Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM
பாலியல் தொல்லைகள் தொடர்பான சர்ச்சைகள் வெடிக்கும் போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடப்படும் விஷயம் விசாகா நெறிமுறைகள். இப்படி எல்லா சர்ச்சைகளிலும் எடுத்துக்காட்டப்படும் விசாகா நெறிமுறைகள் என்பதுதான் என்ன?
ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்கள் இயக்கம் அங்கே வலுப்பெற ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து பெண்ணுரிமை இயக்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாகா என்ற கூட்டு அமைப்பின் சார்பில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தன. இந்த வழக்கின் அடிப்படையில் 1997இல் உச்ச நீதிமன்றம் பணியிடத்தில் பாலியல் தொல்லை என்றால் என்ன என்பதை வரையறுத்து, அதை எப்படிக் கையாளுவது என்பதற்கு நெறிமுறைகளையும் வகுத்து அளித்தது. அந்த நெறிமுறைகள் விசாகா நெறிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன. அதன் முக்கிய அம்சங்கள்:
பணியிடத்தில் பாலின சமத்துவம் வழங்குவது என்பது, பெண்களுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், அரசியல் சாசனம் வழங்கியுள்ள கண்ணியத்துடன் வேலை செய்வதற்கான உரிமையையும் உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான வேலைச்சூழல் என்பது பணிபுரியும் ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை.
பணியிடத்தில் ஆண் பணியாளர்களுடன் எந்த வகையிலும் பெண் பணியாளர்கள் ஒப்பிடப்பட்டு ஒடுக்கப்படக் கூடாது, எண்ணிக்கையும் குறைக்கப்படக் கூடாது. அப்படி ஒரு நிறுவனத்தில் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் (எ.கா. காவல்துறை, ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவு), அது முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இணக்கமற்ற பாலுணர்வு உள்நோக்கம் கொண்ட நடத்தை (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) பாலியல் தொல்லையாகவே கருதப்படும். அப்படியென்றால், எவையெல்லாம் பாலியல் தொல்லைகள்:
# உடலை தொடுதல், தொடுவதற்கு முன்வருதல்
# உடலுறவுக்கு இசைவு தெரிவிக்க வலியுறுத்துதல் அல்லது கோரிக்கை விடுத்தல்
# பாலியல் தன்மைகொண்ட குறிப்புகள்
# நீலப்படங்களை காட்டுதல்
# இவற்றைத் தவிர பாலியல் நோக்கம் கொண்ட இணக்கமற்ற உடல் தொடுகை, வார்த்தைகள் அல்லது மற்ற தொடர்புகள் எதுவாக இருந்தாலும்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லா நிறுவனங்களும் இது தொடர்பாக புகார் குழு ஒன்றை பணியிடத்தில் உருவாக்க வேண்டும்.
அதன் தலைவராக பெண் இருக்க வேண்டும். அந்தக் குழுவில் குறைந்தபட்சம் பாதி உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT