Published : 27 Apr 2014 12:00 AM
Last Updated : 27 Apr 2014 12:00 AM
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதின் உண்மையான பொருள், நல்லவை நடப்பதும் பெண்ணாலே, தீயவை அழிவதும் பெண்ணாலே என்பதுதான். மதிநுட்பத்திலும், நுண்ணறிவிலும் பெண்கள் திறமை படைத்தவர்கள். மேன்மை, அறிவு, பணிவு முதலிய குணங்கள் இயற்கையிலேயே அமையப்பெற்றவர்கள்.
சங்க காலத்தில் மகளிருக்கு முழு உரிமை தரப்படவில்லை என்றாலும், அதையெல்லாம்
கடந்து அவர்கள் அந்தக் காலத்திலேயே பல்துறைகளில் சிறந்தோங்கி சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியது போலவே தமிழிலும் புலமை மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஆனாலும், புலவன், கவிஞன் என்ற ஆண்பாற் சொற்களுக்கு இணையான பெண்பாற் சொல் தமிழில் இல்லாமல் போனது நமக்கு வியப்பை அளிக்கிறது.
சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் சிறப்பை நாம் நினைவுக்கூர்வதன் வாயிலாகவும், அவர்களின் மொழித் திறன், அறிவுத் திறன் ஆகியவற்றை ஆய்வதின் மூலமாகவும் பல விவரங்களைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.
சங்ககாலப் பெண்கள் அறம், மறம், காதல், இன்பம், இயற்கை இவற்றோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். அவர்கள் கல்வியறிவு பெற்றிருந்ததால் படைப்பாளிகளாகத் திகழ்ந்ததோடு பெண்களின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளனர். அகப்பாடல்களின் ஆணிவேர்களாகவும் பெண்கள் திகழ்ந்துள்ளனர். தலைவி, தோழி, விறலி, நற்றாய், செவிலித்தாய் என்று பெண்மையின் மீது கட்டமைக்கப்பட்ட அகப்பாடல்களையே பெரும்பாலும் காண முடிகிறது.
குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சங்ககாலத்தில் 50 பெண்பாற்புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இந்த 50 பெண்பாற் புலவர்களும் 5,000 புலவர்களுக்கு சமமானவர்கள் என்று கருதப்படுகிறது.
ஔவையார் என்ற அறிவு மேதை
இலக்கிய வரலாற்றில் ஐந்து ஔவையார்கள் இருந்தனர். சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு முருகப் பெருமானால் ஞானமூட்டப்பட்ட புராண ஔவையார். அதற்குப் பிறகு கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமானுக்கு அமைச்சராகவும், தூதராகவும் திகழ்ந்தவர் புறநானூற்று ஔவையார். இதன் மூலம் புறநானூற்றுக் காலத்திலேயே பெண்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் மன்னர்கள் மதிப்பளித்துச் சிறப்பித்திருக்கிறார்கள் என்பதை உணரலாம்.
ஔவையார் பாடிய பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமானவையாக உள்ளன. திருவள்ளுவர் இரண்டு வரிகளில் குறள் எழுதினார். ஔவையார் ஒரே வரியில் ஆத்திசூடி பாடினார். ‘அறம் செய்’ என்று கட்டளையிடாமல், ‘ அறம் செய விரும்பு’ என்று பாடிய பெருந்தகை ஔவை மூதாட்டி.
தமிழனுக்கு நீதி, அரசியல், வாழ்வியல், காதல், வீரம், ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுத் தந்து, அதன் வழி நடக்கச் சொன்னவர்கள் ஔவையார்கள்.
ஔவையார், வீரத்தையும் கொடையையும் மட்டும் பாடவில்லை. காதலையும் அறத்துடன் கலந்து பாடியிருக்கிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஔவையார் மட்டும் 59 பாடல்களைப் பாடி மற்றவர்களை விஞ்சி நிற்கிறார்.
சங்க இலக்கியப் பெண்பாற்புலவர்கள் பெண்மையை உயரிய ஆளுமையின் அடையாளமாகவும், நுட்பமான அறிவுணர்வின் அடையாளமாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், தனித்துவத்துடன் தன்னுணர்வினை அழகாகத் திறத்தோடு வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் திகழ்ந்தனர்.
‘வீரம் என்பது ஆணுக்கு மட்டுமன்று, பெண்ணுக்கும் உரியது’ என்று போர்ச் செய்திகளைப் பாடிய திறமும் மன்னனுக்கு ஆலோசனை கூறி, தூதுவராகச் சென்றதும் வலிமையான சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் திறமையான ஆளுமைப் பதிவுகள். சங்க காலத்தைப் பெண்களின் சுதந்திரமான பொற்காலம் என்று கூறலாம்.
ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார்,
பாரி மகளிர், வெண்ணியக் குயத்தியர், வெள்ளி வீதியார், பொன் முடியார், பூதபாண்டியன் தேவியார் போன்ற பெண்பாற்புலவர்களின் பாடல்கள் தமிழுக்கும், தமிழனுக்கும் கிடைந்த அறிவுச் சுரங்கமாகத் திகழ்கின்றன.
தமிழர்கள் தமக்குப் பெருமை சேர்க்கும் பெண்பாற்புலவர்களின் கவிதை மற்றும் கருத்து குவியல்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT