Published : 14 Apr 2019 01:16 PM
Last Updated : 14 Apr 2019 01:16 PM

சின்ன சின்னதாய்: கரும்புக்காகப் பறிக்கப்படும் கருப்பைகள்

கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்யும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஓய்வெடுப்பார்கள் என்பதற்காகவே அவர்களின் கருப்பைகளை அகற்றும் பயங்கரம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது. வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் 50 சதவீதப் பெண்களுக்குக் கருப்பை நீக்கப்பட்டுள்ளது. வேலை பறிபோகும் எனப் பயந்து பெண்கள் யாருமே புகார் தெரிவிக்க முன்வரவில்லை. தற்போது இந்த அதிர்ச்சிகரமான தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

gudhiraijpg100 

குதிரையில் சென்ற மாணவி

திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணா, பத்தாம் வகுப்பு மாணவி. இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற்றபோது, கடைசித் தேர்வைக்  குதிரையில் சென்று எழுதியுள்ளார். நன்கு பயிற்சி பெற்றவர்கூட போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் குதிரையை ஓட்டத் திணறும் நிலையில், பள்ளி மாணவி ஒருவர் பதற்றமில்லாமல் குதிரையில் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை மட்டுமே கொண்ட ‘பெண் எழுத்து’ என்னும் ஒரு தனித் தாளை சென்னை ராணி மேரி கல்லூரியின் தமிழ்த் துறை அறிமுகம் செய்துள்ளது. அம்பையின், ‘காட்டில் ஒரு மான்’ நாவல், மாலதி மைத்திரியின் கவிதைகள், சுய மரியாதை இயக்கத்திலிருந்த பெண்களின் வரலாறு போன்றவை ‘பெண் எழுத்து’ என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளன. “பெண்ணியம் என்ற பாடத்தை எளிதில் புரியவைக்க, அதை இலக்கிய வடிவில் தர முடிவு செய்தோம்” என்று அந்தக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியரான பத்மினி கூறியிருக்கிறார்.

சூடான் அதிபர் ஒமர் அல் பஷீருக்கு எதிராக 30 ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்துவந்தன. சமீபத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காரின் மீது ஏறி நின்று, ‘தோரா’ (புரட்சி எனப் பொருள்) என்று அரபி மொழியில் முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய ஹலா ஆல் கரீப் எனும் இளம் பெண்ணின் புகைப்படம் வைரல் ஆனது. தற்போது பஷீரின் ஆட்சி முடிவுக்கு வந்ததாக ராணுவம் அறிவித்து அவரைக் கைது செய்திருக்கிறது. மூன்று மாதங்களில் ஜனநாயக முறைப்படி சூடானில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x