Published : 07 Apr 2019 10:57 AM
Last Updated : 07 Apr 2019 10:57 AM

கற்பிதமல்ல பெருமிதம் 52: பேசினால் தீரும் பிரச்சினைகள்

பெண்ணின் உடல் மீதான கற்பிதங்கள் பற்றி எழுத ஆரம்பித்த இந்தத் தொடரில் பல வாரங்கள் பாலியல் வன்கொடுமைகள் பற்றியே எழுத நேர்ந்தது. பாலியல் பற்றிய புரிதலில் மட்டுமன்றி ஆண் - பெண் உறவு, குடும்பம், வாழ்க்கை ஆகியவை பற்றி நம்முடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் முரண்பாடுகள் இருந்துகொண்டே வருகின்றன.

கலாச்சாரம் என்று நம்மால் கற்பித்துக்கொள்ளப்பட்ட பல்வேறு விஷயங்களில் இருந்து இன்னும் நம்மால் வெளியே வர முடியவில்லை. ஆனால், வளர்ந்த நாடுகளில் உள்ள பழக்க வழக்கங்களைப் பின்பற்ற நினைக்கிறோம். குழந்தைகளைத் தனித்து இயங்கும் நபர்களாக வளர்க்காமல், மற்றவர்களைச் சார்ந்தவர்களாகவே வளர்க்கிறோம். ஒன்றும் தெரியாமல் வளர்ந்துவிட்டுப் பெரியவர்களான பிறகு தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசுகிறார்கள்.

சுதந்திரம் பற்றிப் பேசும் நாம், ‘தனிநபர்களாக’ சிறுவயதிலிருந்து அதற்கான திறன்களோடு வளர்க்கப்படுவதை உறுதிசெய்வதில்லை.

அதிகாரமே அச்சாணி

ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம். ஆனால், குடும்ப அமைப்பு தொடங்கிப் நாடாளுமன்றம்வரை நடைமுறை அப்படி இல்லை. ஒருபுறம் தேர்தல் பிரச்சாரத்தில் கணவனைப் பார்த்துக்கொண்டு மனைவி வீட்டில் இருக்க வேண்டியதுதானே என்கிறார்கள். ஆனால், வானளாவிய அதிகாரத்தோடு இருக்கும் பெண் தலைவர்களின் காலில் விழுந்து விழுந்து பணிகிறார்கள்.

ஆணோ பெண்ணோ இங்கு அதிகாரம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்கூட, பாலியல் இச்சையால் மட்டும் உந்தப்படுவதில்லை. நான் ஆண்; எனக்குப் பெண்ணின் உடல் மீது அதிகாரம் இருக்கிறது. நான் சொல்வதைக் கேட்டு ஒரு பெண் நடக்க வேண்டும் என்ற அதிகார வேட்கையோடுதான் செயல்படுகிறான்.

காலம் காலமாக அதிகாரத்துக்குப் பழகிப்போனது நம் சமூகம். ஆண் அதிகாரம் நிரம்பியவனாக இருக்கும்போது அவனுக்கு அடிபணிகிறார்கள். இதே ஒரு பெண் அதிகாரத்தின் உச்சத்தில் நிற்கும்போது, மண்டியிட்டுத் தன் அடிமைத்தனத்தை

நிரூபிக்க முயல்கிறார்கள். அதுகூட எதற்காக? அப்படி அடிமையாக இருந்து விசுவாசத்தின் மூலம் ஒரு அதிகாரத்தை அடைவதற்குத்தானே.

முரண்களில் சிக்கும் வாழ்வு

இந்தியா பாரம்பரியம் மிகுந்த நாடு என்கிறோம். ஆனால், அதில் நம்மைப் பின்னுக்கு இழுக்கக்கூடிய பல அம்சங்களைக் கொண்டாடுகிறோம். கூடவே, நாகரிகம் என்ற பெயரால் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் கூட்டிசைவாக இருக்கக்கூடிய சில அம்சங்களைக் கேள்வி கேட்கிறோம்; கேலி செய்கிறோம்.

பல்வேறுவிதமான கலாச்சாரங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட எலியாக வாழ்கிறோம் நாம்.

நமக்குள் இருக்கும் இந்த முரணை வாழ்வின் அன்றாடப் பழக்க வழக்கங்களிலிருந்து கோட்பாடுகள்வரை புரிந்துகொள்ள முயல வேண்டும். இதற்குத் திறந்த மனது வேண்டும். கலாச்சாரக் காவலர்களும் சரி; கலகக்கார முற்போக்குவாதிகளும் சரி இதைப் புரிந்துகொள்ளாதவரை சிக்கல்கள் தொடரும்.

பாலியல் சுதந்திரத்தைப் பேசும் படத்தை ஆதரிக்கும் நாம், நம் வாழ்வில் அத்தகைய சுதந்திரமான செயல்பாடுகளால் இன்னொருவரின் வாழ்வு பாதிக்கப்படுவதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

வளரிளம் பருவத்துப் பையன்கள் கிளர்ச்சியூட்டும் படங்களைப் பார்ப்பதை அந்த வயதின், உணர்வின் தேவை என்கிறோம். அத்தகைய காட்சிகளைப் பார்த்ததுதான் ஒரு பெண்ணைத் துய்ப்பதற்குக் காரணம் என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்? காலம் காலமாகச் சமூகத்தில் பெண்கள் மீதான வன்முறை நிகழ்ந்து வந்தது என்றாலும், மொபைல் போனின் வரவு பாலியல் காட்சிகளைக் காணவும் பாலியல் வன்முறை அதிகரிக்கவும் காரணம் ஆனது என்றால், அதை எப்படிக் கையாளப் போகிறோம்?

கட்டுப்பாடா, சுதந்திரமா?

ஒட்டுமொத்தச் சமூகமும் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. எந்தவித சுதந்திரமும் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியவில்லை. கட்டுப்பாடற்ற சுதந்திரமும் சுதந்திரம் இல்லாத கட்டுப்பாடும் ஆபத்தானவை.

நாம் சுதந்திரத்தையும் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தோடு இணைத்துப் பார்க்கிறோம். ஒழுக்கம் என்பதை எரிச்சலாகப் பார்ப்பவர்கள் ஒழுக்க மீறலை முற்போக்காகப் பார்க்கிறார்கள்.

தனிமனித வாழ்வில் அறத்தோடு இல்லாத ஒருவர் பொதுவாழ்வில் அறத்துடன் இருக்க முடியுமா? பொதுவாழ்வில் அறத்தோடு இருப்பவர் தனிமனித வாழ்வில் நேர்மையற்று இருக்க முடியுமா?

பொதுவாக, அதீத உணர்வுகளின் கலவையாக நாம் இயங்குகிறோம். இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது, மனைவியின் தாலியை விற்றுப் புத்தகம் போட்டார் என்று பெருமை பேசுகிறோம்.

அவர் உண்மையிலேயே மனைவி மேல் மரியாதையோடு இருந்தாரா? இருவரும் தாலியைப் பெரிதாக நினைக்காதவர் என்றால், எதற்குத் ‘தாலியையே விற்று’ என்று அதைப் பெரிதுபடுத்திச் சொல்ல வேண்டும்? ஒருநாள்கூட அலுவலகத்துக்கு விடுப்பு எடுக்காதவர் என்று ஒருவரைப் பாராட்டுகிறோம். ஆனால், அவர் தன் குடும்பப் பொறுப்பை முழுமையாகச் செய்தாரா இல்லையா என்ற கேள்வி வருவதில்லை.

அறத்துடன் அணுகுவோம்

இன்றைக்கு இந்தியா ஒரு சிக்கலான கட்டத்தில் நின்று கொண்டு இருக்கிறது. சிக்கலான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது என்று சொல்லவில்லை. நின்றுகொண்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஏனென்றால், காலம் காலமாக சாதி, மதம், இனம், வர்க்கம், பாலின பேதம் என இவையெல்லாம் நம்மை இயக்கும் அம்சங்களாக இருந்துவந்தாலும், இப்போது அவைதான் நம்மை ஆள்கின்றன. எல்லாம் நம் கையை மீறிப் போய்க்கொண்டே இருக்கின்றன. மதரீதியாக முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு நம்மை ஆள்கிறது.

வீடு வாடகைக்குக் கொடுப்பதிலிருந்து கிரிக்கெட் மேட்ச்வரை பிற மதத்தவரைச் சகித்துக்கொள்ளக்கூட முடியாதவர்களாகிக்கொண்டிருக்கிறோம். ஏழைகள் மீண்டும் ஏழைகளாகவும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் இருக்கும்படியாகத்தான் நம் பொருளாதாரக் கொள்கைகள் இயங்குகின்றன.

பள்ளிகள், தொலைத்தொடர்பு, வங்கிகள் எனத் தனியார் மயமாக்கலை ஆரம்பத்தில் கொண்டாடிய நாம், இவையெல்லாம் நம்மை நேரடியாக பாதிக்கும்போது மட்டும் புலம்புகிறோம்.

துண்டு துண்டாகப் பார்ப்பதல்ல வாழ்வு. ஒட்டுமொத்த அம்சங்களையும் இணைத்துப் பார்த்து அதிலிருந்து ஒவ்வொரு துறையும்/அம்சமும் எப்படி அணுகப்பட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

வாழ்க்கைக்கான மதிப்பீடுகள் வேண்டும். எப்படி வேண்டுமானாலும் வாழ்வதல்ல வாழ்வு; இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அறத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும்.

உரையாடத் தொடங்குவோம்

கலாச்சாரக் காவலர்கள் சொல்லும் ஒழுக்க நியதி அல்ல அறம் என்பது. ஏனென்றால், ஒழுக்கம் என்றவுடன் ஒழுக்க மீறல் என்ற கலகத்துடன் இயங்க முற்படுகிறோம். அறம் என்பது நாம் எப்படி வாழ்க்கையை அணுகப்போகிறோம் என்பதற்கான மதிப்பீடு. வாழ்வுக்கான நோக்கமும் வேண்டும்; எப்படி வாழ வேண்டும் என்ற பார்வையும் வேண்டும். இதுதான் நம் அறம்.

அறச்சீற்றம் கொள்ள நம்மைச் சுற்றி நடப்பவை பற்றி

ஒட்டுமொத்தப் புரிதல் வேண்டும். நம் சீற்றம் தேர்ந்தெடுத்த அம்சம் ஒன்றில் மட்டும் இருக்க முடியாது. ஊழல் பற்றிப் புலம்புபவர்கள்,

தாம் இயங்குகின்ற தளங்களில் உள்ள ஊழலையும் புரிந்துகொள்ளும் திறனோடு இருக்க வேண்டும்.

 இதற்குத் தேவை வெளிப்படையான உரையாடல். எல்லா விஷயங்கள் பற்றியுமான உரையாடல் தேவை. உரையாடினால்தான் கேள்விகள் பிறக்கும்; புரிதல் விரிவுபடும்; கோளாறுகள் புலப்படும்; தேர்வுகள் பிடிபடும். இன்னும் பேச வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொரு சமயத்தில் உரையாடுவோம். இப்பொழுது உங்களுக்குள் உங்களது அறம் பற்றி உரையாடத் தொடங்குங்கள்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x