Published : 19 Feb 2017 11:05 AM
Last Updated : 19 Feb 2017 11:05 AM
பொது இடங்களில் ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். ஆண்கள் அவர்கள் நண்பர்களோடு சந்தோஷமாக அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முகங்களில் அப்படியொரு மகிழ்ச்சி தெரியும்! எதைப் பற்றித்தான் பேசுவார்கள் என்றே சொல்ல முடியாது. முழுமையாக அந்த நேரத்தை அனுபவிப்பார்கள். அதைப் பார்க்கும்போது ஒரு சின்ன சந்தேகம் வரும். ஏன் பெண்கள் இப்படிச் சந்தோஷமாக சாலையில் நின்று அரட்டையடிப்பதை அதிகம் பார்க்க முடிவதில்லை? பெற்றோர் அனுமதிக்க மாட்டார்களா? ஆண்கள் கிண்டல் செய்வார்களா? யோசித்தால் அதற்குக் காரணம் பெண்களேதான் என்பது புரியும்!
சில பெண்கள் மத்தியில் ஒரு சின்ன ஒப்பீடு வரலாம், சின்ன கர்வம் வரலாம். இதுபோன்ற ஒப்பீடுகள் ஆண்களுக்கு இல்லையா என்று கேட்கலாம். இருக்கும், ஆனால் தேவையான இடங்களில் மட்டுமே. நண்பன் என்று சொல்லிவிட்டால், அவன் எப்படி இருந்தாலும் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பெண்கள் அப்படி எடுத்துக்கொள்வதில்லை. குடும்பம், வாழ்க்கைத் துணை, படிப்பு, வேலை போன்றவற்றுக்குக் கொடுக்கிற முக்கியத்துவம் நட்புக்கு எல்லாப் பெண்களும் கொடுக்கிற மாதிரி தெரியவில்லை.
பொதுவாகப் பெண்கள் என்றாலே அவர்கள் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள் என்ற கருத்து இருக்கிறது. தன்னுடன் படிக்கிற அல்லது வேலை பார்க்கிற ஒரு பெண்ணோடு ஏன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்? அப்படியே ஒப்பிட்டாலும் அவர்கள் அறிவு, அனுபவம், தேடல் சார்ந்த ஒப்பீடாக இருப்பதில்லை. முகத்துக்கு என்ன களிம்பு பூசுகிறார், அவருடைய புது சிகை அலங்காரம் என்று தோற்றத்தைப் பற்றி மட்டுமே பலவற்றைக் கவனிக்கிறார்கள். இரண்டு பெண்கள் சேர்ந்தால் பண மதிப்பு நீக்கத்தின் அடிப்படை என்ன என்பதைப் பற்றிப் பேச மாட்டார்கள், பவுடர் பற்றிதான் பேசுவார்கள் என்ற ஒரு பொதுக் கருத்து யாரால் எழுப்பப்பட்டது?
அரசியல் நடப்பு, பொருளாதார மேம்பாடு, விவசாய வளர்ச்சி என்று எத்தனையோ விஷயங்கள் நம்மைச் சுற்றி நடந்தாலும் பெண்களுக்குப் பேச அழகு சாதனங்கள், குழந்தை வளர்ப்பு, கடன் சுமை போன்றவையே ஏன் இருக்கின்றன? அதனால்தான் தனக்குள்ளேயே ஓர் எதிர்மறை எண்ணம் தலை தூக்குகிறதா என்று கேட்டால் அதுக்கும் ஒரு பதில் சொல்கிறார்கள் பெண்கள். ஆண்கள் குடும்ப பாரத்தைப் பகிர்ந்துகொண்டால் பெண்களுக்கும் இவற்றைப் பற்றிப் பேச அதிக வாய்ப்பிருக்கும் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் திருமணம் ஆகாத பெண்கள்கூட மற்ற பெண்களிடம் அரசியலோ, பொருளாதாரமோ பேசுவது குறைவுதானே. காரணத்துடனோ காரணம் இல்லாமலோ சில பெண்கள் மற்ற பெண்களிடம் குறைவாகத்தான் பேசுகிறார்கள்; அப்படியே பேசினாலும் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டுமே பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது.
அலுவலகம், பக்கத்து வீடு, ஜிம், கோயில், பேருந்து பக்கத்து இருக்கை இப்படிப் பரிச்சயம் உள்ள, பரிச்சயம் இல்லாத பெண்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அவர்களிடம் நட்புப் பாராட்டுவதை விட்டுவிட்டு, ஏன் ஒதுங்கிக்கொள்கிறார்கள்? சிறப்பான ஓர் உடையை மற்றொரு பெண் அணியும்போது, அதை ரசிக்காமல், என்னுடையதுதான் சிறப்பு என்று பெருமைகொள்ளும் குணம் எங்கேயிருந்து வருகிறது? அறிவு, அனுபவத்தைவிட அழகுக்குக் கொடுக்கிற முக்கியத்துவமும் இதற்கு ஒரு காரணமா?
பள்ளி, கல்லூரி, அலுவலகம், விடுதி என்று வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் நட்புகள் கிடைக்கின்றன. ஆனால் அந்த நட்பைத் தொடர்வதற்கு எத்தனைப் பெண்கள் முயற்சி செய்கிறார்கள்? திருமணம், குடும்பம் என்று மாட்டிக்கொள்கிறோமே, இதில் எங்கே தோழிகளைப் பார்க்க முடியும் என்று கேட்பது ஒருபக்கம் இருக்கட்டும். தன் தோழிகளைப் பார்க்க வேண்டும் என்று இங்கே எத்தனை பேர் நினைக்கிறார்கள்?
ஆண் நண்பனிடம் கிடைக்கிற புரிதலும் நட்பும் உரிமையும் பெண் தோழிகளிடம் கிடைக்காது என்றே பல பெண்கள் நினைக்கிறார்கள். பெண்ணே சக பெண்ணைத் தோழியாகப் பாவிக்காமல், ஒருவித காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவது தனக்கும் சரியில்லை, அந்த நட்புக்கும் சரியில்லை என்பதை உணர வேண்டும். நாமும் கொண்டாடலாம் நட்பை!
- ரஞ்சிதா ரவீந்திரன், கோயம்புத்தூர்.
நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT