Last Updated : 08 Jan, 2017 03:39 PM

 

Published : 08 Jan 2017 03:39 PM
Last Updated : 08 Jan 2017 03:39 PM

சட்டமே துணை: உங்கள் அலுவலகத்தில் ஐசிசி கமிட்டி இருக்கிறதா

நாதனைப் பற்றி கேள்விப்பட்டபோது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. நாதன் கடந்த 13 வருடங்களில் விடுப்பு எடுத்ததே இல்லை. வேலையில் கண்டிப்பானவர். அவருக்கும் அவருடைய மேலதிகாரிக்கும் ஏதோ பிரச்சினை, அவருக்கு உடல் நலமில்லை என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். மீனாவுக்குத்தான் காரணம் தெரியும், இந்த விடுப்பு அவள் கொடுத்த புகாரின் தொடர்ச்சி என்பது.

நாதனின் மேலதிகாரி புகார் கொடுத்து மூன்று நாட்களில் மீனாவை அழைத்தார். மீனா அதே அலுவலகத்தில் பணி செய்ய விரும்புகிறாரா, விடுப்புத் தேவையா, நாதன் மாற்றப்பட வேண்டுமா என்றெல்லாம் கேட்டார். விரைவில் இந்தப் புகாரை அலுவலக புகார் கமிட்டி விசாரிக்கும் என்றார்.

“விசாகா குழுவும் விசாரிக்குமா?” என்று மாலினி சொல்லியிருந்ததை மேலதிகாரியிடம் கேட்டார் மீனா.

“விசாகா கமிட்டி என்பது இதற்கான பிரத்யேகச் சட்டம் 2013-ல் இயற்றப்படும் வரைதான் இருந்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் (தடுத்தல், பாதுகாத்தல், குறைதீர்த்தல்) சட்டம் 2013-ல் இயற்றப்படும்வரை உச்ச நீதிமன்றத்தில் பகரப்பட்ட ‘விசாகா வழக்கு’தீர்ப்பின் பெயரால் அந்தக் குழுவுக்கு விசாகா கமிட்டி என்று பெயர் இருந்தது” என்றார் மேலதிகாரி.

மீனாவின் அம்மாவும் மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தாலும், இது பற்றியெல்லாம் மீனாவிடம் பேசியதில்லை. நாதன் இதுபோல வேறு யாரிடமும் நடந்துகொள்ளக் கூடாது என்பதால்தான் இந்த விஷயத்தை இறுதிவரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் மீனா உறுதியாக இருந்தார்.

மாலையில் அலைபேசி மணி அடித்தது. ஆனால் பேசுவதற்கு முன்பே துண்டிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அலைபேசி அடித்தது. எதிர்ப்புறம் நாதன், “மீனா வீட்டுக்குப் போய்விட்டாயா? ஹவ் ஆர் யூ?” என்று கேட்டார்.

மீனாவுக்குப் பதில் சொல்லவோ பேசவோ விருப்பமில்லை. எவ்வளவு திமிர் இருக்கும், ஒன்றுமே நடக்காததுபோல பேசுகிறாரே? “இன்னும் போய்ச் சேரவில்லை. அரை மணிநேரம் கழித்துக் கூப்பிடுங்கள்” என்று தொடர்பைத் துண்டித்தார் மீனா.

பாதுகாப்புக்கு என்ன வழி?

வீட்டுக்குப் போனவுடன் அம்மாவிடம் எல்லா விஷயத்தையும் படபடவென்று சொல்லி முடித்தார். அம்மாவுக்கு வருத்தமாக இருந்தது. “மாலினி அரசு சாரா அமைப்பில் பெண்கள் உரிமை குறித்த வேலை பார்க்கறதால அவகிட்டே பேசினேன். ஒரு வாரத்துக்கு முன்னாலதான் இது நடந்தது. நீங்க வருத்தப்படக் கூடாதுங்கறதுக்காகவே உங்ககிட்டே சொல்லலை” என்றும் அம்மாவிடம் சொன்னார் மீனா.

“எங்க ஆபீஸிலும் ஒரு வருஷத்துக்கு முன்னால இந்த மாதிரி பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் நடந்தது. அதற்காக அமைக்கப்பட்ட புகார் கமிட்டி ஐசிசி (ICC- இன்டர்னல் கம்ப்ளெயிண்ட்ஸ் கமிட்டி) அலுவலகத்திலுள்ள மூத்த பெண் ஊழியரைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டது. 50 சதவீதத்துக்கு மேலாகப் பெண்கள்தான் புகார் கமிட்டியில் இடம்பெற்றார்கள். எங்க ஆபீஸ் சாராத மூன்றாம் நபர் ஒருவரும் கமிட்டியில் இருந்தார்” என்றார் மீனாவின் அம்மா.

“இதுக்கெல்லாம் எங்க பிரைவேட் ஆபீஸ்ல சாத்தியமில்லை” என்றார் மீனா.

இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடக்கூடியது அல்ல. ஏனெனில் பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் குறித்த சட்டமானது ஐசிசி என்ற கமிட்டியை அமைப்பது, அதனுடைய செயல்பாடு, அதிகாரங்கள் குறித்தும் தெளிவாக வரையறுத்துள்ளது. மூன்றாம் நபர் ஒருவர் கமிட்டி உறுப்பினராகச் சேர்க்கப்படுவதும் சட்டப்படி அவசியம். அதிலும் அந்த மூன்றாம் நபர் பெண்கள் உரிமைகள் குறித்த ஈடுபாடும், சிவில் அல்லது கிரிமினல் சட்டம் தெரிந்தவராக இருத்தல் அவசியம் என்பதையும் சட்டம் உறுதிபடுத்தியிருக்கிறது.

ஐசிசி கமிட்டியில் 50 சதவீதத்துக்கும் அதிகமாகப் பெண்களே இடம்பெறவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த கமிட்டி புகார்களை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டுமெனவும், கட்டாயமாக இந்தப் புகார் பற்றிய எந்தத் தகவல்களையும் வெளியிடவோ, யாருக்கும் தெரிவிக்கவோ கூடாது என்றும் சொல்கிறது. முழுமையாக ரகசியத்தைப் (Confidentiality) பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

மீனாவுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் ஆச்சரியத்தை அளித்தன.

“எங்க ஆபீஸ்ல மூன்றாம் நபராக நியமிக்கப்பட்ட பெண், வழக்கறிஞரா இருக்காங்க. உங்க ஆபீஸ்ல ஐசிசியின் விசாரணைக்கு அழைப்பதற்கு முன்னால் அவங்களைப் பார்த்துப் பேசிடலாம்” என்று அம்மா சொன்னபோது, மீனாவுக்குத் தைரியம் வந்தது.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் என்று எல்லாவற்றிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கவும் அவற்றில் இருந்து பாதுகாக்கவும் குறை தீர்க்கவும் ஐசிசி சட்டம் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 26 முதல் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

மீண்டும் நாதனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x