Published : 09 Nov 2025 11:01 AM
Last Updated : 09 Nov 2025 11:01 AM
‘அதர்ஸ்’ தமிழ்ப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது யூடியூபர் ஒருவர், “ஒரு காட்சியில் நாயகியைத் தூக்கி இருக்கிறீர்கள். அவர் உடல் எடை எவ்வளவு?” என்று கேட்டார். இணைய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த கௌரி கிஷண், இந்தக் கேள்வியைக் கண்டித்திருந்தார்.
இந்நிலையில் ‘அதர்ஸ்’ படத் திரையிடலைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நவம்பர் 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, அந்த யூடியூபர் கௌரி கிஷண் கண்டித்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்குப் பதிலளித்த கௌரி கிஷண் அந்தக் கேள்வி முட்டாள்தனமானது எனவும் தன்னை உருவக்கேலி செய்வதுபோல் இருப்பதாகவும் வாதிட்டார். முந்தைய செய்தியாளர் சந்திப்பின்போது பாதியிலேயே வெளியேற நினைத்ததாகவும் படத்துக்காக அமைதி காத்ததாகவும் சொன்னார்.
கௌரி கிஷண் என்ன சொல்ல வருகிறார் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் தான் கேட்ட கேள்வி சுவாரசியமானது, அதை கௌரி புரிந்துகொள்ளவில்லை என அந்த யூடியூபர் தொடர்ந்து வாதிட்டபடியே இருந்தார். முழுக்கமுழுக்க ஆண்களே நிறைந்திருந்த அந்த அரங்கில் ஒற்றைப் பெண்ணாகத் தனித்திருந்த கௌரி, கொஞ்சமும் அசராமல் துணிவோடு அந்தச் சொற்தாக்குதலை எதிர்கொண்டார். அவரை மன்னிப்புக் கேட்கும்படிச் சொன்னபோது உறுதியாக அதை மறுத்தார். இப்படி ஒரு அபத்தமான கேள்வி நகைச்சுவையாக எப்படிக் கடக்க முடியும் என்று கேட்டதோடு பெண்கள் உருவக்கேலி செய்யப்பட்டால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.
ஒருவேளை கௌரி தன் எடையைச் சொல்லியிருந்தால், தனது அற்பமான கேள்வி குறித்து அந்த யூடியூபர் அறிந்துகொள்ளாமலே போயிருப்பார். அந்தப் படத்தில் கௌரியின் கதாபாத்திரம் குறித்தோ அவரது நடிப்பு குறித்தோ ஒரு கேள்விகூடக் கேட்கப்படவில்லை என்று கௌரி சொன்னதை அங்கிருந்தவர்கள் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.
திரைப்படத் துறையில் இதெல்லாம் இயல்புதான் எனவும் இதுபோன்ற கேள்விகளைத் தொடர்ந்து தான் கேட்டுவருவதாகவும் ‘பெருமை’யோடு அந்த யூடியூபர் குறிப்பிட்டார். திரைத்துறையில் செயல்படும் பெண்களைக் கீழ்த்தரமாக நினைக்கும் சிந்தனையின் வெளிப்பாடுதான் இதுபோன்ற அணுகுமுறையும் அபத்தமான கேள்விகளும். இன்று நேற்றல்ல; நடிகை என்றாலே உடலமைப்பைப் பற்றிக் கேட்பதும் இரட்டை பொருள்படும்படி பேசுவதும் எழுபதைத் தாண்டிய ‘கதாநாயக’னிடம் அவரது ஆளுமையைப் பற்றி வியப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.
கௌரி தனி ஆளாக அந்த அரங்கத்தில் பேசிக் கொண்டிருக்க அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குநரும் நடிகரும் சபை நாகரிகம் கருதிக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை. கௌரியின் கருத்தை ஆதரிக்க வில்லையென்றாலும்கூட, மோசமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்களை நிறுத்தச்சொல்லக்கூட முயலவில்லை. தங்களோடு பணிபுரிந்த சக நடிகையிடம் குரல் உயர்த்திச் சிலர் கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் அமைதியாக இருந்தது இந்தச் சமூகத்தின் மரத்துப்போன மனநிலையைக் காட்டுகிறது. ஒரு பெண்ணின் கண்ணியத்தைவிடவா ஒரு திரைப்படத்தின் வெற்றி முக்கியம் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
அந்த அரங்கில் கௌரி கிஷண் தனித்து நின்றாலும் திரைத்துறையைச் சார்ந்த பலரும் கௌரியின் பக்கம் நின்றனர். பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் அந்த யூடியூபருக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்தன. நடிகைகள் குஷ்பு, ரோகிணி, பாடகி சின்மயி, பார்வதி, ரஜிஷா விஜயன் உள்படப் பலர் கௌரி கிஷணுக்கு ஆதரவு தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் மலையாள நடிகர் சங்கமும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளன.
சாதாரணமான கேள்வி? -இதற்கிடையே அந்த யூடிபர் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்கூடத் தான் கேட்ட கேள்வியின் அபத்தத்தை அவர் உணர்ந்துகொள்ளாத வகையில் ஆணாதிக்கச் சிந்தனை மிக வலுவாக இந்தச் சமூகத்தில் வேரோடிப்போயிருக்கிறது. தான் எழுப்பியது மிகச் சாதாரணமாக கேள்வி எனவும் எல்லாப் பத்திரிகையாளர்களும் நடிகைகளிடம் இப்படியான கேள்விகளைத்தான் கேட்பார்கள் எனவும் தன் தரப்புக்கு நியாயம் சேர்க்கும் தொனியில் பேசியிருக்கிறார்.
தன் கேள்வி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். உண்மையில் நடிகைகளைப் பற்றிய பயோடேட்டா என்பது வேறு, செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்படும் கேள்வியின் தொனியும் கோணமும் வேறு என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும்கூட இதை கௌரி கிஷண் நகைச்சுவையாகவும் இயல்பாகவும் கடந்துவிட வேண்டுமென்பதுதான் யூடியூபரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து கௌரி கிஷண் வெளியிட்ட அறிக்கையில், ‘இதுபோன்ற கேள்விகளை ஆண் நடிகரிடம் இவ்வளவு கடுமையாகக் கேட்டிருப்பார்களா என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது கௌரி கிஷணின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. பொதுவெளியில் இயங்கும் ஒவ்வொரு பெண்ணும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதுபோன்ற கேள்விகளை எதிர்கொண்டுவருகிறார்கள். அது திரைத்துறை என்கிறபோது, அதன் எல்லை நாம் எதிர்பார்க்காததாக இருக்கிறது. ஒரு பெண்ணை, அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவதற்கு எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம் என்கிற கேள்வியைத்தான் கௌரி தன் உறுதியான நிலைப்பாட்டின் மூலம் இந்தச் சமூகத்திடம் கேட்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT