Published : 26 Jan 2014 12:07 PM
Last Updated : 26 Jan 2014 12:07 PM
எதிலுமே ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்குச் சாட்சி சங்கரி விஜயகுமார். பள்ளி நாட்களில் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டாலும் திருமணம் முடிந்த பிறகுதான் கைவினைக் கலைகள் மீது ஆர்வம் வந்திருக்கிறது இவருக்கு.
உடனே அடிப்படைக் கலைக்கு மட்டும் பயிற்சி எடுத்திருக்கிறார். அதனுடன் தன் கற்பனையையும் கலந்து புதுப்புது படைப்புகளை இவர் உருவாக்கி வருகிறார். “நான் இந்த ஒரு வருஷமாதான் கைவினைக் கலைப்பொருட்களைச் செய்யறேன். கைவினைக் கலைக்கான இணையதளம், புத்தகங்கள்னு தேடித்தேடிப் பார்ப்பேன். அதையெல்லாம் மாதிரிக்காகப் பார்ப்பேனே தவிர என் கற்பனையில் உதிக்கிற விஷயங்களுக்கு மட்டுமே வடிவம் கொடுப்பேன்” என்கிற சங்கரி பேப்பர் க்வில்லிங், மரப்பொருட்களில் விதவிதமான பொருட்கள், பெயிண்டிங், எம்ப்ராய்டரி, ஆரி வேலைப்பாடு என ஒவ்வொரு வகையிலும் தன் தனித்திறமையை வெளிப்படுத்தி வருகிறார். “ஃபேஷன் ஜுவல்லரியும் எனக்குத் தெரியும்.
பொதுவா டெரகோட்டா ஜுவல்லரி எனப்படும் சுடுமண் நகைகளைத்தான் பலரும் செய்வாங்க. ஆனா நான் பொம்மைகள் செய்யப்படும் கிளே, எம்சீல் ஆகியவற்றில் நகைகள் செய்கிறேன். அதை என் தங்கையின் தோழிகளிடம் விற்பனை செய்கிறேன். ஆடைகளில் நான் செய்கிற ஆரி வேலைப்பாட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது” என்கிறார் சங்கரி. சாதாரண பேப்பர் தட்டையும், மர அட்டையையும் தன் கலைத்திறமையால் ஜொலிக்க வைக்கிறார்.
இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற வரையறைக்குள் சிக்காமல் கண்ணில்படுகிற, கையில் கிடைக்கிற அனைத்தையுமே பயன்படுத்திக் கொள்கிறார். இதுதான் இவரது கலைப்படைப்புகளைத் தனித்து அடையாளம் காட்டுகிறது. குஷனாக வைக்கப்படும் குட்டித் தலையணை, சாவி மாட்டிவைக்கும் ஹோல்டர், விதவிதமான கண்ணாடி ஓவியங்கள் என வீட்டில் திரும்பிய திசையெங்கும் சங்கரியின் கைவண்ணம் தெரிகிறது. அதுவே அவருக்கான விசிட்டிங் கார்டாகவும் அமைந்துவிடுகிறது.
நீங்களும் பங்கேற்கலாம்
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத் துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம். penindru@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT