Published : 05 Mar 2017 10:49 AM
Last Updated : 05 Mar 2017 10:49 AM

திருநெல்வேலி மகளிர் திருவிழா: சிந்தனைக்கு விருந்து ஆளுக்கொரு பரிசு!

நெய்வேலி, மதுரை, திருச்சி, ஈரோடு வாசகிகளின் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழாவைக் கடந்த வாரம் பிப்ரவரி 26-ம் தேதி, திருநெல்வேலி வாசகிகளும் கொண்டாடித் தீர்த்தனர். திருநெல்வேலி எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த மகளிர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான வாசகிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பெண்களின் முன்னேற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும் சிறப்புரைகள், கலகலப்பான பேச்சரங்கம், உற்சாகமான போட்டிகள், கொண்டாட்டமான கலைநிகழ்ச்சிகள், எக்கச்சக்கமான பரிசுகள் என இந்த விழா வாசகிகளைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முன்னேறிச் செல்வோம்

‘தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் விழாவுக்கு வந்திருந்த வாசகிகளை வரவேற்றார். விழாவின் சிறப்புரையில் பெண்களுக்கு உதவும் சட்டங்களைப் பற்றி திருநெல்வேலி மாவட்ட சார்பு நீதிபதி ஜெ.தமிழரசி விளக்கினார். தொழில்முனைவோராகப் பெண்கள் எப்படிச் சாதிக்கலாம் என்பது பற்றி முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஹேமா குமரன் சிறப்புரையாற்றினார். பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவும்படி அமைந்திருந்த இந்தச் சிறப்புரைகள் வாசகிகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. அத்துடன், ‘பெண்ணுக்குத் தேவை பொன் நகையா, புன்னகையா?’ என்ற தலைப்பில் கலகலப்பான பேச்சரங்கமும் நடைபெற்றது.

களைக்கட்டிய கலைநிகழ்ச்சிகள்

விழாவுக்கு வந்திருந்த வாசகிகளைப் பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திரா கலாகேந்திரா மாணவிகளின் பரதநாட்டியம் உற்சாகப்படுத்தியது. ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் வெள்ளிவிழாப் பள்ளி மாணவர்கள் தற்போது எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் செல்ஃபி மோகத்தைப் பற்றி விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மைமிங் செய்துகாட்டினார்கள். பெருமாள்புரம் லேடீஸ் கிளப் உறுப்பினர்களின் கோலாட்டத்தை வாசகிகள் பெரிதும் ரசித்தனர். கலைக்கு வயது தடையில்லை என்பதை இவர்களுடைய நடனம் உணர்த்தியது. இவை தவிர, திருநெல்வேலி சாரதா கல்லூரி மாணவிகளின் கோலாட்டம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், மிமிக்ரி போன்றவையும் இந்த விழாவில் இடம்பெற்றன.

பரிசுகளை அள்ளிய வாசகிகள்

மகளிர் திருவிழாவின் ஒரு பகுதியாக வாசகிகளை உற்சாகப்படுத்தும் விதமாகப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாசகிகள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ரங்கோலி போட்டியும் மைமிங் எனப்படும் வசனமில்லா நாடகப் போட்டியும் நடைபெற்றன. பாலினச் சமத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்ற ரங்கோலி போட்டியில் வாசகி எஸ். முருகேஸ்வரி முதல் பரிசைத் தட்டிச் சென்றார். ஜாலி போட்டிகளாக மிஸ். ஞாபகசக்தி, பொட்டு ஒட்டுதல், கோலி விளையாட்டு, ரப்பர்பேண்ட் மாலை உருவாக்குதல், பந்து பாஸ் செய்தல், கயிறு முடிச்சு போடுதல் போன்றவை நடைபெற்றன. இந்த விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வாசகிகளுக்கு மட்டுமல்லாமல் கலந்துகொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வித்தியாசமான வண்ணங்களில் புடவை அணிந்திருந்தவர்கள், தலைமுடியை பாப் கட் செய்திருந்தவர்கள், இரண்டு மூக்குத்தி அணிந்திருந்தவர்கள், நீளமான பொட்டு வைத்திருந்தவர்கள் ஆகியோருக்கு ஆச்சரிய பரிசுகள் வழங்கப்பட்டன. பொது அறிவு மற்றும் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் பற்றிய கேள்விகளுக்குச் சரியான பதிலளித்த வாசகிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ராஜேஸ்வரி, பகவதி அம்மாள், பேச்சியம்மாள், கலாவதி, முத்துமாரி ஆகியோர் பம்பர் பரிசுகளைத் தட்டிச் சென்றனர். இந்தப் பரிசு மழையால் வாசகிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

விழாவின் காலை நிகழ்ச்சிகளை பார்வதி முத்தமிழும், மாலை நடைபெற்ற போட்டிகளை சின்னத்திரைத் தொகுப்பாளினி தேவி கிருபாவும் தொகுத்துவழங்கினர். விழாவில் கலந்துகொண்ட வாசகிகள் அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த விழாவை, ‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன், லலிதா ஜூவல்லரி, தி சென்னை சில்க்ஸ், பொன்மணி வெட்கிரைண்டர், ஆர்எம்கேவி, ஸ்பிக்டெக்ஸ், மைட்ரீம்ஸ், ஆப்பிள் குக்வேர், கரூர் ஹெச் டூ ஹெச் ஆரஞ்ச் இம்பெக்ஸ், தங்கமயில் ஜூவல்லரி, செப்ரானிக்ஸ், நேஹாஸ் பேக்ஸ், எஸ்ஏவி மசாலா, ராஜா ஆயுர்வேத மருத்துவமனை, ஹோட்டல் அப்னா, ஹோட்டல் பானு பிருந்தாவன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x