Published : 28 Sep 2025 07:43 AM
Last Updated : 28 Sep 2025 07:43 AM
ஏன் இந்த வாழ்க்கையில் காதல் என்பது எப்போதும் நிச்சயமற்றதாக இருக்கிறது? ஏன் திருமண வாழ்க்கையில் தொடர்ச்சியாக இணையரைக் காதலிக்க முடிவதில்லை? காதல் வேறு, திருமணம் வேறா? இத்தனை கேள்விகளையும் பெண்ணியப் பார்வையில் முன்வைக்கிறது ‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மெட்ரோ இன் தினோ’ என்கிற இந்திப் படம்.
ஒரு நீடித்த திருமணத்துக்குத் தூணாக இருந்த பெண்களின் தியாகங்களையும் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும் இந்த நவீன மெட்ரோ வாழ்க்கையில் பெண்கள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை மிக நுட்பமாக அலசுகிறது இந்தத் திரைப்படம் “எனக்குத் தெரியாது என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். இறுக்கிப் பிடிக்கிற அவரின் டி ஷர்ட்டுகளும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களும் மணிக்கணக்கில் குளியலறையில் கைபேசியுடன் தாழிட்டுக்கொள்வதெல்லாம் எனக்குப் புரியாதா?” என்கிறாள் ஒரு மனைவி.
தன் தோழியுடன் உடலளவில் பெரிதாகத் தொடர்பில்லாதபோது, அது தன் மனைவிக்குச் செய்யும் துரோகம் அல்ல என்று தன் மனதின் துரோகத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறான் அவளுடைய கணவன். காதலில்லாத அவனுடன் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய கட்டாயம் மனைவிக்கு. அவளின் படிப்போ, பெரும் பதவிகளோ தொழில்முனைவுத்திறனோ அவளது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கவில்லை.
கல்லூரி நண்பர்களின் ரீயூனியனுக்குச் செல்வதற்குக் கணவனின் அனுமதியை எதிர்பார்த்து நிற்கும், தன் இளமைக்காலக் கனவுகளைத் தொலைத்த, திருமணத்துக்குப் பிறகு மதிப்பிழந்த, மற்றொரு பெண், “ஹால் சுவரில் இருக்கும் பழைய ஒளிப்படம் திடீரென்று காணாமல் போய்விட்டால் யாருக்கும் தெரியப்போவதில்லை, அது போலத்தான் நானும்” என்கிறாள்.
“நீ செய்தால் நானும் செய்வேன்” என்று போட்டி போடும் மற்றொரு பெண்ணால், காமத்தின் பொருட்டு ஆணைப்போல மற்றொரு இணையிடம் ஒன்ற முடியவில்லை. கணவனை இன்னும் காதலிக்கிறாள். ஓர் ஆணின் வாழ்க்கையில் கூடவே பயணப்பட்டாலும், இந்தப் பெண் கதாபாத்திரங்கள், தன்னுடைய உணர்வுகளின் எடையை அவர்களே சுமக்கிறார்கள்.
காலம்காலமான கட்டுப்பாடுகளைக் கேள்வி கேட்பது, துரோகங்களை எதிர்கொள்வது, சுயநலமுள்ள கோழையான இணையின் அறிவுறுத்தல்களை மீறித் தங்கள் கண்ணியத்தைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வது, அலட்சியங்கள் தங்களைக் குறுகவைத்தாலும் தங்கள் மதிப்பை மீட்டெடுப்பது எனத் தங்களது இருப்பைப் போராட்டங்களுக்கு நடுவில்தான் இந்த மெட்ரோ பெண்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இருப்பினும், திருமணத்துக்குப் பிறகு குற்றுயிராகிவிடும் தங்கள் காதலைப் பிழைக்கவைப்பதற்கான நம்பிக்கையையும் இந்தப் பெண் கதாபாத்திரங்கள் கொண்டிருக்கின்றன.
தன் கணவன் வேறு பெண்களைப் பார்க்கிறான் எனத் தெரிந்ததும், ‘டேட்டிங்’ செயலியில் கணவன் பங்கஜ் திரிபாதியுடன் தன் அடையாளத்தை மறைத்து சாட் செய்து, அவனை ஹோட்டல் அறைக்கு அழைத்து அவமானப்படுத்தும் கொங்கனா சென், மனைவியை இழந்த தன் கல்லூரி நண்பன் வீட்டுக்குச் சென்று, அவனைத் திருமணம் புரிந்துகொண்டதுபோல நடிக்கும் நீனா குப்தா, நிச்சயிக்கப்பட்ட காதலன் மீது ஈர்ப்பில்லை எனத் தெரிந்து அந்தத் திருமணத்தைக் கைவிடும் சாரா அலிகான் என அனைவரும் ஒரு படி மேலே சென்று இப்படியும் இருக்கலாம் எதிர்காலப் பெண்கள் என்று உணர்த்துகிறார்கள். இதனால் எல்லாம் பெண்களின் கண்ணியம் குறைந்துவிடப்போவதில்லை என்று புதிய விதிகளை வகுக்கிறார்கள்.
காலங்காலமாகப் பெண்களுக்குக் கண்ணியம் என்று வரையறுக்கப்பட்டவை மீறப்படும்போது, அவள் மீது கல்லெறியும் இவ்வுலகத்தை இப்போது கேள்வி கேட்கத்தொடங்கி இருக்கிறாள், சராசரி மெட்ரோ பெண் என்கிறது இந்தத் திரைப்படம். ஆண்களால் வடிவமைக்கப்பட்ட சட்டதிட்டங்களின் எல்லையைத் தாண்டும்போது அவமானப் படுத்தப்படும் பெண்கள் இப்போதெல்லாம் தங்களையே குற்றவாளியாக நினைத்துக் கூனிக்குறுகுவதில்லை. அது, தன் விருப்பம், தன் உணர்வு; அவை மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள் மெட்ரோ பெண்கள். இவை ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் நடைமுறைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT