Published : 12 Mar 2017 01:39 PM
Last Updated : 12 Mar 2017 01:39 PM

கணவனே தோழன்: தாயுமானவர்

என் கணவர் என் மீது எப்போதும் பிரியம் கொண்டவர் என்றாலும் அதை நான் முழுவதுமாக உணர்ந்தது என்னுடைய இரண்டாவது பிரசவத்தில் தான். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டுமே சிசேரியன் பிரசவம். இரண்டாவது குழந்தை வயிற்றில் எட்டு மாதம் இருக்கும்போது பரிசோதித்த டாக்டர், “கொஞ்சம் சிக்கலா இருக்கு. நீங்க எந்த வேலையும் செய்யக் கூடாது, பளு தூக்கக் கூடாது. இல்லைன்னா பிரசவத்தின்போது கஷ்டமாயிடும்” என எச்சரித்தார்.

நான் பயந்துவிட்டேன். என் கணவரோ, “நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். என் பெரிய மகளை பள்ளிக்கு அனுப்புவது முதல் சமையல்வரை எல்லா வேலைகளையும் அலுத்துக்கொள்ளாமல் செய்தார்.

தன் பக்தனுக்காக சிவபெருமான் பெண்ணாக மாறி பிரசவம் பாரத்ததால் அவரை தாயுமானவர் என்று அழைக்கிறார்கள். அதுபோல் என் கணவரும் எனக்குத் தாயாக மாறி என்னைக் கவனித்துக்கொண்டதால் அவரும் எனக்குத் தாயுமானவரே!

- ப்ரியா லட்சுமணன், திருவண்ணாமலை.



வார்த்தெடுக்கும் சிற்பி

சிறு வயது முதலே பத்திரிகைகள் படிப்பதற்கும் அவற்றில் எழுதுவதற்கும் எனக்கு ஆர்வம். முதலில் வாசகர் கடிதம் எழுதினேன். அதைப் பார்த்த என் கணவர் என்னை ஆன்மிகத் தகவல்கள், சமையல் குறிப்புகள், பொது அறிவு செய்தி, துணுக்குகள், குறுக்கெழுத்துப் போட்டி என்று பலவற்றிலும் என்னை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினார்.

சில நேரம் பத்திரிகைகளுக்கு நான் எழுதி அனுப்பியது தேர்வாகவில்லை என்றால், நான் மிகவும் சோர்ந்துவிடுவேன். எனக்கு ஆறுதல் கூறி, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பார். அவரின் ஒத்துழைப்பால் நான் எழுதியவை வெளிவரத் தொடங்கி, இப்போது நானும் எங்கள் பகுதியில் பெயர் தெரியும் அளவுக்குப் பிரபலமானதற்கு என் கணவர் தந்த ஊக்கமே காரணம்.

என் எழுத்துகளின் முதல் வாசகனாக இருந்து இது நல்லா இருக்கு, இதை மாற்றி இப்படி எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை சொல்வார். வாசிப்பது எனக்கு சுவாசிப்பதைப் போல். நான் கேட்கும் பத்திரிகைகளைச் சலித்துக்கொள்ளாமல் வாங்கிக் கொடுப்பார். இப்படிப் பார்த்துப் பார்த்து என்னை வார்த்தெடுக்கும் தோழன் அவர்.

- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முப்பேர், சென்னை.





உங்க வீட்டில் எப்படி?

தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x