Published : 05 Mar 2017 11:47 AM
Last Updated : 05 Mar 2017 11:47 AM

சட்டமே துணை: குழந்தைகள் மீதான வன்முறையை வெளியே சொல்லலாமா?

ராணியின் கணவர் சுரேஷ் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போவார். அந்தப் பணத்தில் குடித்துவிட்டு, மற்ற நாட்களைக் கழிப்பார். தன்னைக் கேள்வி கேட்கும் ராணியை அடித்துத் துன்புறுத்துவார். அதைப் பார்க்கும் குழந்தை, அப்பா என்றாலே பயந்து நடுங்குவாள். குழந்தையைப் பராமரிப்பதற்கே பணம் இல்லாததால், ராணி வேலைக்குப் போக முடிவெடுத்தார்.

குழந்தையைத் தனியே விட்டுவிட்டு குடிக்கச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியதால், சுரேஷ் பகல் முழுவதும் வீட்டிலேயே இருந்தது ராணிக்கு நிம்மதியைக் கொடுத்தது. தினமும் ராணியைக் கண்டவுடன் சந்தோஷமாக ஓடிவரும் மகள், அன்று மிரட்சியுடன் காணப்பட்டாள். சுரேஷிடம் விசாரித்தார் ராணி. சாப்பிடாததால் கண்டித்தேன் என்று சொன்னவுடன் நிம்மதியடைந்தார்.

குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

அன்றிரவே குழந்தை மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்து போனார். தன் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை, தான் வேலை செய்த பள்ளியின் முதல்வரிடமும் பாதுகாப்பு அலுவலரிடமும் சொன்னார் ராணி. பாதுகாப்பு அலுவலர், குழந்தை மீதான வன்முறைக்கு யார் காரணம் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் காவல் துறையிடம் புகார் தரவேண்டும் என்றும் சொன்னார்.

ராணி தன் அம்மா வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தார். சான்றிதழ்கள், துணிகளை எடுத்துவைத்துக் கொண்டார். சுரேஷ் எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தார். சுரேஷின் நடவடிக்கைகளைப் பார்த்த ராணிக்கு அவர்தான் குற்றவாளி என்று புரிந்தது.

பாதுகாப்பு அலுவலர் ராணியைத் தொலைபேசியில் அழைத்தார். குடும்ப வன்முறை என்பதால் பாதுகாப்பு அலுவலரான அவரே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும் என்று சொன்னார். தவிர குழந்தை மீதான பாலியல் வன்முறை வழக்கு காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

“சார், என் குழந்தைக்கு இப்படி நடந்தது யாருக்கும் தெரிய வேணாம். என் ஜீவனாம்சத்தையும் கணவரிடமிருந்து பாதுகாப்பு உத்தரவையும் மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க” என்று கெஞ்சினார் ராணி. நேரில் வருமாறு சொன்னார் பாதுகாப்பு அலுவலர்.

நேரில் சென்ற ராணி விடாப்பிடியாகக் குழந்தை மீதான பாலியல் வன்முறை குறித்துச் சட்ட உதவி வேண்டாம் என்றார். “மருத்துவர், காவல் அதிகாரி, பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த புகார் வரும் போதோ, குற்றம் நடந்தது குறித்த உண்மை தெரிய வந்தாலோ உடனடியாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர், மருத்துவர், காவலர் மீது சட்ட நடவடிக்கை பாயும்” என்பதை எடுத்துச் சொன்னார் பாதுகாப்பு அலுவலர்.

வேண்டும் விழிப்புணர்வு

பெண்கள் மீதான பாலியல் வன்முறையும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் மிகவும் கடுமையான குற்றங்கள். எனினும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் குற்றத்துக்குக் காரணமானவர்களைப் பாதுகாக்கும் பெண் எதிர்ப்பு மனநிலை தொடர்ந்து இருந்து வருகிறது. நிர்பயா வழக்குக்குப் பிறகுதான் பாலியல் குற்றம் பற்றிய புரிதல் ஓரளவு அதிகரித்திருக்கிறது. பாதிப்புக்குள்ளான பெண் குற்றத்தில் பங்குடையவள் அல்ல என்றும் குற்றவாளிகள் மட்டுமே குற்றம் செய்தவர்கள் என்றும் மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

சமூகத்தில் நிலவிவரும் பழமையான கருத்தின் அடிப்படையிலேயே தன் குழந்தை மீது நடந்த பாலியல் வன்முறையை மறந்துவிடவும் மறைத்து விடவும் ராணி நினைத்தார். ஆனால், பாக்ஸோ (Pocso) சட்டம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பாதுகாப்பு அதிகாரி தெளிவுபடுத்தினார்.

Pocso சட்டத்தின்படி காவல் நிலைத்தில் தவறான கேள்விகளுக்கு குழந்தை உட்படுத்தப்படமாட்டாள். தேவையென்றால் பெண் காவல் அதிகாரி குழந்தையின் வீட்டிலேயே விசாரிப்பார். விசாரணைகளின் போது தாய் அல்லது அந்தக் குழந்தையின் நம்பிக்கைகுரிய பெண் உடனிருக்க அனுமதிக்கப்பட வேண்டும். புலன் விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்ட நபரை அல்லது நபர்களைக் குழந்தை ஒருபோதும் நேரில் சந்திக்க வேண்டியதில்லை. விசாரணையின் போதும் நீதிபதி விசாரணை செய்யும் போதும் தடுப்பு அமைக்கப்பட்டு, குழந்தையைப் பாதிக்காத வகையில் நீதிமன்றம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த வழக்குகள் மாவட்டந்தோறும் இருக்கும் மகளிர் நீதிமன்றங்களில் மூடிய அறைகளுக்குள் மட்டுமே நடைபெறுகின்றன என்று தெளிவுபடுத்தினார்.

இந்தச் சிறப்பு நடைமுறைகளைத் தெரிந்துகொண்டபிறகு, குழந்தை மீதான பாலியல் வன்முறைக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தயாரானார் ராணி. விசாரணையின் போது சுரேஷ் தன் நண்பன் குமாரிடம் குழந்தையை விட்டுவிட்டு வெளியில் சென்றதாகச் சொன்னார். அதைத் தொடர்ந்து சுரேஷ், குமார் இருவரும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களானார்கள். வழக்கு குழந்தைக்குப் பாதிப்பற்ற வகையில் கண்ணியமாக நடந்தது. குமாருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்தது.

குழந்தைக்குப் பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடும் உத்திரவிடப்பட்டது. ராணியைப் போல பல தாய்மார்கள் தகவல் தெரியாமலும் நீதிமன்ற நடைமுறைகள் அறியாமலும் நீதி பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். குற்றங்களை எதிர்த்துப் போராட நாம் புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x