Published : 12 Feb 2017 12:13 PM
Last Updated : 12 Feb 2017 12:13 PM

ஈரோடு மகளிர் திருவிழா: திகட்டத் திகட்ட பரிசு மழை!

திருச்சி வாசகிகளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடவைத்த கையோடு, கடந்த வாரம் ஈரோடு வாசகிகளைக் குதூகலத்தில் ஆழ்த்தியது ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழா. வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற்ற மகளிர் திருவிழாவில் பெருந்திரளாக வாசகிகள் கலந்துகொண்டனர்.

தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் சிறப்புரைகள், ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும் ஆலோசனைகள், ரசனைக்குத் தீனிபோடும் கலை நிகழ்ச்சிகள், ஜாலியான போட்டிகள், நிகழ்ச்சி நெடுக அட்டகாசமான பரிசுகள், விழாவுக்கு வந்த அனைவருக்கும் நிச்சய பரிசு என கொண்டாட்டத்துக்குக் குறைவே இல்லை.

தி இந்து ஆசிரியர் கே. அசோகன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ. அரவிந்தன், வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், வேளாளர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டி.கமலவேணி, மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறளோசையும் பறையோசையும்

‘கிங்கிணி கலைக்கோயில்’ நடனப் பள்ளி குழுவினரின் குறள் பரதமும், நாட்டுக்குறள் நடனமும் தொடக்க நிகழ்ச்சியாக அமைந்து வாசகிகளை உற்சாகப்படுத்தின. பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையத்தினரின் பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், வாசகிகளை உற்சாகமாக ஆடவைத்தன. ஈரோடு புத்தாஸ் குங்ஃபூ - காரத்தே யோகா சிலம்பம் தற்காப்புக் கலை பள்ளியின் மாணவிகள் தற்காப்பு செயல்முறைகளைச் செய்துகாட்டினர். இந்தத் தற்காப்பு செயல்முறைகள் வாசகிகளுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தும்வகையில் அமைந்திருந்தன.

மனநலம் முக்கியம்

பெண்களின் மனநலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இந்த விழாவில் மனஅழுத்தத்தைச் சமாளிப்பது தொடர்பான ஆலோசனைகளை மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி வழங்கினார். அவருடன் வாசகிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்துரையாடினார்கள். நேர்மறை சிந்தனையால் பிரச்சினைகள் விலகிவிடுமா, ஆரோக்கியமான தூக்கத்துக்கு என்ன செய்வது என்பன போன்ற கேள்விகளை வாசகிகள் விஜயபானுவும் குணசுந்தரியும் எழுப்பினார்கள். இந்தக் கேள்விகளுக்கான மருத்துவரின் பதில்கள் அனைவருக்கும் உதவும் வகையில் அமைந்திருந்தன.

அட்டகாசமான பரிசுகள்

இந்த விழாவில் வாசகிகளை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மைமிங் போட்டியில், ‘சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நடித்துக்காட்டிய வாசகிகள் முதல் பரிசைத் தட்டிச்சென்றனர். அத்துடன், ரப்பர்பேண்ட்டில் செயின் செய்யும் போட்டி, பந்து பாஸ் செய்தல் போட்டி, பொட்டு ஒட்டும் போட்டி, கயிறு முடிச்சு போடும் போட்டி, கோலிகுண்டு-ஸ்பூன் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்மான போட்டிகள் நடத்தப்பட்டு வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவின் இடையில் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ‘தி இந்து’ நாளிதழின் ஈரோடு பகுதி பெண் முகவர்கள் மேடையில் கவுரவிக்கப்பட்டனர். விழாவின் இடையிடையே நாற்பதுக்கும் மேற்பட்ட வாசகிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் ஒரே மாதிரியான புடவை கட்டி வந்த வயதான தோழிகள், கண்ணாடி வளையல் போட்டிருந்த வாசகிகள், இரண்டு மூக்குத்தி போட்டிருந்த வாசகிகள் உள்ளிட்டவர்களுக்கும் ஆச்சரியப் பரிசுகள் வழங்கப்பட்டன. வாசகிகள் அரசிளங்குமரி, வத்சலா, ஜெயம்மாள், ஜெயலஷ்மி உள்ளிட்டோர் பம்பர் பரிசுகளைத் தட்டிச் சென்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் கிடைத்ததால் வாசகிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். காலை நிகழ்ச்சிகளைப் பேராசிரியர் ஹேமலதாவும், பிற்பகல் நிகழ்ச்சிகளை சின்னத்திரை நடிகை தேவி கிருபாவும் தொகுத்து வழங்கினர்.

இந்த விழாவை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் இணைந்து லலிதா ஜூவல்லரி, சென்னை சில்க்ஸ், சக்தி மசாலா, நாட்ரா கைக்குத்தல் அரிசி, ஹரி பாலா மால், பொன்மணி வெட்கிரைண்டர், ஹெச் டூ ஹெச், ஸ்பிக்டெக்ஸ், டிஸ்கவுன்ட் வாஷிங் பவுடர், சுதா மருத்துவமனை, லோட்டஸ் டிவிஎஸ், அம்பாள் ஆட்டோ, மில்கா வொண்டர்கேக்,

ஏ -1 சிப்ஸ், வி.வி.நேஷனல் சேர்ஸ், எஸ்.கே.எம்.சிகிச்சையாலயா, டேஸ்டி மசாலா, சாம்சன் பிட்னஸ் சென்டர், ராயல் செட்டிநாடு ஹோட்டல், ஸ்ரீசுவாநிதி கலெக் ஷசன்ஸ், ஆதிரா வெள்ளி மாளிகை, கோகினூர் ஹோட்டல், ஆர்சிஎன் டிவி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x