Published : 10 Jul 2016 03:31 PM
Last Updated : 10 Jul 2016 03:31 PM
மரத்தடியில் கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. ரஞ்சிதத்தைப் போலவே அவளுடைய முறை மாமனான வாசுவும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். எங்கே தன் அய்யா ரஞ்சிதத்தைத் தனக்குப் பேசாமல் தன் ஒன்றுவிட்ட அத்தை மகளான மாகாளியைத் தனக்கான மனைவியாகப் பேசிவிடுவாரோ என்று உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தான்.
ஏனென்றால் ரஞ்சிதத்தின் வீடு ரொம்பவும் வசதியில்லாத வீடு. கல்யாணம் என்று வந்தால் அவளுக்கான சீர், செனத்தியை மட்டுமே செய்வார்கள். ஆனால் மாகாளி வீடு கொஞ்சம் வசதியான வீடு. வாசு மாகாளியைக் கட்டிக்கொண்டால் ஐம்பது ரூபாய்க்கு ஒரு சோடி காளை மாடுகள் வாங்கித் தருவதாக மாகாளியின் அய்யா கோதண்டம் சொல்லியிருந்தார்.
ஐம்பது ரூபாய் என்பது அப்போது ஐந்து லட்சம் பெறுமானமாகும். ஒருவேளை அய்யா அதற்கு ஆசைப்பட்டு விடுவாரோ என்று நொந்து, நொறுங்கிப் போய்க் கிடந்தான். அப்படி ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் ஊரைவிட்டே போய்விடுவது என்றுகூட முடிவெடுத்திருந்தான்.
ஏனென்றால் அவன் ரஞ்சிதத்தோடு அப்படிப் பழகியிருந்தான். இவர்கள் இருவரும் அத்தை மகள், மாமன் மகன் என்பதால் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போய் வந்து இருந்ததில் ரொம்பவும் நெருக்கமாகவே ஆகிவிட்டார்கள். ஒன்றாகச் சேர்ந்து ஆடு, மாடு மேய்க்கப் போவது, கத்தாழைப் பழம் பிடுங்கி நாக்கைச் சிவக்க வைப்பது, முள்வேலிகளில் படர்ந்திருக்கும் கோவம்பழங்களையும், இலந்தம்பழங்களையும் போட்டி போட்டுக்கொண்டு பறிப்பது, தாங்கள் மேய்க்கும் ஆடுகளின் பாலை ஒருவர் முகத்தில் ஒருவர் கறந்துவிடுவது என்று அத்தனை பிரியமாக இருந்தவர்களை ஒரு சோடிக் காளை மாடுகள் பிரித்துவிடுமோ என்ற கவலையில் வெக்கை மூச்சு பறக்க ஆளுக்கு ஒரு பக்கமாக நின்றிருந்தார்கள்.
அந்தக் காலத்தில் பெற்றோர்களிடம் தங்கள் கல்யாணத்தைப் பற்றியோ தனக்கு இன்னார்தான் மனைவியாக, கணவனாக வர வேண்டுமென்றோ யாரும் சொல்வதில்லை. சொல்லவும் கூடாது. அது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. பெற்றவர்கள் யாரை மணமகனாக, மணமகளாகப் பேசுகிறார்களோ அவர்களை மறுபேச்சு பேசாமல் ஏற்றுக்கொண்டு அவர் களுடன்தான் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
பிறந்ததுமே திருமணப் பேச்சு
அந்தக் காலத்தில் முக்கால்வாசி கல்யாணங்களைச் சொந்தங்களுக்குள்ளேயே பேசிவிடுவார்கள். அதிலும் பிறந்ததுமே இன்னாருக்கு இன்னார்தான் என்று பேசி, அதையே சொல்லி, சொல்லி அவர்களின் மனதிலும் பதியவைத்துவிடுவார்கள். நிறைய கல்யாணங்கள் பெற்றவர்களின் எதிர்பார்ப்பின்படியே நடந்துவிடும். ஆனால் சில பெண்களும் ஆண்களும் மட்டும் சிறுபிள்ளைகளில் பேசிய கல்யாணங்களை மறுத்து மவுனமாக மறுப்புக்காட்டுவதும் உண்டு.
அதிலும் இந்தப் பெண்கள் தாங்கள் உடுத்தும் சேலையின் கொசுவங்களிலேயே தங்களின் உணர்வுகளைக் காட்டிவிடுவார்கள். மணமகன் தனக்குப் பிடித்தவன் என்றால் அழகாக அடுக்கடுக்காகக் கொசுவம் வைத்துச் சேலை உடுத்திக்கொண்டு தனக்குப் பேசியவன் வேலைக்குப் போகும் காடுகளுக்கே இவளும் வேலைக்குப் போவாள்.
மணமகன் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் தட்டுக் கொசுவம் வைத்துச் சேலை உடுத்துவதோடு எதிர் வரப்பிலோ தான் போகும் பாதையிலோ இவளுக்காகப் பேசியவன் வருகிறான் என்றால் அப்படியே கொஞ்சத் தூரத்துக்கு விலகி நிற்பதோடு முகத்தையும் வேறு பக்கமாகத் திருப்பிக்கொள்வாள்.
தனக்குப் பிடித்தவனை, தான் உயிராக நினைத்த வனை வேறொருத்தி மணக்கப் போகிறாள் என்று தெரிந்தால் இடுப்பு நிறைய இருக்கும் கொசுவத்தை மடக்கி, ‘மூடு கொசுவமாக’ப் போட்டுக்கொண்டு சேலையை உடுத்துவதோடு குராவிய முகம் (சோகம்) கொண்டு யாரிடமும் பேசாமல், சிரிக்காமல் கடனே என்று காட்டு வேலைகளுக்குப் போய்வருவாள்.
இப்படிப்பட்ட பெண்களின் உணர்வுகளை அவர்களின் சேத்திக்காரிகள் கண்டுபிடித்து விடுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்களிடமும் போய்ச் சொல்லிவிடுவார்கள். சில பெற்றோர்களோ, ‘அவளுக்கென்ன அம்புட்டு திமிரு. நாங்க பெரியவக இவ பிறந்த உடனே அவனுக்குத்தேன்னு பேசி, அன்னைக்கே வெத்தலை பாக்கு மாத்திக்கிட்டோம். இன்னைக்கு இவ மாட்டேன்னு சொன்னா விடுவமா?’ என்று கட்டாயக் கல்யாணம் முடித்துவைத்துவிடுவார்கள்.
இப்படிக் கட்டாயக் கல்யாணம் பேசிய பெண்கள் நினைத்தவனை மணக்க முடியவில்லையே என்று துக்கத்தில் கல்யாணத்துக்கு முன்பே தங்களை மாய்த்துக்கொள்வதும் உண்டு. ஒரு சில பெண்கள், ‘ஆமா அவன என்ன தங்கத்திலயா செஞ்சிருக்கு? எவனாச்சிலும் ஒருத்தனுக்கு வாக்கப்படணும். அது எவனாயிருந்தா என்ன?’ என்று மனதுக்குப் பிடிக்காதவனை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் ஜெயித்துக்காட்டுவார்கள். அன்று ஐந்தாறு கல்யாணம் பேசி முடித்தார்கள். நல்லவேளையாக வாசுவின் கல்யாணத்தைப் பற்றி பேசவே இல்லை.
கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT