Published : 11 Jun 2017 02:38 PM
Last Updated : 11 Jun 2017 02:38 PM
வர்ஜினியாவில் உள்ள சும்மிட் தேவாலயத்தில் பிரசங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஆனி பெகிரோ, பசியால் அழுத தன் 19 மாதக் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டினார். உடனே அவர் தேவாலயத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கிருந்த இரண்டு பெண்கள் ஆனியைத் தனியறைக்குப் போகச் சொன்னார்கள். குழந்தைக்குப் பால் கொடுத்தது தவறில்லை என்று நினைத்த ஆனி, அங்கிருந்து செல்ல மறுத்தார். அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.
ஆனி பெகிரோ பலமுறை தான் தாய்ப்பால் ஊட்டுவதை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்புச் செய்திருக்கிறார். அவருக்கு இதில் எந்தத் தயக்கமும் சங்கடமும் இல்லை. ஆனால் தேவாலயத்துக்கு வரும் ஆண்களுக்கு இதனால் சங்கடம் ஏற்படும் என்று சொல்லப்பட்டதால், அவர் வெளியேற்றப்பட்டார். மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான ஆனி, “பெண்கள் ஏன் தனி அறையில் பாலூட்ட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். பெண்களின் குரலுக்கும் தேவாலயத்தின் கோட்பாடுகளில் இடம் இருக்க வேண்டும் என்றார்.
பெண்கள் எங்கு வேண்டுமானாலும் தாய்ப்பால் ஊட்டலாம் என்ற சட்டத்தை வர்ஜினியா அரசு 2015-ம் ஆண்டு அமல்படுத்தியது. அதன் மூலம் எல்லாப் பெண்களும் எங்கேயும் தாய்ப்பால் ஊட்ட உரிமை பெறுகின்றனர்.
“நான் பல நாடுகளில் என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு தாயாக என் உரிமை மறுக்கப்பட்டிருப்தாக நினைக்கிறேன்” என்று சொல்லும் ஆனி, இது குறித்து தேவாலய வழக்கறிஞரிடம் விளக்கம் அளிக்கும்படி கேட்டார். ஆனால் அரசின் இந்தச் சட்டம் குறித்துத் தாங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தேவாலயம் சொல்லிவிட்டது.
இந்தச் சட்டம் ஆளுநர் டெரி மெக் அலிஃப் என்பவரால் அமல்படுத்தப்பட்டது. அதில் பெண்கள், அரசுக்குச் சொந்தமான எந்த இடத்திலும் குழந்தைக்குப் பாலூட்டலாம் என்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போலச் செயல்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுத் தலங்கள் அவற்றுள் அடங்காது.
ஆனி, “பெண்கள் தங்களை மறைத்துக் கொண்டுதான் குழந்தையின் பசியைப் போக்க வேண்டுமா? இந்தச் சம்பவத்தால் நான் மிகவும் உடைந்து போயிருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்த தேவாலயம். ஆனால், இனி ஒருபோதும் அங்கு போக மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.
- வி. பாரதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT