Published : 02 Jun 2019 09:47 AM
Last Updated : 02 Jun 2019 09:47 AM
தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டுவிட்டதால் அநேகப் புத்தகங்களைப் படித்து வருகிறேன். புத்தகங்கள் உத்வேகம் தந்து நம் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைப்பனவாக இருக்கின்றன. புத்தகக் காட்சியில் வாங்கும் புத்தகங்களையும் அவ்வப்போது தேர்ந்தெடுத்து வாங்குகிறவற்றையும் படிக்கிறபோது ஏற்படும் மாற்றம் பிரமிப்பாக இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, ‘எனது இந்தியா’ புத்தகம் அண்மையில் நான் வாசித்தவற்றுள் என்னைக் கவர்ந்தது.
இமயம் தொடங்கி குமரிவரையிலான நம் நாட்டின் நிலப்பரப்பில் நடந்த பல வரலாற்று நிகழ்வுகளை வரலாற்று ஆசிரியர்போல் இந்த நூலில் எஸ். ராமகிருஷ்ணன் விவரித்திருக்கிறார். நாம் பள்ளியில் படித்த வரலாறு வெறும் தகவல்களை மட்டுமே நமக்குத் தருகிறது. தகவல்களுக்கு உள்ளே இருக்கும் சம்பவங்கள் நாம் படிக்கும் பாடப் புத்தகங்களில் விரிவாக எடுத்துரைக்கப்படுவதில்லை. நம் வரலாறை நாமே அறியாமலும் தேசம் பற்றிய புரிதல் இல்லாமலும் இத்தனை ஆண்டு கால சுதந்திரத்தை அனுபவித்துவந்த குற்றவுணர்வு இந்தப் புத்தகத்தைப் படித்தபோது நீங்கியது.
தேசப் பிரிவினை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், சமஸ்தானங்களின் ஒருங்கிணைப்பு, மகாத்மாவின் மறைவு, அந்தக் கால மன்னர்களின் ஆட்சி, சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய செய்தி, கல்வி, சுற்றுச்சூழல் எனப் பல்வேறு தலைப்புகளில் நம் வரலாற்றை வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. நிறையப் பயணம் செய்து நாட்டையும் வரலாற்றையும் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் தோன்றியது. ஒவ்வொரு அமெரிக்கரும் தன் வாழ்நாளில் குறைந்தது மூன்று முறையாவது அமெரிக்கா முழுவதும் பயணம் செய்துவிடுவதாக ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ஆனால், நாமோ வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தொலைக்காட்சியில் தொலைந்துபோகிறோம்.
- வி.கவிதா, சேலம்.
காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல படிப்பு, மாலை முழுவதும் படிப்பு என வழக்கப்படுத்திக்கொண்ட 79 வயது பாப்பா நான். பெட்டிக் கடையில் தொங்கும் போஸ்டரில் தொடங்கி பொட்டலம் கட்டிவரும் காகிதம்வரை ஒன்றையும் விடாமல் படித்துவிடுவேன். எழுத்தாளர்களில் பால் பேதம் பார்ப்பதில்லை. ரா.கி. ரங்கராஜன் தொடங்கி பாக்கியம் ராமசாமிவரை பாக்கியில்லாமல் படித்திருக்கிறேன். தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி நூல்களையும் படிக்க ஆசை. சிறு வயதில் மாம்பலம் குருகுலத்தில் ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா வீட்டில் சம்ஸ்கிருதம் கற்றுக்கொண்டேன். தினமும் அவர்கள் வீட்டில் கொடுக்கும் நைவேத்யப் பொங்கலுக்காக ஓடுவோம்.
அப்பா எல்லா தோத்திரங்களையும் சொல்லித்தருவார். அவற்றை சம்ஸ்கிருதத் தில் படித்தால்தான் சரியான உச்சரிப்பு வரும் என்பார். அதனாலே சம்ஸ்கிருதத்தையும் ஓரளவு கற்றுக்கொண்டேன். எப்போதும் என் தலையணை அடியில் இந்தி-ஆங்கிலம், ஆங்கில அகராதி போன்றவற்றை வைத்திருப்பேன். தெரியாத, புரியாத சொற்களுக்கு உடனே அவற்றின் உதவியை நாடுவேன்.
சாப்பிடும்போது படிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், எனக்குப் புத்தகங்கள் தாம் தொடுகறி. ‘வியாசர் விருந்து’, ‘சக்ரவர்த்தி திருமகன்’ போன்றவை யெல்லாம் சாப்பிடும்போது படித்தவைதான். படிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத இந்த வயோதிக நிலையில் வாசிப்புதான் என் சுவாசிப்பைப் பலப்படுத்துகிறது.
- ஜானகி ரங்கநாதன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT