Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM
ரம்யாவின் ஆளுமையில் இருப்பது, தண்ணீர் பிடித்துவைக்கும் குடம் அல்ல. இசை மேடைகளில் ஒலிக்கும் கடம். மூன்று வயதிலேயே தன்னுடைய அன்னை ஹரிப்ரியாவிடம் இசைப் பயிற்சியைத் தொடங்கியவர், அதன்பின் விஜயா நாகராஜனிடம் (டி.கே.பட்டம்மாளின் சிஷ்யை) பயிற்சியைத் தொடர்ந்தார்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இவரிடம் எடுத்துக் கொண்ட சங்கீதப் பயிற்சி, ரம்யாவின் இசைக்கு பலமான அடித்தளமிட்டது.
பாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரம்யா, அவருடைய அண்ணனுடன் சேர்ந்து மிருதங்தம் வகுப்புகளுக்கும் சென்றிருக்கிறார். அண்ணனுடன் சேர்ந்து ஜதிகளை கொன்னக்கோலாகச் சொல்லிப் பழகியிருக்கிறார். இதனால் ரம்யாவுக்கு லய வாத்தியங்களின் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது.
லய வாத்தியங்களில் கடம் வாசிக்கும் பெண்கள் குறைவு என்பதால், ரம்யாவை கடம் வாசிக்கக் கற்றுக்கொள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார் குரு விஜயா நாகராஜன். உடனே கடம் வித்வான் லால்குடி ராஜசேகரிடம் (விக்கு விநாயக் ராம், டி.வி.ஜியின் சீடர்) கடம் வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
முறையான பயிற்சிகளின் மூலம் தன்னுடைய வாத்தியாருடன் இணைந்து பல மேடைகளில், பாபநாசம் அசோக் ரமணி, சின்மயா சகோதரிகள், திருச்சி சங்கரன் போன்ற பிரபல கலைஞர்களுக்குப் பக்கவாத்தியமாகக் கடம் வாசித்திருக்கிறார். தனியாகவும் பல பிரபலங்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்.
கீதம் மதுரம் என்னும் முழுக்க முழுக்க பெண் கலைஞர்களை மட்டுமே கொண்ட குழுவின் மூலம், இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கிறார்.
வயலின் வித்வாம்சினி கன்னியாகுமரி அவர்களின் ஏற்பாட்டில், 100 வாத்தியங்களுடன் சேர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை வாசிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்திருக்கிறார்.
கன்னியாகுமரியின் மூலம் ரம்யாவுக்கு புகழ்பெற்ற பெண் தபேலா கலைஞரான அனுராதா பால் (தபேலா மேதை ஸாகீர் உசேனின் சீடர்) நட்பு கிடைத்திருக்கிறது. அவரின் ஸ்த்ரீ சக்தி குழுவுடன் இணைந்து மேடைகளில் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
சாஸ்த்ரா கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ரம்யா, கல்லூரி சார்பாக பல போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். கல்லூரியின் இசைக் குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார். டெல்லியில் செயல்படும் இந்திய கலாச்சார ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருக்கும் பல நிகழ்ச்சிகளிலும் ரம்யாவின் கடம் கணீரென்று ஒலித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT