட்டுமே ஆயிரம் விதிமுறைகளும் கோட்பாடுகளும் விதித்துவருகின்றனர். ஒரு சில பெண்களே தப்பிப் பிறந்து சிப்பிகளாகிறார்கள். அவர்களையும் இந்தச் சமூகம் வேண்டாத கேள்விகளால் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். பெண்களின் சாதனைகள் எல்லாமே அடுக்களைக்குள் புதைக்கப்படுகின்றன. குழந்தைப் பேறு என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பமே தவிர அதுவே பெண்களுக்கான தகுதியல்ல.
- த.மோகனபிரியா, திருநெல்வேலி
திருமணம் செய்துகொள்வதும் பிள்ளை பெற்றுக்கொள்வதும்தான் பெண்களுக்கு நிறைவா? அப்படியென்றால் சமூக சேவை செய்து எண்ணற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னையாகத் திகழ்ந்த அன்னை தெரசா நிறைவான வாழ்வு வாழவில்லையா? திருமணம், தாய்மை என்பவை எல்லாமே அந்தந்த வயதுக்குரிய நிலைகள் மட்டும்தான். இவை உணார்வுகளின்படியும் விருப்பத்தின் பேரிலும் அமைவதே சிறந்தது. திருமணம் ஆன பெண்ணைச் சுமங்கலி என்று சொல்கிற அதே வாயால்தான், கணவரை இழந்தவரை விதவை என்று சொல்லி புறக்கணிக்கிறோம்.
- ராஜாத்தி, திருச்சி.
என்னுடன் எம்.ஏ. படித்த தோழி திடீரென சில நாட்களாகக் கல்லூரிக்கு வரவில்லை. விசாரித்ததில் அவளுக்கு ஹீமோஃபீலியா (ரத்தம் உறையாமை) என்ற வியாதி இருப்பதும் அதனால் அவள் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. படிப்பு முடிந்து எங்கள் அனைவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் என் தோழியோ தனது நோயின் தன்மையைப் புரிந்துகொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை.
அதற்குப் பிறகு இடைவிடாமல் படித்த அவள் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றதோடு கல்லூரி விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தாள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விரிவுரையாளர் பணியில் இருப்பதோடு தமிழில் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதிவருகிறாள். கருத்தரங்கு, மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறாள். தன் ஆய்வு சார்ந்து புத்தகம் வெளியிட்டிருக்கிறாள்.
தற்போது 40 வயதை நெருங்கும் அவள், கை நிறைய சம்பாதிக்கிறாள். தாய் தந்தையரை கவனித்துக்கொள்கிறாள். விடுமுறை நாட்களை தன் அண்ணன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செலவழிக்கிறாள். தன் துறை சார்ந்த சிறந்த அறிவோடும் உலகை அணுகும் நல்ல மனோதிடத்தோடும் இருக்கிறாள். மொத்தத்தில் நிறைவான வாழ்க்கை!
ஆனால் இந்தச் சமூகத்துக்கு இந்த நிறைவு போதாதே. இவளுக்குத் திருமணம் நடக்காததாலேயே கல்லூரியில் இவளுக்கு மட்டும் எப்போதுமே கூடுதல் வேலைகள் வழங்கப்படும். பாடம் நடத்துவதைத் தாண்டி, விழாக்களை ஒருங்கிணைப்பது, விழாக்களுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது என அனைத்தையும் இவளது தலையில் கட்டிவிடுவார்கள். அதுகூட என் தோழிக்கு வருத்தமில்லை. ஆனால் அதற்காக சக பணியாளர்கள் சொல்லும் வார்த்தைகள்தான் அவளை வதைக்கின்றன. “நாங்க லேட்டா போனால் வீட்டில் திட்டு விழும். உங்களுக்கென்ன நீங்க கல்யாணம் ஆகாதவங்க. உங்களுக்கு என்ன பிரச்னை இருக்கப்போகிறது?”
“ வீட்டில் என்ன பெரிதாக வேலை இருந்து விடப்போகிறது? வீட்டில் சும்மா தானே இருப்பீங்க?” என அவர்கள் பேசுவதை என்னுடன் வேதனையுடன் பகிர்ந்துகொண்டாள்.
ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடக்கவில்லை என்பதாலேயே அவளுக்கு வீட்டில் எந்தப் பொறுப்பும் இருக்காது என்ற நினைப்பு எத்தனை கேவலமானது! ஏன் திருமணம் ஆகவில்லை என்று நட்பு ரீதியாக ஒரு முறை கேட்பது என்பது வேறு. பொதுவெளியில் சம்பந்தப்பட்டவர்களை சங்கடத்துக்குட்ப்படுத்தி தனது இயலாமை, பொறாமை போன்றவற்றை வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் மனப்பான்மையை ஆண், பெண் இருவரும் மாற்றிக்கொள்ளவேண்டும். திருமணம், குழந்தைப் பேறு இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட பிரச்சினை. அடுத்தவரின் அந்தரங்க அறைகளுக்குள் மட்டுமல்ல; அவர்களின் குடும்ப விஷயங்களுக்குள்ளும் அவர்களின் அனுமதியின்றி நுழைவது அநாகரிகமே. இதுபோன்ற கேள்விகளைப் பெண்கள் புறக்கணிக்கத் தொடங்கினாலே போதும். அதுவே சமூக மாற்றத்துக்கான முதல் அடியாக இருக்கும்.
- ஸ்ரீதேவி மோகன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT