Published : 15 Nov 2025 05:01 PM
Last Updated : 15 Nov 2025 05:01 PM

விளையாட்டுப் போட்டியை வென்ற கர்ப்பிணிப் பெண்

ஆந்திரப் பிரதேசத்தில் அக்டோபர் மாதம் நடைபெற்ற அகில இந்திய காவல் பளுதூக்குதல் போட்டியில், டெல்லியைச் சேர்ந்த 31 வயதான சோனிகா யாதவ், 145 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்! ஏழு மாதக் கர்ப்பிணியாக இந்த வெற்றியைப் பெற்றிருப்பதால், சமூக வலைதளங்களில் பேசுபொருளானார்.

யார் இந்த சோனிகா? 2014இல் டெல்லி காவல் துறையில் பணியாற்றத் தொடங்கினார் சோனிகா. 2016இல் திருமணம், 2017இல் முதல் குழந்தை பிறப்பு போன்ற நிகழ்வுகளால் தன்னுடைய காவல் பணியில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.

பின்னர், 2019இல் கபடி வீராங்கனையாகத் தனது விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கினார். அப்போது உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது பளுதூக்குதலில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து அதில் பயிற்சி மேற்கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டார். 2023இல் நடைபெற்ற டெல்லி மாநில பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

சவால் நிறைந்த பயணம்: பளுதூக்குதல் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த அவர், 2025ஆம் ஆண்டில் நடைபெற இருந்த அகில இந்திய காவல் பளுதூக்குதல் போட்டிக்குத் தன்னை தயார்ப்படுத்தி வந்தார். ஆனால், மே மாதத்தில்தான் கருவுற்றிருப்பது அவருக்குத் தெரியவந்தது. அவரது குடும்பத்தினர் போட்டிகளில் பங்கேற்க வேண்டாமெனச் சொன்னபோதும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார் சோனிகா.

கர்ப்பிணியாக இருக்கும்போதே போட்டியில் பங்கேற்கத் தயாரானார். இதுபோல இதற்கு முன்பு கர்ப்பகாலத்தில் இருந்த பெண்கள் யாரேனும் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்துள்ளார்களா என்று தேடிப் பார்த்தார். அப்போது லூசி மார்ட்டின்ஸ் என்கிற சர்வதேச விளையாட்டு வீராங்கனை இதே போல பளுதூக்குதலில் பங்கேற்று, சாதித்துள்ளதை அறிந்துகொண்டார். இதனால் அவரிடமும், மருத்துவரிடமும் முறையான பயிற்சி ஆலோசனைகளைப் பெற்றார் சோனிகா.

இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவளின் கனவுகளுக்கும், திறமைகளுக்கும் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதை நிரூபித்துள்ளார். உறுதியும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அவரது வெற்றி உணர்த்தியுள்ளது.

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவர் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், கர்ப்பகால நீரிழிவும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் சில சிக்கல்களும் குறையலாம். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க மகப்பேறு மருத்துவர்கள் கல்லூரி (ACOG) மருத்துவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

- அ.பவித்ரா, பயிற்சி இதழாளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x