Published : 21 May 2017 12:16 PM
Last Updated : 21 May 2017 12:16 PM
நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவரும் மாணவி. எங்கள் கல்லூரியில் புவியியல் பாடம் நடத்தும் பேராசிரியர் வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டார். மிகவும் அருமையாக பாடம் நடத்துவார். புரிந்துகொள்ள கடினமான பாடங்களைக்கூட எளிதில் புரியவைத்துவிடுவார். அவர் மாற்றலாகிச் சென்றது எங்களுக்கு வருத்தமளித்தது.
பாடங்கள் புரியாமல் நாங்கள் சோர்ந்துபோன போதெல்லாம் எங்களுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தியிருக்கிறார். அதனால் அவர் அவருக்குப் பிரிவு உபசாரம் செய்ய சிறிதாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அப்போது எடுத்த புகைப்படங்களில் ஒன்றை வாட்ஸ் அப்பில் முகப்புப் படமாக வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு என் பெற்றோர் என்னைக் கண்டித்துத் திட்டினார்கள்.
ஏன் அவரது படத்தை வைத்தாய் என்று கேட்டதோடு இது வயதின் கோளாறு என்று முத்திரை குத்தினார்கள். புதுமைப் பெண் என்ற நினைப்பில் இப்படிச் செயல்பட வேண்டாம் என்றும் கண்டித்தனர். நான் என்ன தவறு செய்தேன் என்று புரியவில்லை. ஆசிரியர் மீது கொண்ட மதிப்பால் மிக இயல்பாக செய்த செயல் அது. என்னைப் பொறுத்தவரை இது மிக மேலோட்டமான ஒரு விஷயம். இதையே ஒரு மாணவன் செய்திருந்தால் இதை சாதாரணமாகப் பார்த்திருப்பார்கள். என்னிடம் கேட்டது போல ஒரு கேள்விகூட கேட்டிருக்க மாட்டார்கள்.
என் பெற்றோர் சொன்னதை நினைத்தபடியே இரவெல்லாம் விழித்திருந்தேன். ஏன் இப்படி நடந்துகொண்டார்கள்? என் பெற்றோரை மற்றவர்களைப் போல குறுகிய மனப்பான்மையுடன் இல்லாமல் தனித்து நிற்பவர்கள் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தேன். ஆனால், அவர்களும் மற்றவர்களைப் போலத்தான் அனைத்தையும் மேலோட்டமாக நினைக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது.
எத்தனையோ சூழ்நிலைகளில் எனக்குக் கைக்கொடுத்தவர்கள் இப்போது இப்படி நடந்து கொண்டது ஏன்? என்னதான் ஒரு பெண் படித்து, உயர்ந்த நிலையை அடைந்தாலும் அவள் மீது செலுத்தும் அதிகாரமும், அவளைப் பார்க்கும் பார்வையும் என்று மாறுமோ? அடிப்படையில் அவள் ஒரு பெண் என்ற பார்வையோடுதான் அணுகுகிறார்கள். எதிர்ப்பாலினரை நட்போடு நடத்துவதும், குரு ஸ்தானத்தில் வைத்து மதிப்பதும்கூட கேள்விக்குள்ளாக்கப்படுகிற சமூகத்தில், அடுத்த கட்ட நிலைகளை நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது. இதையெல்லாம் புறக்கணிக்கும் மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கும்வரை மாற்றம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.
- ச.நி.தாரணி தேவி, தர்மபுரி
நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT