Published : 26 Jun 2016 01:45 PM
Last Updated : 26 Jun 2016 01:45 PM
வீடே கோலாகலமாக இருந்தது. பெரிய அண்ணா, தம்பிகள் இருவர் குடும்ப சகிதம் வந்திருந்தனர் எங்கள் பூதலூர் பூர்விக வீட்டுக்கு. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டின் அருமை எங்களுக்குத் தெரியவில்லை. அவரவர் மணம் புரிந்து, சொந்தக் காலில் நிற்க ஆசைப்பட்டு வாயும் வயிறும் கட்டி, வீடு கட்டத் துணிந்த போதுதான் வீட்டின் அருமை புரிந்தது.
வீட்டில் வளையவரும் பல்லிகள், கரப்புகள், காரை பெயர்ந்த பின்முற்றம், அம்மிக்கல், பெரிய தொட்டிகள், வீட்டைச் சுற்றி மா, பலா, நந்தியாவட்டை, பவழமல்லி, அடுக்கு செம்பருத்தி, சங்குப் பூ, அடுக்கு மல்லி, அரளி, தென்னை, வாழை, எலுமிச்சை மரங்கள். பாட்டி அருமையாகச் சீராட்டிய சாவித்திரி எனும் கூழைப் பசு, மஞ்சு எனும் கன்று. வீடே பேரழகில் ஒளிர்ந்த நாட்கள் அவை. மா, வடுவாகவும், காயாகவும், பழமாகவும் ஆறு முதல் ஏழு மாதங்கள்வரை தின்று திரிவோம். ஒரு இருமல், தும்மல், இழுப்பு .. எதுவும் அண்டியதில்லை.
நான்கு பேர் ஆயுதங்களுடன் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சகோதரர்கள் உடலெங்கும் பரபரப்பு. அவரவர் தஙகளுக்குக் கிடைக்கும் பாகத்தைப் பற்றியும், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தனர். எல்லாம் பேசிமுடித்தாகி விட்டது.
என் கால்கள் நேரே பின் பக்கம் மா மரம் நோக்கிச் சென்றன. 1930-களில் ஒரு முறை ஆந்திரா சென்றபோது தாத்தா இரண்டு மாங்கன்றுகளைக் கொண்டுவந்து நட்டு வைத்தது என்று பாட்டி எப்போதும் சொல்வாள். சுமார் 90 ஆண்டுகள் இருக்கலாம் என்று அப்பாவும் சொல்லிக் கேள்வி.
ஆவக்காய் போடுதல் ஒரு கல்யாணக் கோலம் போல் வீடு அமளி துமளிப்படும். பாட்டி, சித்தி, பெரியம்மா, அத்தை அக்கம் பக்க வீட்டு அம்மாவின் தோழிகள் என பெண்கள் ராஜ்ஜியம் கோலோச்சும். வாண்டுகள் நார்த்தங்காய், மாவடு புடை சூழ பழையது சாப்பிடும். அமிர்தமோ அமிர்தம். பெண்கள் இருவர் இருவராய் வேலையில் ஈடுபடுவர்.
இருவர் சமையலறை. இருவர் காய் தேர்ந்து அரிதல். இருவர் கடுகு பொடித்தல், அதுவும் உலக்கையில். இருவர் அறிவியல்பூர்வமாக அளந்து ஜாடியில் பதம் பார்த்தல். பெண்கள் பாலோ, மோரோ குடித்துப் பசியாறுவர். இதனிடையே மாமியார், நாத்தி எனத் தலைகள் உருளும். இடையே சில கசமுசாக்களும் பேசப்படும். பதின் பருவத்தில் நாங்களும் இதை ஒட்டுக் கேட்டது உண்டு.
ஒருவழியாக ஆவக்காய் படலம் முடிந்து சாப்பாடுக் கடை துவங்க மதியம் 12.30 ஆகி விடும். அன்று சமையல் பல கைகள் சேர்ந்து நன்றாகவே இருக்கும். பருப்பு, புளிப்பு மோர் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய், எலுமிச்சை ரசம், மாங்காய் இனிப்பு பச்சடி, வடகம், அப்பளம், நீர்த்த ஜவ்வரிசி பாயசம். அந்தக் காலத்தில் இது பெரும் விருந்து. வருடம் ஒரு முறை எங்களை எல்லாம் இணைப்பது ஆவக்காய் கல்யாணம். நாங்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது.
இப்படி எத்தனையோ கோலாகலங்களை இந்தப் பூர்விக வீடு கண்டது. நினைவுகளில் மூழ்கிய நேரம், ஒரு பெரிய காய் என் காலடியில் விழவும், பெரிய அண்ணி செல்போனில் பேசிக்கொண்டே வரவும் சரியாக இருந்தது.
“எல்லாம் பழம் தான் விஜி, நாளை பத்திர பதிவு. வாங்கறவங்க மரங்களைக் கழிக்கச் சொல்லிட்டாங்க. அதிலே பிஸி நாங்க.” நான் காயை குனிந்து எடுத்து முகர்ந்துகொண்டே இருகிறேன். காயா, பழமா?
தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT