Published : 01 Jan 2017 01:20 PM
Last Updated : 01 Jan 2017 01:20 PM
தமிழ்ச் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் ஆழமாக வேரூன்றியுள்ளது மட்டுமல்ல; அதன் கிளைகள் அனைத்துத் தளங்களிலும் அகலமாகப் பரவியுள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை பெண்கள் தீட்டு என்ற பெயரில் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். தாய்மைப் பேற்றுக்கான அந்த உடல் மாற்றத்தை இயற்கையானது என்பதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை இந்தச் சமூகம் ஒதுக்கிவைத்தது. பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் நாட்களில் உடல் உபாதைகளுக்கு ஆளாவதுண்டு. அந்த நேரத்தில் அவர்கள் தனிமையையும் ஓய்வையும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அதையே காரணமாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாதமும் அவர்களைத் தனிமைப்படுத்தி, புறந்தள்ளி வைத்தது இந்தச் சமூகம். இன்று அப்படியெல்லாம் இல்லையே என்று இந்த வாதத்தைப் புறங்கையால் பலர் தள்ளிவிட்டுப் போகலாம். ஆனால் அந்த நாட்களின் தனிமைப்படுத்துதலை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும்.
இன்றும் பல கிராமங்களில் மாதவிடாய் தீட்டு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய்க் காலத்தில் வீட்டில் உள்ள எந்தப் பொருட்களையும் பெண்கள் தொடக் கூடாது. தவறித் தொட்டுவிட்டால், கடுமையான சொற்களால் தூற்றப்படுவார்கள். அவர்கள் தொட்ட பொருட்களும் வெளியில் தூக்கி வீசப்படும். மாதவிடாய்க் காலத்தில் பள்ளி செல்ல அனுமதியில்லை. ஐந்தாம் நாள், தீட்டு குளிக்கும் நாள். அன்று வீட்டில் உள்ள பல பொருட்கள் வெளியில் வந்துவிடும். அவற்றையெல்லாம் சுத்தப்படுத்திவிட்டுத்தான் அவள் வீட்டுக்குள் நுழைய முடியும்.
கற்றுத் தருகிறோமா?
தீட்டு குறித்த மதச் சடங்குகளும் குலச் சடங்குகளும் ஏராளம். அவை தரும் சங்கடங்களும் ஏராளம். இந்தக் காலத்தைப் போல பாலியல் சார்ந்த கல்வியைப் போதிக்கும் புத்தகங்களோ வலைத்தளங்களோ அந்தக் காலத்தில் இல்லை. போதுமான தெளிவு இல்லாததால் தனக்கு நேர்ந்த உடல் மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல், தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று மனப் பாதிப்பு அடைந்த இளம் பெண்கள் ஏராளம். அவர்களுக்கெல்லாம் பேய் பிடித்துவிட்டது என்று கூறி, சாமியாடிகளிடம் அழைத்துச் சென்று செய்த கொடுமைகள் எல்லாம் சொல்லாத கதைகளாக விரிந்து கிடக்கின்றன.
பெண்களின் மாதவிடாயை முதன்மைப்படுத்தி, தாய்வழிச் சமூகத்தைப் புறந்தள்ளி, தங்களுக்கான ஆட்சியை அமைத்துக் கொண்டனர் தந்தைவழிச் சமூகத்தினர். பருவமடையும் காலத்தை, ‘ஆணுக்குச் சிறகுகளும் பெண்ணுக்கு விலங்குகளும் உருவாகும் காலம்’என்கிறார் கவிஞர் மத்யமாவதி.
இன்றுகூட, 50 சதவீத வளரிளம் பெண்களுக்குத் தங்கள் உடல் வளர்ச்சி பற்றிய புரிதல் கிடையாது. காரணம் இன்றும் பல அம்மாக்கள் இது பற்றி தங்கள் மகள்களிடம் பேசுவதில்லை. பள்ளிகளிலும் இது பற்றிய விழிப்புணர்வு கல்வி கற்றுத் தரப்படுவதில்லை.
பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்துகிற நாப்கின்களை எப்படி முறையாகப் பயன்படுத்த வேண்டும், எப்படி முறையாக அழிக்க வேண்டும் என்று சொல்லித் தரப்படுவதில்லை. இன்று ஒரே முறை பயன்படுத்தி, தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் கிடைத்தாலும்கூட, இன்றும் பெண்கள் சொல்ல இயலாத துன்பத்துக்கு ஆளாகின்றனர். நாப்கின்களின் செயற்கை இழை பெண்களுக்கு ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை பாதிப்புகள் பல. சுத்தமானவை என்ற விளம்பரத்தோடு கிடைக்கிற நாப்கின்களைப் பயன்படுத்துகிற இந்தக் காலத்திலும் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் தங்கள் உடலைப் புரிந்துகொள்வதில் தொடங்கி, அவர்கள் அனுபவிக்கும் சிக்கல்கள் ஏராளம். ஆணாதிக்க உலகம் இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அவர்களை அடக்கி ஆள்வதையும் அப்புறப்படுத்துவதையும் ஒதுக்கி வைப்பதையும் தொடர்கதையாகச் செய்துகொண்டிருக்கிறது. இத்தனையும் மீறி சாதிப்பதுதான் பெண்ணினப் போராட்டத்தின் வெற்றி.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT