Published : 19 May 2019 10:02 AM
Last Updated : 19 May 2019 10:02 AM
தளராமல் நின்ற மர வீடுகள், உலராமல் கிடந்த யானையின் சாணம், மலராமல் காத்திருந்த கள்ளிப் பூக்கள், ஓயாமல் கேட்ட பறவைகளின் இசை என அந்த மலையில் எங்கள் வாகனம் ஏறியபோது கிடைத்தது தனி அனுபவம். அந்தச் சூழல் மனத்தைக் கொள்ளைகொண்டது.
சுமார் 700 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது பரளிக்காடு சூழலியல் தளம். இப்பகுதிக்குப் பேருந்து வசதி குறைவு என்பதால், கார் அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வது நல்லது. இயந்திரமய வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து சற்றே விடுபட்டு, இயற்கையோடு மீண்டும் இணைய விரும்புபவர்கள் பரளிக்காட்டுக்குச் சென்று வரலாம். காரமடை, மேட்டுப்பாளையத்துக்கு அருகிலிருக்கும் பரளிக்காடு காட்டுப்பகுதி நிறைய ஆச்சரியங்களை அளிக்கக்கூடியது.
இதம் தந்த பானம்
அரசு வனத்துறை ஏற்பாடு செய்துள்ள இந்தச் ‘சூழலியல் சுற்றுலா’வுக்குக் காலை பத்து மணி அளவில் சென்றுவிடலாம். பரளிக்காட்டை அடைந்ததும் ஈரப்பதத்தைச் சுமந்துவரும் தென்றல் காற்று மேனியைத் தழுவி உடலுக்கு இதம் தருகிறது. உள்ளே நுழையும்போதே சுக்குக் காப்பி கொடுத்து இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். குளிர்ச்சிக்கு இதமாக அந்தச் சூடான பானத்தை உறிஞ்சிக்கொண்டே சுற்றிலும் பார்த்தபோது, மிகப் பெரிய விருந்தைப் படைப்பதற்காக இயற்கை காத்துக் கிடப்பதுபோல் தோன்றியது.
கண்களுக்கு எதிரே மெல்லிய இசை போன்ற சலனத்துடன் ஓடிக்கொண்டிருந்தது பவானி ஆறு. ஆற்றுநீர் எதிர்க் கரையிலிருந்த சிறிய மலை மீது முட்டி முட்டித் திரும்பியது. எத்திசையில் திரும்பினாலும் நீர்ப்பிரவாகம்தான். ஆற்றங்கரை முழுவதும் ராணுவ வீரர்கள்போல் கம்பீரமாக மரங்கள் வரிசைகட்டி நின்றிருந்தன. அவற்றில் பெரிய ஆலமரங்களும் அடக்கம். அவற்றிலிருக்கும் விழுதுகளுக்குத் துணையாகக் கயிற்று ஊஞ்சல்கள் கட்டப்பட்டிருந்தன. சிறுவர்களும் பெரியவர்களும் வயது வித்தியாசமின்றிக் குதூகலித்து ஊஞ்சலாடும் வாய்ப்பை ஆலமரங்கள் வழங்கின. கரையிலிருந்து முதுகை வளைத்ததுபோல, சில மரங்கள் மட்டும் தண்ணீரை நோக்கி வளைந்திருந்தன.
மழை தரும் புது வாசம்
கரையோரத்தில் பரிசல்கள் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. ஒரு பரிசலில் நால்வர் செல்லலாம். நேரம் செல்லச் செல்லப் பரிசலில் மிதந்துகொண்டே இயற்கை அழகை ரசிப்பதற்கான ஆர்வம் அதிகரித்தது. அப்பகுதி மலைவாழ் மக்கள்தாம் பரிசலோட்டிகள்.
பில்லூர் அணையின் விசாலமான நீர்த்தேக்கப் பகுதியில் பரிசல் பயணம் நடைபெறுகிறது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலிருந்து தண்ணீர்வரத்து அதிகமாக இருந்ததால், ஆறு கடலெனக் காட்சியளித்தது. கரையைவிட்டுப் பரிசல்கள் மெல்ல மெல்ல விலகிச் சென்றன.
பிரம்மாண்டத் தண்ணீர்ப் பைகளைப் போல மழைநீரைத் தேக்கி வைத்துக்கொண்டு கருமையான மேகங்கள் தலைக்கு மேலே காத்துக் கிடந்தன. ஆனால், பெருமழையாகப் பொழியாமல் சாரலாகப் பொழிந்து சூழலை மேலும் அழகாக்கின. மழை பெய்ததும் மண்வாசனை எங்கிருந்தோ புறப்பட்டு வருவதைப் போல, நீர்வாசனை எழுந்து நாசியைத் துளைத்தது. மழையோடு கூடும்போது நீரும் புது வாசம் பெறுகிறது!
தண்ணீர் குடிக்கவரும் யானைகள்
எங்கள் பரிசலோட்டி, மலையோரத்துக்கு அழைத்துச் சென்றார். சேறு அதிகமிருந்ததால், அங்கே இறங்க முடியவில்லை. இல்லையென்றால் அப்பகுதியில் இறங்கிச் சில நிமிடங்கள் உலாவ அனுமதி உண்டாம். “யானைகள் இங்கே தண்ணீர் குடிக்க வரும்” என்று பரிசலோட்டி கூற, உடனடியாகக் கண்கள் யானைகளைத் தேடத் தொடங்கின. தூரத்தில் தெரிந்த கரும்பச்சை நிற மரத்தொகுப்பு யானைகள்போல் தோன்றியது. பார்வை எல்லையில் தெரிந்த சிறிய குன்றுகளும் யானையின் பிம்பங்களாகத் தெரிந்தன. சுமார் இரண்டு கி.மீ. தொலைவு ஆற்றுப் பயணத்துக்குப் பிறகு, பில்லூர் அணை கண்களில் தென்பட்டது.
ஆற்றின் மையத்தில் நான்கைந்து பரிசல்கள் நகர்ந்துகொண்டிருக்க, “இந்த இடத்துல தண்ணியோட ஆழம் சுமார் எண்பது அடி இருக்குங்க” எனப் பரிசலோட்டி கூறினார். ஆழத்தைக் கற்பனை செய்து பயத்தின் வாசலில் காலடி எடுத்துவைக்கும் முன்பே, பரிசலின் வேகத்தைக் குறைத்து மும்முறை சுழற்றி, இன்ப அதிர்ச்சியை அளித்தார் பரிசலோட்டி. பின்னர் திசை திரும்பிய பரிசல், எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு எதிர்ப்புறம் இருந்த மலையடிவாரம் நோக்கிப் பயணித்தது. அங்கிருந்த சிறு குன்றில் இரண்டு அழகான மரவீடுகள் இருந்தன. முன்பதிவு செய்து, அதில் ஒருநாள் தங்கும் வசதியும் உண்டு.
ஒளிப்படங்கள் எடுப்பதற்காகப் பரிசல்கள் சிறிது நேரம் தண்ணீரிலேயே ஓய்வெடுத்தன. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் கழித்து, பயணம் தொடங்கிய இடத்தை நோக்கிப் பரிசல் மிதக்க ஆரம்பித்தபோது, தண்ணீரிலேயே மிதந்துகொண்டிருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது.
ஆசுவாச நடைப்பயணம்
பயணம் முடிந்து கரையில் இறங்கியதும், சுடச்சுட மதிய உணவு பரிமாறப்பட்டது. வழக்கத்திலிருந்து மாறுபட்டு, ஆலமர நிழலில் தண்ணீரின் நிற்காத அசைவை ரசித்துக்கொண்டே சாப்பிடும் சூழல் ரசிக்கத்தக்கதாக இருந்தது. கேழ்வரகுக் களி தவிர்த்து மற்ற உணவு வகைகள் வழக்கமானவையே. அப்பகுதியில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரித்த உணவை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதைப் பற்றிக் கேட்டபோது, “சுற்றுலா வரும் பலருக்கு இயற்கை உணவு பிடிப்பதில்லை. அப்படிச் சமைக்கப்படும் உணவு வகைகளும் வீணாகின்றன. எனவேதான் இப்படி” என அங்கலாய்த்தார் உணவு பரிமாறியவர்.
புளி, மலைத்தேன், பூண்டு, முடக்கறுத்தான் என மலைவாழ் மக்களின் பொருட்களின் விற்பனையும் அங்கு களைகட்டியது. கலைநுட்பத்துடன் செய்யப்பட்ட துடைப்பங்கள் பலரைக் கவர்ந்தன. சிலவகை மரங்களிலிருந்து நார்களைப் பிரித்தெடுத்து, கோத்துக் கயிறாக்கிச் செய்யப்பட்ட துடைப்பங்கள் அவை.
நல்ல மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக இருந்ததால், ஆற்றில் குளிப்பது அன்றைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. குரங்கனி விபத்துக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளதாக வனக் காவலர் ஒருவர் சொன்னார். சில மாதங்களுக்கு முன்புவரை சிறிது தொலைவு காட்டுப் பயணமும் இந்தச் சூழலியல் சுற்றுலாவில் இருந்திருக்கிறது.
இயற்கையோடு உறவாடிய குழந்தைகளின் முகத்தில் உற்சாகத்தைக் காண முடிந்தது. உண்ட பிறகு குறுநடைகொள்வோம் என அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சிலர் மட்டும் நடைப்பயணம் மேற்கொண்டோம். தாவரங்களையும் மரங்களோடு அணைத்து ஏறும் பல்வேறு கொடி வகைகளையும் காண முடிந்தது. ஆற்றங் கரையோரம் என்பதால் சில்லெனக் காற்று வீசிக்கொண்டே இருந்தது. பலவகைப் பறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளுமாக அள்ள அள்ளக் குறையாத இயற்கைச் செல்வங்களுடன் திகட்டாமல் இருக்கிறது பரளிக்காடு.
- வி. விக்ரம்குமார்
மதிய உணவோடு சேர்த்து நபருக்கு ஐந்நூறு ரூபாய் நுழைவுக் கட்டணம். ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு: http://coimbatorewilderness.com/Booking-Baralikadu.aspx சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு அனுமதி. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT